சுவை புதுசு! அனுபவம் புதுசு!
நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, உமா மிஸ் என் பின்னால் வந்து நின்றதைக் கவனிக்கவில்லை. என் தோள் மீது நிழல் தெரிந்தபோது திரும்பிப் பார்த்தேன். “இத்தனை வயசு ஆச்சு, இன்னும் கீழே இறைச்சுக்கிட்டே சாப்பிடறே?”ஒரு கணம் யோசனையாக இருந்தது. வீட்டிலும் இதே குற்றச்சாட்டு உண்டு. நான் கையில் எடுத்துச் சாப்பிடும்விதம் தவறா, வாயில் போட்டுக்கொள்ளும் விதம் தவறா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். எதுவும் தவறில்லை. ஆனால், என் தட்டைச் சுற்றி சோற்றுப் பருக்கைகள் இறைந்து கிடக்கும். “சரி, ஏன் பொரியலைச் சாப்பிடவே இல்லை?”“கோவக்காய் பிடிக்காது மிஸ்!”“வேற என்ன காயெல்லாம் பிடிக்காது?”“கத்தரிக்காய் ரொம்ப அலர்ஜி. அவரைக்காய், கொத்தவரங்காய் எல்லாம் தொடவே மாட்டேன்…”“அப்ப என்னதான் சாப்பிடுவே?”“வெண்டைக்காய், உருளைக்கிழங்கு என் பேவரிட். வாரம் முழுசும் கொடுத்தாகூட சாப்பிடுவேன்.”“கீரை?”“மண்ணு வாசனை வரும் மிஸ்.”“தப்பான எண்ணம் கதிர். உனக்கு சாப்பாட்டு மேல ஆசையே இல்லைன்னு நினைக்கறேன்.”“இல்ல மிஸ். நல்லா சாப்பிடுவேன்.”“சாதத்தை மட்டுமா? காய்கறியையும் சேர்த்தா?”“சாதம், சாம்பார், ரசம்…”“அப்படித் தெரியலையே. நீ சாப்பிடறதுல என்ன சத்து இருக்குன்னு நினைக்கற. ஒண்ணுமே இல்லையே.”நான் யோசிக்க ஆரம்பித்தேன். அப்படியா? உமா மிஸ்ஸுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும்.“பேலன்ஸ்டு டயட்டுன்னு ஒண்ணு இருக்கு. சமச்சீரான உணவு முறை. அதுல உன்னைப் போல வளரக்கூடிய சிறுவர்களுக்குத் தேவையான புரதச்சத்து, ஊட்டச்சத்து, நார்ச்சத்து எல்லாம் சேர்ந்து இருக்கணும். உனக்கு கிழங்கு மட்டும்தான் பிடிக்கும் போலிருக்கே…”நான் நாணிக் கோணிக்கொண்டு சிரித்தேன். உருளை மட்டும் இருந்தால் போதும், மூன்று வேளையும் வைத்துக்கொண்டு விழுங்குவேன். “பிரச்னை என்னன்னா, உங்களுக்குக் காய்கறிகளைச் சரியாக அறிமுகப்படுத்தல. இதுல மூணு வகை உண்டு. எப்பவும் சாப்பிடக்கூடிய காய்கறிகள் ஒரு வகை, அவ்வப்போது சாப்பிடக்கூடிய காய்கறிகள் இன்னொரு வகை, எப்பவாவது சாப்பிடக்கூடிய காய்கறிகள் மூணாவது வகை. முதல்ல மூணுவேளையும் சாதத்தை மட்டும் சாப்பிடுவதை நிறுத்தணும். தட்டுல இருக்குற உணவுல, சாதங்கறது ஒரு பகுதிதான். காய்கறிகள் இன்னொரு பகுதி. பழங்கள் இன்னொரு பகுதி. இதெல்லாம் சேர்ந்துதான் உடலை ஆரோக்கியமாக வெச்சுக்கும். பச்சைக் காய்கறிகளையும் கீரை வகைகளையும் எப்பவும் சப்பிடலாம். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அவ்வப்போது சாப்பிடலாம். கிழங்கு வகைகளை எப்போதாவதுதான் சாப்பிடணும்.”“எதுக்கு மிஸ் இப்படியெல்லாம் பிரிக்கணும்?”“முக்கியமான காரணம், உடல் பருமன். இரண்டாவது காரணம், தேவையான இதர சத்துகள் கிடைக்காமலேயே போய்விடக் கூடிய அபாயம். இன்னிக்கு உலகம் முழுக்க இருக்கிற பெரிய பிரச்னை, உடல் பருமன் தான். அதுவும் சிறுவர்கள் மத்தியில்தான் இது ரொம்ப அதிகம். அவர்களால் தங்களோட வாயைக் கட்டுப்படுத்திக்கவே தெரியலை. ரசனையே இல்லை.”“சாப்பாட்டுக்கும் ரசனைக்கும் என்ன மிஸ் சம்பந்தம்?”“ரசனையே சாப்பாட்டுல இருந்துதான் தொடங்குது கதிர். எந்த உணவாக இருந்தாலும் அதை ரசிச்சு, ருசிச்சு சாப்பிடணும். சும்மா அள்ளிப் போட்டுக்கக் கூடாது. நாக்கு என்பது மூளையோட நேரடியாகத் தொடர்புடைய உறுப்பு. நிதானமாக மென்று சாப்பிடும்போது, அது கொடுக்கிற இன்பமே தனி. வயிறுங்கறது பானை அல்ல. அதுல எல்லாத்தையும் கொட்றதுக்காக நாம் சாப்பிடலை. மனசுக்காகத்தான் சாப்பிடுறோம். 'சாப்பிட்ட திருப்தி'ன்னு ஒண்ணு இருக்கு. அது நிறைய சாப்பிடறதால வர்றதில்லை. ரசிச்சு சாப்பிடும்போது, உணர்ந்து சாப்பிடும்போது, உணவுல இருக்கிற ஒவ்வொரு சுவையையும் புரிந்துகொண்டு சாப்பிடும்போது, மனசு நிறைஞ்சுடும். வயிறும் ரொம்பிடும். பலருக்கு இது புரியறதில்ல. டீ டேஸ்டிங்னு ஒரு வேலையே இருக்கு தெரியுமா?”“கேள்விப்பட்டு இருக்கேன் மிஸ்.”“அதுல பல்வேறு விதமான தேயிலையில் இருந்து தயாரிக்கப்படற தேனீரைச் சுவைக்கணும். நாக்கு நுனியில் தேனீரை வெச்சவுடனே அதன் தன்மை என்னன்னு சொல்லிடுவாங்க நிபுணர்கள். அது மாதிரிதான் உணவு டேஸ்டிங்கும். நாக்கு, மூளை, வயிறு மூன்றும் ஒருங்கிணைஞ்சு வேலை செய்யும். சின்னச் சின்ன வித்தியாசங்களைக் கூட பலரால உணர முடியும். உதாரணமாக, நாக்பூர் கத்திரிக்காய்க்கும், வேலூர் கத்திரிக்காய்க்கும் வித்தியாசம் இருக்கு. ஊட்டி கேரட்டுக்கும் வேற ஊர் கேரட்டுக்கும் வித்தியாசம் இருக்கு. அவ்வளவு ஏன்? பலருக்குத் துவர்ப்பு சுவை எப்படி இருக்கும் தெரியுமா?”“துவர்ப்பா? அப்படின்னா?”“இன்னிக்கு இனிப்பும் காரமும் தான் எல்லா இடத்திலேயும் தெரியும். அதுவும் காரம்னா, கண்ணுல தண்ணீ வரவழைக்கும் 'கட்ட மிளகாய்ப்பொடி' தான் தெரியும். பச்சை மிளகாய் காரத்துக்கும் சிவப்பு மிளகாய் காரத்துக்கும் மிளகு காரத்துக்குமே வெங்காயம், இஞ்சி காரத்துக்குமே வேறுபாடு உண்டு. நாவல் பழம், நெல்லிக்காய் எல்லாம் சாப்பிட்டிருக்கியா?”“நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கேன்.”“அதனோட சுவைதான் துவர்ப்பு. கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு எல்லாத்திலேயும் துவர்ப்பு உண்டு. ஆனால், அதெல்லாம் நாம உணர்ந்ததே இல்லை.”“இதெல்லாம் தொடக்கூட மாட்டேன் மிஸ்.”“அதுதான் பிரச்னையே. பலருக்குத் தயிர் பிடிக்காது. ரசம் பிடிக்காது. இதையெல்லாம் படிப்படியாக மாத்தணும். பல வெளிநாட்டு ஸ்கூல்கள்ல ஒவ்வொரு சுவையையும் அறிமுகப்படுத்தறதுக்கு வகுப்புகளே உண்டு. பல பழங்களையும் காய்களையும் பார்த்திருப்பீங்க. ஆனால், சுவைச்சு இருக்க மாட்டீங்க. இந்த வகுப்புகள்ல அந்தக் காய்களும் பழங்களும் அறிமுகம் செய்யப்படும். சுவைச்சுப் பார்க்கலாம். சாப்பிடணும்னு அவசியமில்லை. ஆனால், சுவைச்சே பார்க்காமல், ஒதுக்கிவைப்பது தப்பு. வாழ்க்கையே சுவையோட கலந்தது. புதிய சுவைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, புதிய அனுபவங்களைப் பெறும்போது, புதுசா ஒரு கண்டுபிடிப்பை செஞ்சா மாதிரி இருக்கும். அதுதான் நம் மனசைத் திருப்திப் படுத்தும். அந்த அனுபவத்தை தவறவிடக்கூடாது..”நான் விலக்கிவைத்த காய்கறிகளைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.