உள்ளூர் செய்திகள்

கண் கவரும் புள்ளி ஆந்தை!

ஆந்தைகளில் பலவகை உண்டு. அதில் ஒன்று புள்ளி ஆந்தை. இதன் கண்ணைப் பார்த்து அசராதவர்கள் யாரும் இருக்க முடியாது. உண்மையில் 'திருட்டு முழி' என்றால், புள்ளி ஆந்தையின் கண்களைத்தான் சொல்ல வேண்டும். சிறிய அளவிலான உடலமைப்போடு காணப்படும் பறவை இது.பாம்புகளும் மண்புழுக்களும் எப்படி விவசாயிகளுக்கு நண்பனோ, அதேபோன்றதுதான் ஆந்தைகளும். பகலில் ஓய்வெடுத்து, இரவில் அதன் உணவான எலிகளை வேட்டையாடும். அதைத் தவிர, தவளை, ஓணான், பல்லி போன்றவற்றையும் வேட்டையாடும்.புள்ளி ஆந்தைகள் உருவத்தில் சிறியது. வட்ட முகம். உடல் நிறம் பழுப்பு; அதன்மேல் சாம்பல் நிற புள்ளிகள் காணப்படும். இரவுநேரப் பறவை என்பதால், கண்கள் அதற்கேற்றவாறு அமைந்திருக்கும். கண்ணில் மஞ்சள் திட்டுக்கு நடுவில் கறுப்பு நிறத்தில் உருட்டும் விழிகள் இருக்கும். இரவில் பார்வை தெளிவாகத் தெரிவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். ஆனால், சிலர் ஆந்தையின் கண்ணைப் பார்த்து அச்சப்படுவார்கள். புள்ளி ஆந்தைகளின் நகங்கள் கூர்மையானவை. எலிகளையும் தவளைகளையும் வேட்டையாடுவதற்கு ஏதுவானவை. ஓர் இரவில் 7 முதல் 8 எலிகளையாவது பிடித்து உண்ணும். அதனால் தான் நாம் ஆந்தைகளை 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கிறோம். புள்ளி ஆந்தைகள் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். இவை மிகவும் ஒழுங்குமுறையோடு வாழும். தனக்கு எது தேவையோ அதை மட்டும் பெறுவதற்கு முயற்சி எடுக்கும். ஓர் எல்லையை நிர்ணயம் செய்துகொண்டு, அதற்குள் உணவு தேடும், இனப்பெருக்கம் செய்யும், கூடு கட்டும். நாளுக்கு நாள் ஆந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. நம்மால் இயன்ற அளவு சின்னச்சின்ன விஷயங்களைச் செய்தால், ஆந்தைகளைப் பாதுகாக்க முடியும்.என்ன செய்யலாம்? 1. விவசாய நிலங்களில், எலி மருந்தைத் தெளிக்கக் கூடாது2. நிலத்தில் நச்சுப்பொருட்களைத் தூவ வேண்டாம்3. வெயிலின் போது, தண்ணீர் வைக்கலாம்4. மரங்களை வெட்டாதீர்கள்5. ஆந்தைகள் பற்றி இருக்கும் மூடநம்பிக்கைகளைக் கைவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !