விலங்குகளின் கிராமம்
இந்தக் கதை நடந்து அதிக காலம் ஆகிவிடவில்லை. என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? நிறைய விலங்குகளும் பறவைகளும் சேர்ந்து மனிதர்களைப்போல சமுதாய வாழ்க்கை வாழ வேண்டும் என்று முடிவு செய்தன. அவை ஒரு நல்ல இடத்தைத் தேடிப் பிடித்து, ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கின. அங்கே விலங்குகள் தங்களுக்கு ஏற்ற வகையில் வீடுகள் கட்டிக்கொண்டன. ஒவ்வொரு விலங்கும் பறவையும் ஒவ்வொரு வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தன.எருமைக்கும் காளைக்கும் விவசாய வேலை. ஆடும் பசுவும், கிராமத்துக்குப் பால் விற்கிறோம் என்று ஏற்றுக்கொண்டன. கழுதை துணி துவைக்கும் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டது. கிராமவாசிகளின் போக்குவரத்துக்குத் தேவையான வசதியைச் செய்கிறேன் என்று குதிரை சொன்னது. மளிகைச் சாமான்கள் கொடுப்பது அணிலின் பொறுப்பானது. காய்கறிகள் கொண்டு வர வேண்டியது முயலின் வேலை. முட்டையும் மாமிசமும் விற்பதாக, கோழியும் சேவலும் கூறின. குரங்கு, கிராமத்தின் நடுவில் நல்லதொரு உணவு விடுதி ஆரம்பித்தது. யானை, கோயில் பூசாரியாக ஆனது. கிராமம் முழுவதையும் பெருக்கித் துப்புரவு செய்யும் பணியை காகம் ஏற்றுக்கொண்டது. யாருக்காவது நோய் வந்தால் நான் சிகிச்சையளிக்கிறேன் என்று முன்வந்தது பூனை. நாய், கிராமத்தின் போலீஸ் அதிகாரியானது. கிளி, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை. யாரும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யக் கூடாது என்றும், யாரும் எவரையும் கொன்று தின்னக் கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டது. ஒருவருக்கு மற்றவர்களைப் பற்றி ஏதேனும் புகார் இருந்தால், அதை எல்லோரும் கூடியிருக்கும் ஊர்ப் பஞ்சாயத்தில்தான் சொல்ல வேண்டும். குற்றம் செய்தவருக்கு பஞ்சாயத்து தண்டனை கொடுக்கும். அனைத்து விலங்குகளும் பறவைகளும் இந்தச் சட்டங்களை ஏற்றுக்கொண்டன. விலங்குகளின் அந்த கிராமத்தில் அமைதியும் சமாதானமும் நிலவியது. அந்த கிராமத்தைப் பார்ப்பதற்கு உலகின் மறு மூலையிலிருந்துகூட மக்கள் வரத் தொடங்கினார்கள்.அந்த அற்புதமான கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்கும் ஆசையாக இருக்கிறது அல்லவா? அடடா! என்ன செய்வது? அந்தக் கிராமம் இப்போது இல்லையே! எல்லாம் கலைந்து சிதறிவிட்டன. ஏன் இப்படி ஆயிற்று என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.* * *கிராமத்தில் அனைவருக்கும் முன்னால் விழித்தெழுவது சேவல் செந்தாடிதான். விழித்த உடனே அது மூன்று நான்கு முறை உரக்கக் கூவும். அந்த அழைப்பு கிராமத்தில் உள்ளவர்களையெல்லாம் எழுப்பிவிடும். ஆயினும், யாரும் அதைக் கேட்டதாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் வசதியாகச் சுருண்டு படுத்து தூங்கத்தான் பார்ப்பார்கள்.காகம் கண்ணம்மாவுக்கு மட்டும், சேவல் கூவிய பிறகு படுத்திருக்க முடியாது. அது அவசர அவசரமாக எழுந்து கிணற்றடிக்கு ஓடும். சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் மொண்டு கால்களையும் முகத்தையும் கழுவிக்கொள்ளும். பிறகு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடும். கிராமம் முழுவதையும் பெருக்கிச் சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு அதற்குத்தான். சாதாரண வேலையா அது? தானும் தன் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரே ஒரு பிராணிகூட இந்தக் கிராமத்தில் இல்லை. இதுதான் காகம் கண்ணம்மாவின் உறுதியான கருத்து.ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் கடையின் முன்னாலும் பார்க்க வேண்டுமே! அவ்வளவு குப்பையாக இருக்கும். எருமை அமைதிமணியும் காளை ஆற்றல்மணியும் விவசாயிகள்தானே, அவர்களின் வீட்டு வாசல் எப்படி இருக்கும் தெரியுமா? விதைகளும் உரங்களும் பதர்களும் வைக்கோலும் குவிந்து கிடக்கும். ஆடு அழகுராணியின் வீட்டையும் பசு அன்புராணியின் வீட்டையும் நெருங்கவே முடியாது. பழசாகிப் புளித்துப்போன பாலின் நெடியும் கெட்டுப்போன மோரின் துர்நாற்றமும் அரை மைல் தூரத்துக்கு மூக்கைத் துளைக்கும். இந்த லட்சணத்தில் இவர்கள் பெரிய பால் வியாபாரிகளாம்! இவ்வளவு அசிங்கம் பிடித்தவர்களை வேறு எங்குமே பார்க்க முடியாது. அவர்களிடமிருந்து பால் வாங்குகிற கிராமவாசிகளைச் சொல்ல வேண்டும்.துணி துவைக்கும் கழுதை கடுகடுப்பானின் வீட்டு வாசல், சாணித் தண்ணீரும் சாம்பலும் விழுந்து அசிங்கமாகக் கிடக்கும். அங்கே அழுக்குத் துணிகளும் துவைத்த துணிகளும் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் எடுத்து ஓரமாக வைத்துவிட்டுத்தான் தண்ணீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தமாக்க வேண்டும். இப்படியெல்லாம் சொல்லத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது. யாருக்குமே சுத்தமில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்த விஷயத்தில் அனைவரைவிடவும், பள்ளி ஆசிரியையான பச்சைக்கிளி கிக்கியம்மா பரவாயில்லை. அதன் வீடு கொஞ்சம் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும். காகம் கண்ணம்மா கொட்டாவிவிட்டு, துடைப்பத்துடன் நடந்தது. மிகவும் குளிராக இருந்தது. இந்த நேரத்தில் நன்றாகப் போர்த்திக்கொண்டு படுத்திருப்பதுதான் சுகமாக இருக்கும். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் ஒருத்தி அந்த சுகத்தை அனுபவிக்க முடியுமா? அது கரகரத்த குரலில் ஒரு பாட்டைப் பாடியவாறு குதிரை நல்லிதயனின் வீட்டு வாசலுக்கு வந்தது.கிராமத்தின் வண்டிக்காரன்தான் நல்லிதயன். அதனிடம் சொந்தமாக ஒரு வண்டி இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அது தன் வண்டியைத் துடைத்துத் துடைத்து பளபளப்பாக வைத்திருக்கும். கிராமத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் ரயில் நிலையம் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் அங்கே அழைத்துச் செல்லவும் அங்கிருந்து அழைத்து வரவும் நல்லிதயன் தயாராக இருக்கிறது. ஆனால், அது மிக அதிகமாகக் கூலி கேட்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். காகம் கண்ணம்மாவுக்கு இதுவரை தூரமாக எங்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால் நல்லிதயனின் வண்டியில் ஏறியதில்லை.நல்லிதயனின் வண்டிக் கொட்டகையையும் வாசலையும் முன்னால் உள்ள சாலையையும் பெருக்கி முடித்தது கண்ணம்மா. அப்போதுதான் நல்லிதயன் விழித்தெழுந்து வெளியே வந்தது. அதன் மனைவி புனிதவதி குதிரை, தண்ணீர் கொண்டு வருவதற்காக குடத்துடன் கிராமக் கிணற்றை நோக்கிப் பாய்ந்து செல்ல முற்பட்டது. அப்போது அது தடுமாறி கால் மடங்கி வாசலிலேயே விழுந்தது. குடம் உடைந்து விட்டது. உள்ளிருந்து இன்னொரு குடம் எடுத்து அவசரமாக நொண்டி நொண்டி போகும்போது, அது காகம் கண்ணம்மாவைப் பார்த்து முணுமுணுத்தது: “தினமும் காலையில் இந்தக் கரும்பூதத்தின் முகத்தில்தான் விழிக்க வேண்டியிருக்கிறது. எப்படி நல்லது நடக்கும்?”கண்ணம்மாவுக்குக் கடும் கோபம் வந்தது.(தொடரும்)மலையாளம்: சுமங்களா தமிழில்: யூமா வாசுகி