உள்ளூர் செய்திகள்

மரம் செய்ய விரும்பு!

“ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?” என்று கேட்டான் பாலு. “ஒழுங்கா 'பட்டம்' படி. இதெல்லாம் தெரியும்.” என்றேன். “நான் 12 பக்கத்துல 9 பக்கம் எப்படியும் படிச்சிடுவேன். இது மீதி மூணு பக்கத்துல மிஸ்சாயிருக்கும்.” என்று தன்னிலை விளக்கம் அளித்தான் பாலு.“எளிமையா சொல்வதாயிருந்தா எல்லா பெட்ரோலியப் பொருட்களும் ஹைட்ரோ கார்பன்தான்.”என்றார் ஞாநி மாமா.“இந்தப் பொருட்களெல்லாம் இன்னும் எத்தனை வருஷத்துக்கு பூமிக்கடியில இருந்து கிடைக்கும்?” என்று கேட்டான் பாலு.'இப்ப எனக்கு 63 வயசு. உனக்கு பத்து வயசு. உனக்கு என் வயசாகறப்ப உலகத்துல எல்லா பெட்ரோலியப் பொருட்களும் தீர்ந்து போயிருக்கும் பாலு.” என்றார் மாமா.பாலுவும் நானும் மாமாவை அதிர்ச்சியோடு பார்த்தோம். இன்னும் 53 வருடங்கள்தானா? “அய்யோ. இப்பவே வருடத்துக்கு 97 கோடி வண்டிகள் உலகத்துல உற்பத்தி செய்யறாங்க. இந்தியால மட்டும் நாலரை கோடி. அடுத்த பத்து வருடத்துல இதெல்லாம் இன்னும் அதிகரிக்கும் இல்லையா? 53 வருஷம் கழிச்சு இந்த வண்டியெல்லாம் என்ன ஆகும்? மறுபடியும் குதிரை வண்டி, மாட்டு வண்டிதானா? போதுமான மாடும் குதிரையும் அப்ப இருக்குமா? பெட்ரோல் தீர்ந்து போயிட்டா உலகமே மாறிப் போயிடும் இல்ல? இன்னும் ஸ்லோ ஆயிடும். அந்த உலகத்தைக் கற்பனை செஞ்சு ஒரு நாவலே எழுதலாம் போல இருக்கே.” என்றேன்.“பெட்ரோல் இல்லாட்டா என்ன? மின்சாரத்துல ஓடற வண்டியெல்லாம் அதிகமாயிடும்.” என்றான் பாலு. எதிலிருந்து மின்சாரம் தயாரிக்கறது?“ரொம்பக் கவலைப்படாதீங்க. இன்னும் 50, நூறு, ஆயிரம், பத்தாயிரம் வருஷம் ஆனாலும் இருக்கப் போறது சூரியன்!. அதைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கறது அடுத்த 50 வருஷத்துல பெரிய அளவு நடக்கும்.”என்றார் மாமா.உடனே வழக்கம் போல பாலு, “நான் சோலார் இஞ்சினீயர் ஆகப் போகிறேன்.” என்றான்.“நீ போட்டு வெச்சிருக்கற வேலைவாய்ப்பு பட்டியல்ல நிச்சயம் சோலார் முக்கியமானதுதான். கூடவே நீ வாட்டர் இஞ்சினீயர் படிப்பையும் சேர்த்துக்கணும்.” என்றார் மாமா.“தண்ணீர் இன்னும் எவ்வளவு நாளைக்கு வரும், யோசிங்க.” என்றார். உடனே வாலு புள்ளிவிவரங்களை எடுத்து அடுக்கியது. 'உலகத்துல இருக்கற மொத்த நிலத்தடி நீர் 2 கோடி 30 லட்சம் க்யூபிக் கிலோமீட்டர் அளவுக்கு இருக்கு. இதுல நாம அதிகமா குடிநீருக்கு பயன்படுத்தறது மேல்மட்டத்துல இருக்கற 35 லட்சம் கியூபிக் மீட்டரைத்தான். இது அப்பப்ப வேகமா தீர்ந்து போயிடுது. இன்னும் பத்து வருடத்துல இந்தியால பெரும்பாலான இடங்கள்ல கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். தமிழ்நாட்டுல பாதிக்கு மேற்பட்ட பகுதிகள்ல கடும் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்' என்றது வாலு.