இளைஞர்களின் மனசாட்சி!
ஆதவன் (கே.எஸ். சுந்தரம்)21 மார்ச் 1942 - 19 ஜூலை 1987ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகமுக்கியமான சக்தியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் இளைஞர்கள். அவர்களைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் செய்யப்பட்ட பதிவுகள் மிகவும் குறைவு. இளைஞர்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், தோல்விகள், வருத்தங்கள், குழப்பங்கள் என்று அத்தனையையும் பதிவு செய்த எழுத்தாளர் ஆதவன். கே.எஸ். சுந்தரம் என்பது இவரது இயற்பெயர். கல்லிடைக்குறிச்சியில் பிறந்த சுந்தரம், தில்லியில் பணியாற்றினார். ரயில்வே துறையிலும், நேஷனல் புக் டிரஸ்டிலும் பதிப்பாசிரியப் பணியில் இருந்தவர். ஆதவன், குழந்தை எழுத்தாளராக அறிமுகமானது 'கண்ணன்' இதழில். பின்னர், தமிழின் முக்கியமான அத்தனை இதழ்களிலும் தமது சிறுகதைகளால் அலங்கரித்தார். அரசியல் மாற்றங்களாலும், சமூக மாற்றங்களாலும் பல்வேறு மனச்சிக்கல்களை இளைஞர்கள் 1960கள் முதல் சந்தித்து வருகிறார்கள். தலைநகரான டில்லியில் பெரும் மாற்றங்கள் அப்போது நிகழ்ந்தன. பழைய மதிப்பீடுகள் சரிந்து புதிய மதிப்பீடுகள் உருவான நேரம் அது. தாம் வாழ விரும்பும் விதத்துக்கும் யதார்த்த நிலைக்கும் உள்ள இடைவெளி, இளைஞர்களை மிகவும் துன்பப்படுத்தியது. பெருநகர இளைஞர்களில், மனரீதியாக தொடங்கிய இந்த 'விலகலு'க்குப் பெயர் 'அந்நியமாதல்'. அது படிப்படியாக தற்போது ஊரகப் பகுதியிலுள்ள இளைஞர்கள் வரை வந்துசேர்ந்துவிட்டது.அத்தகைய இளைஞர்களை அன்றும் சரி, இன்றும் சரி, எந்தப் படைப்பும் அனுதாபத்தோடு பார்த்ததில்லை. அக்கறையோடு அவர்களது மனக்குறைகளை முன்நிலைப்படுத்தியதில்லை. இளைஞர்களை உற்சாகத்தின் சின்னமாக, குதூகலத்தின் அறிகுறியாக மட்டுமே பார்த்தார்கள். அவர்களது வலிகளும் வேதனைகளும் எந்த ஊடகத்திலும் வெளிவந்ததில்லை. குறைந்தபட்சம் இந்திய அளவில் இது நடைபெறவில்லை.தமிழ்ப் படைப்புகளில் முதல் முறையாக இத்தகைய குழப்பத்தால் சிதறுண்டு போன இளைஞர்களை அக்கறையோடு, அனுசரணையோடு எடுத்துச் சொன்ன பெருமை ஆதவனுக்கே உண்டு. தமிழ் வாசகர்கள் முதன்முறையாக புதுமையான இளைஞர்களை, ஆதவன் படைப்புகளில் பார்த்தார்கள். தங்களோடு அவர்களை இனங்கண்டுகொண்டு, கொண்டாடினர்.இளைஞர்களின் மனங்களை துல்லியமாக படம்பிடித்த ஆதவன், காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல, இளைஞர்களின் மனசாட்சியும் கூட. பவளவிழா காணும் ஆதவனுக்கு, 'சாகித்ய அகாதமி' விருது 1987இல் அவரது மறைவுக்குப் பிறகு வழங்கப்பட்டது.முக்கிய படைப்புகள்என் பெயர் ராமசேஷன்காகித மலர்கள்முதலில் இரவு வரும்இரவுக்கு முன் வருவது மாலைபுழுதியில் வீணை