உள்ளூர் செய்திகள்

ரொம்ப நல்ல மரம்!

தாவரங்களிலேயே மிகவும் தடிமனான தண்டுப்பகுதி இதற்குத்தான் உள்ளது. இது பாவ்பாப் மரம். ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவில், மழைப்பொழிவு குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே இவை வளர்கின்றன. வறண்ட பகுதிகளில் வளர்வதால், தண்ணீரை உறிஞ்சித் தண்டில் சேமித்து வைத்துக்கொள்ளும். இதனாலேயே இவற்றிற்கு, உருண்டு திரண்ட பிரமாண்டமான தண்டுகள் உள்ளன. உச்சியில் கிராப் வைத்த மாதிரி இருக்கும் கிளைகளும் இலைகளும் நீரை ஆவியாகாமல் வைத்திருக்க உதவும். பாவ்பாப் மரங்களில் 9 வகைகள் உண்டு. இவை 5 மீட்டரில் இருந்து 30 மீட்டர் உயரம்வரை வளரும். தண்டின் சுற்றளவு 5 மீட்டரில் இருந்து 11 மீட்டர்வரை இருக்கும். இவ்வளவு பெரிய தண்டில், ஏறத்தாழ ஒன்றேகால் லட்சம் லிட்டர் அளவுக்கு நீரைச் சேமித்துவைத்துக் கொள்ளுமாம்! 'ஊருக்கே தண்ணீர் வினியோகிக்கும் தண்ணீர்த் தொட்டி மாதிரி இருக்குமோ!' என்று நீங்கள் நினைத்தாலும் தவறில்லை. வறண்ட பாலைவனத்தில் பாவ்பாப் மரங்கள் இருப்பது, யானை, வரிக்குதிரை, ஆடு, மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டிகள் இருப்பது மாதிரிதான். தண்ணீரை உறிஞ்சிப் பஞ்சைப் போல மிருதுவாக இருக்கும் இவற்றின் தண்டுப் பட்டையை, யானை, குதிரை மாதிரியான விலங்குகள் உரித்து உண்ணுமாம். இவற்றின் பூக்கள் 12 செ.மீ. விட்டத்தில் இருக்கும். பூக்களின் அருமையான வாசனை, மரத்தின் உச்சியில் அடைந்திருக்கும் வவ்வால்களையும், சிறிய பறவைகளையும் கவர்ந்து இழுக்கும். இதனால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இலைகள், ஐந்து விரல்களைக் கொண்ட கைகள் மாதிரி விரிந்து இருக்கும். வைட்டமின் சத்துகள் நிறைந்து இருக்கும் இந்த இலைகள், கீரை உணவாக உட்கொள்ளப்படுகிறது. இவற்றின் காய்களுக்கு 'குரங்கின் ரொட்டி' (Monkey's Bread) என்று பெயர். தேங்காய் அளவுக்குப் பெரிதாக இருக்கும். இந்தக் காய்களுக்குள் இருக்கும் கொட்டைகளை உலர்த்தி, மாவாக அரைத்து, ரொட்டி, கஞ்சி போன்ற உணவு வகைகளைச் செய்யலாம். யானையின் உடலைவிடப் பல மடங்கு பெரியதாக இருக்கும் இதன் தண்டுப்பகுதியைக் குடைந்து, நீர்த்தேக்கத் தொட்டி, நிழற்குடை, குடில், ஏன் பேருந்து நிறுத்தமாகக் கூடச் சில இடங்களில் மாற்றி இருக்கிறார்கள்! ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு பாவ்பாப் மரம், ஒரு காலத்தில் சிறையாகப் பயன்பட்டதாம். பாவ்பாப் மரப்பட்டைகளில் செறிந்திருக்கும் நார், மீன்பிடி வலைகள், துணிகள், கயிறுகள், கூரைகள் போன்ற பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.இந்த மரங்கள் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் வாழக்கூடியவை. அதனால், பாலைவனத்தில் பாவ்பாப் மரம் ஒன்று இருந்தால் போதும், தலைமுறை தலைமுறையாக, ஒரு ஊரே பிழைக்க முடியும் என்று நம்புகிறார்கள், ஆப்பிரிக்க மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !