உள்ளூர் செய்திகள்

உலகைக் காட்டும் பயணம்!

''கடந்த மே 26இல், வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பும்போது, ஒருவேளை என் வீட்டை திரும்பிப் பார்த்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன். அந்த அளவுக்கு எங்கு தங்கப்போகிறேன், துணைக்கு யாருமில்லையே, உடல் ஒத்துழைக்குமா என்பன போன்ற கேள்விகள் என்னை கலங்கடித்தன. ஏதோ ஓர் உந்துலில் கிளம்பிவிட்டேன். ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியாணா வழியே டில்லியை அடைய வேண்டும் என்பதுதான் திட்டம். இது அத்தனையும் என்னுடைய பழைய சைக்கிளிலேயே” என்று பேச ஆரம்பித்தவர் சதீஷ் பாண்டலெரோ. சென்னையில் இருந்து புதுடில்லி வரை 2,200 கி.மீ. தூரம் பயணித்திருக்கிறார் சதீஷ். 28 நாட்கள் மேற்கொண்ட வித்தியாசமான பயண அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார் சதீஷ்:“தினமும் காலை 6 மணிக்குப் பயணத்தைத் தொடங்கினால், வெயில் வரும்வரை சைக்கிள் ஓட்டுவேன். வெயில் கடுமை குறைந்ததும் மீண்டும் பயணம். இருட்டுவதற்குள், அருகில் ஏதும் கோவில் இருக்கிறதா என்று கூகுள் மேப்பில் பார்ப்பேன். அங்கு தங்கிக்கொள்வேன். காலையில் மறுபடியும் பயணம்.கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து, ஆந்திரத்தின் கூடுர், ஓங்கோல் என்று ஒவ்வொரு இடத்துக்குப் போகும்போதும், பயணத்தை நிறுத்திவிட்டு திரும்பிவிடலாமா எனத் தோன்றும். அப்போதெல்லாம் எங்கிருந்தாவது எனக்கு நம்பிக்கையூட்டும் மனிதர்கள் வந்து பேசுவார்கள். பயணத்தைத் தொடர ஊக்கமளிப்பார்கள்.ஆறு நாட்களில், ஹைதராபாத் சென்றுவிட்டேன். வட இந்தியாவுக்குள் நுழையும் போதுதான், ஒருவித கலக்கம் ஆரம்பானது. மகாராஷ்டிரத்தில் காலடி எடுத்து வைத்த உடனேயே, என்னைக் கடைக்காரர் ஒருவர் ஏமாற்றப் பார்த்தார். மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிவிடலாமா என்று யோசித்தபோதுதான், நாக்பூரிலிருந்து, ஒருவர் போன் செய்தார். 'பேஸ்புக்கை பார்த்து உங்களைத் தெரிந்துகொண்டேன். இன்றிரவு எங்கள் இடத்தில் வந்து தங்கவேண்டும்' என்று சொன்னார். அவர், சர்வதேச தரத்திலான சைக்கிள் கடை ஒன்றின் உரிமையாளர். என் சைக்கிளை நான் எதிர்பார்க்காத வகையில் சர்வீஸ் செய்து கொடுத்தார். அத்துடன், என்னைத் தங்கவைத்து, உணவளித்து பயணம் தொடர்பாக நிறைய அறிவுரைகளையும் வழங்கினார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தின் சௌசர் கிராமத்தில், தங்குவதற்குரிய இடமின்றித் தவித்தேன். அப்போது, முன்பின் தெரியாத ஒருவர் உதவினார். 'இன்ஸ்டாகிராமில் என் நிலையைச் சொன்னேன். அதைப் பார்த்து, சௌசரில் உள்ள சூரஜ் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு வீட்டில் தங்கவைக்க முன்வந்தார். அவரின் குடும்பத்தினர், தங்களில் ஒருவராக என்னைப் பார்த்துக்கொண்டனர். அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தங்கிச் செல்வதற்குரிய ஏற்பாடும் செய்தனர்.மத்தியப் பிரதேசத்தின் சாகர் என்ற இடத்தில், ஒரு போலீஸ்காரர் என்னை மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். அடுத்ததாக உத்தரப் பிரதேசம். அங்கு, ஜான்சியில் இருந்தபோது, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டேன். ரமலான் தினமான அன்று, எதிர்பாராதவிதமாக என் பள்ளி நண்பன் அப்துல் முக்சித் திடீரென்று எனக்குப் பணம் அனுப்பி, பயணத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தான். அங்கே, ஒரு ஸ்டேஷனரி கடைக்காரர் எனது பயணத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, முதன்முதலில் அதை பத்திரிகைச் செய்தியாக வெளிவர உதவினார். அதன் பின்னர் ஆக்ராவுக்குச் சென்று, தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு, கடைசியாக ஜூன் 21இல் புதுடில்லி சென்று சேர்ந்தேன். டில்லியை எனது பக்கத்து ஊர் போல் இப்போது உணர்கிறேன். காரணம், ஒவ்வொரு இடத்தையும் பல அனுபவங்களுடன் கடந்து சென்றுள்ளேன். எதுவுமே மறக்க முடியாதது. கம்ப்யூட்டர், செல்போனைத் தாண்டி உலகம் என்றால் என்னவென்று தெரியாதவர்களாகத்தான் நிறைய பேர் உள்ளோம். உண்மையில் பயணம் செய்யும்போதுதான், இந்த உலகம் எவ்வளவு பெரியதென்று தெரியவரும். என் அடுத்த இலக்கு, சைக்கிளிலேயே ஐரோப்பாதான் செல்வதுதான்.”


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !