உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் செல்ல மகள்

இயற்கையால் சூழப்பட்ட சிறிய நகரம் வால்பாறை. கோவை மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதியில் இருக்கிறது, வால்பாறை. கடல்மட்டத்திலிருந்து 3,500 அடிகள் உயரமுடையது. தமிழகத்தில் 'மலைகளின் அரசி' உதகை என்றும், 'இளவரசி' கொடைக்கானல் என்றும் கூறுவர். வால்பாறையைத் 'தமிழக மலைகளின் செல்லமகள்' என்று அழைக்கலாம். மாவட்டத் தலைநகரான கோவையிலிருந்து ஒரு மணிநேரத்தில், பேருந்தில் பொள்ளாச்சியை அடையலாம். பொள்ளாச்சியிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறு அணைத்தேக்கம் உள்ளது. கேரளத்திற்குச் சென்று வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்த அவ்வணை கட்டப்பட்டது. ஆழியாறு அணைக்கரையில் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையழகில் மனஅமைதி பெறுவதற்காக, சிலர் ஆசிரமங்களை அமைத்து, மனவளக்கலை வளர்க்கின்றனர். ஆழியாறு அணையைச் சுற்றி, சாலைகள் யாவும் வால்பாறையை நோக்கி மலையேறுகின்றன. பொள்ளாச்சியிலிருந்து 62 கி.மீ. தூரத்தில் உள்ளது வால்பாறை. ஆழியாறு கீழிருந்து 40 கொண்டையூசி வளைவுகளைக் கடந்து சென்றால், வால்பாறை மலைப் பகுதியை அடையலாம்.தமிழகத்தில் புலிகளுக்கான சரணாலயம் வால்பாறை வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்திரா காந்தி தேசிய வன உயிரியல் பூங்கா என்று அதற்குப் பெயர். மலையேறும்போது, ஆழியாறு அணையின் பேரழகை மேலிருந்து ரசிக்க முடியும். வழியெங்கும் நீர்ச்சுனைகளும் ஓடைகளும் சலசலத்து ஓடும். அவற்றைக் கடந்து சென்றால், குரங்கு அருவி என்ற அருவிப்பகுதி வருகிறது. தண்ணீர் நன்கு கொட்டும்போது, குரங்கு அருவியில் குற்றால அருவிக்கு நிகரான குளியல் போடலாம். குரங்குகள் மிகுந்திருக்கும் பகுதி என்பதால், குரங்கு அருவி என்ற பெயர் வந்தது. ஆனால், குரங்கு அருவியில், எப்போதும் தண்ணீர் இருக்கும் என்று சொல்ல முடியாது. கொண்டையூசி வளைவுகளில் ஏறிச்சென்றபடியே இருந்தால், அதில் ஒன்பதாம் கொண்டையூசி வளைவில், காட்சிமுனை (வியூ பாயின்ட்) அமைந்திருக்கிறது. அங்கிருந்து ஆழியாறு அணையை முழுவதுமாகப் பார்க்கலாம். மலைவிளிம்பிலிருந்து மண்ணைக் காண்பதுதான், மகத்தான காட்சியின்பம். அப்பகுதிகளில் யானைகளின் குறுக்கீடுகளும் இருக்கும்.மலையேறி முடிந்ததும், 'அட்டகட்டி' என்ற சிற்றூர் வருகிறது. அட்டகட்டியில் வால்பாறைத் தேநீரைக் கொஞ்சம் பருகிவிட்டு, மேலும் ஏறினால், மலைமுடி (உச்சி) தீர்ந்து மலைமடிப்புகளில் செல்ல வேண்டும். ஓரிடத்தில் ஆங்கிலேயக் கனவான் கார்வர் மார்ச் என்பவருக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவர்தான் வால்பாறையைத் தேயிலைத் தோட்டம் ஆக்கியவர். காலமாற்றத்தால், இன்று அவர் காட்டின் அழிப்பாளராகக் கருதப்படுகிறார். அந்த சிலைக்கு அருகில் இருந்து பார்த்தால், மலைத்தொடர்களுக்கு அப்பால் உள்ள பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்தைக் காணமுடியும். மலைத்தொடர்களிலேயே தொடர்ந்து சென்றால், வால்பாறை நகரம் வருகிறது. ஒரு திரையரங்குகூட இல்லாத தமிழக தாலூகா வால்பாறைதான். இன்றும் வால்பாறையில் ஒன்றிரண்டு எரிநெய்ச் சாவடிகளே (பெட்ரோல் பங்க்) உள்ளன. வால்பாறை நகராட்சியானது குறைந்த அளவு மக்கள் தொகைகொண்டது. அங்கே மூன்று பேருந்துகள் மட்டுமே நிறுத்தத்தக்க சிறிய பேருந்து நிலையம் உண்டு. தற்போது தங்குவதற்கு எண்ணற்ற விடுதிகள் தோன்றியிருக்கின்றன. இருவர் தங்கக்கூடிய நல்ல அறைகள், நாள் வாடகையாக எழுநூறு முதல் கிடைக்கின்றன. கோடையில் இக்கட்டணம் மாறுபடலாம். வால்பாறை மலைத்தொடர்களில், நீராறு அணை, தூணக்கடவு அணை, பரம்பிக்குளம் அணை, சின்ன கல்லாறு அணை, சோலையாறு அணை என்று, பல அணைகள் உள்ளன. இவற்றுள் நீராறு அணை, உள்ளார்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் அழகிய அணை ஆகும். சுற்றிலும் பச்சைத்தாவரங்கள் பல்கிப் பெருகியிருக்க அவ்வணையின் தோற்றமே ஒரு மாயவனத்தில் அமைந்திருப்பதுபோல் இருக்கும். அப்பகுதியில் 'அட்டைகள்' மிகுதியாக ஊர்ந்து திரியும். அட்டைக்கடியிலிருந்து தப்பிக்க, புகையிலைத் தூளைக் கால்களில் தடவிக்கொள்கிறார்கள். புகையிலை வாசனைக்கு அட்டைகள் கிட்டே நெருங்காதாம்.வால்பாறையில் எண்ணற்ற நீரோடைகள் இருக்கின்றன. வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் வழியில் அமைந்திருப்பது, சோலையாறு அணையாகும். ஆசியாவின் மிக உயரமான அணைக்கட்டுகளில் இதுவும் ஒன்று. இவ்வணை முழுக்கொள்ளளவோடு இருக்கையில் காண்பது, வாழ்வில் மறக்க முடியாத காட்சியாகும். வால்பாறை என்பது, சிறு மலைமுகடுகளால் ஆன அழகிய மலைத்தொடர். அணைகளும் மலைமுகடுகளும் மேகத்தவழ்வுகளும் ஓடைகளும் என அப்பகுதியின் காட்சியின்பத்தை நேரில் கண்டுதான் உணர முடியும். செல்லும் வழி: கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்து சேரவேண்டும். பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் பேருந்துகள் உள்ளன. பேருந்துக் கட்டணமாக, ஒருவருக்கு நூறு ரூபாய் செலவாகும். இரண்டு நாட்கள் பயணத்திட்டமாக, வால்பாறைக்குச் செல்லலாம். தங்குமிடம், உணவு உட்பட ஒருவருக்கு, 1500 செலவாகும்.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !