உலகிலேயே மிகப் பெரிய பூ!
உலகில் உள்ள பூக்களிலேயே மிகப்பெரிய பூ எது தெரியுமா? 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia Arnoldii) என்ற மலர்தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளதில் பெரிய மலர். ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை வரையும் இருக்கக்கூடிய இம்மலர், சுமார் நான்கு கிலோ தேன் தாங்கி இருக்கும்.பார்ப்பதற்கு பெரிய மலர் என்றாலும், இதன் வாசனை நம்மை ஓடஓட விரட்டும். இந்த மலர் சிதைவடையும்போது, அழுகிய நாற்றம் அடிக்கும். பிணவாடை அடிக்கும் என்பதால், இதனை 'பிண மலர்' (Corpse Flower - கார்ப்ஸ் ஃபிளவர்) என்றும் அழைப்பார்கள். மகரந்தங்களை உருவாக்கும் ஆண் மலர், விதைகளைத் தயாரிக்கும் பெண் மலர் என, இதில் இரண்டு வகை உண்டு. பூ பூக்கும்போது, 'பிளுபாட்டில்' எனப்படும் ஒருவகை ஈ மொய்த்து அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, மகரந்தத்தைத் தந்ததும் ஆண் மலரும், விதைகளை உருவாகியதும் பெண் மலரும் வாடி மக்கி மறைந்துவிடும். அப்போதுதான் தாங்க முடியாத பிணவாடை, துர்நாற்றம் வீசும். பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்! அத்தி மரத்தில் பூவே தெரியாது என்றால், இந்தத் தாவரத்தில் பூவைத் தவிர எதுவும் கண்களுக்குப் புலப்படாது. மலர்தான் பெரிதே தவிர, தாவரம் கண்ணுக்கே தெரியாது; இதன் இலைகள், தண்டு, வேர் என எந்தப் பகுதியும் கண்களுக்குத் தெரியாத அளவு நுண்ணியவை. ஐந்து மலரிதழ்கள் கொண்ட மலர் மட்டுமே வெளியே தெரியும். இந்தத் தாவரத்திற்கு இலைகளே இல்லை. நூல் போன்ற வேர் அமைப்பு மட்டுமே உண்டு. இதன் வேர்க்கால்களும் உணவு தயாரிப்பதில்லை. நுணுக்கமான இலைகள் மட்டுமே உடையது என்பதால், இலைகள் வழியும் உணவு தயாரிப்பதில்லை. இது ஓர் ஒட்டுண்ணித் தாவரம். இதன் அருகில் வளரும் 'ஸீயானா' போன்ற தாவரங்களின் வேர்களோடு பிணைந்து, அந்தத் தாவரம் தயாரிக்கும் உணவைத் திருடி கொழுக்கும். ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும்.இந்த தாவரம் தாவரமா, இல்லை ஒருவகை பூஞ்சனமா என, தொடக்கத்தில் தாவரவியலாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. 2007ல் தான் இந்தத் தாவரம் ஆமணக்கு போன்ற கள்ளிவகை தாவரம் என்பது உறுதியானது. சிங்கப்பூரை நிறுவிய இயற்கை ஆய்வாளர் சர் ஸ்டாம்போர்டு ரஃபெலேஸ், 1818ல் டாக்டர் ஜோசப் ஆர்னால்டு என்பவருடன் இணைந்து ஆய்வுகள் செய்து, இந்தத் தாவரத்தை இனம் கண்டார். எனவேதான் இந்த தாவரம் ரஃப்லேசியா அர்னால்டி என்று அழைக்கப்படுகிறது. சுமத்திரா, மலேசியா, போர்னியோ பகுதிகளில் விரவியுள்ள ரஃப்லேசியாவில் 16 வகைகள் உண்டு.