“இப்பவே இருக்கு” என்றார் மாமா.“கவலைப்படவேண்டாம் மாமா. பெட்ரோலை பூமிக்கடியில இருந்து எடுத்து பயன்படுத்தி எரிச்சு ஆவியாக்கினா, அது மேல போய் குளிர்ந்து திரும்ப ஆயில் மழையா வராது. ஆனா தண்ணீர் திரும்பவும் மழையா வரும் இல்லியா? அதனால் என்னிக்கும் தண்ணீர் பெரும் பிரச்னையா மாறாது. கொஞ்சம் தற்காலிக சிரமங்கள்தான் இருக்கும்.” என்றேன்.“மழையே பெய்யாட்டி?”என்றார் மாமா. இந்த வருடம் சென்னையில் மழைக்காலத்திலேயே போதிய மழை பெய்யவில்லை. பல ஊர்களில் காலம் தப்பி மார்ச் மாதத்தில் பெய்கிறது. அந்த மழையாலும் பெரிய லாபங்கள் இல்லை.“எல்லா பிரச்னைக ைளயும் இரண்டு விதங்களில் அணுக வேண்டும். ஒன்று உடனடி தீர்வுக்கான நடவடிக்கை. இன்னொன்று தொலை நோக்கில் தீர்வுக்கான நடவடிக்கை. இந்தச் இரு நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று எதிராகவும் இருக்கக்கூடாது. அந்த மாதிரிதான் நாம் தண்ணீர்ப் பிரச்னையையும் அணுகவேண்டும்.” என்றார் மாமா.உடனடி தீர்வு என்ன? “தண்ணீரைப் பணம் மாதிரி செலவழிக்கவேண்டும்.” என்றார் மாமா. “ஹைய். பணத்தைத்தானே தண்ணீர் மாதிரி செலவழிக்காதே என்று பெரியவர்கள் பொதுவாக சொல்வார்கள்” என்றேன். “அது பழங்காலம். தேவைக்கு மேலே தண்ணீரை நாம் செலவழித்த காலத்தில் சொன்னது. இப்போது 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாமல் ஆக்கப்பட்டபோது, 10,20,50,100 எல்லாவற்றுக்குமே பெரும் தட்டுப்பாடு வந்தது இல்லையா? அப்போது எப்படி ஒவ்வொரு பத்து ரூபாயையும் பார்த்துப் பார்த்து செலவழித்தோம். அதே மாதிரிதான் இனி தண்ணீரையும் செலவழிக்க வேண்டும்.” என்றார் மாமா. உடனே ஒரு செக் லிஸ்ட் தயாரித்தோம். தினசரி காலை முதல் இரவு வரை நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தண்ணீரை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பட்டியல் போட்டோம். அங்கங்கே குறைத்துக் கொண்டே வந்ததில் ஒரு நபர் ஒரு நாளில் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரையாவது குறைக்கமுடியும் என்று தெரிந்தது. மாதம் 60 லிட்டர். குடும்பத்தில் நாலு பேர் என்றால் 240 லிட்டர். ஒரு மாதம் முழுவதும் இன்னொருத்தருக்கு பயன்படக் கூடிய அளவுக்கும் மேல்.“இன்னொரு கணக்கும் போடவேண்டும்” என்றார் மாமா. “வீணாகும் அளவைக் குறைப்பது ஒரு வழி. அதை மீறியும் பயன்படுத்தி வீணாகும் வேஸ்ட் வாட்டரை சாக்கடைக்கு அனுப்பாமல் எப்படி பயன்படுத்த முடியும் என்று யோசிக்க வேண்டும்.” என்றார். அது ஒவ்வொருத்தர் வீட்டு அமைப்பைப் பொறுத்தது.பாத்திரம் கழுவும் நீர், குளிக்கப் பயன்படுத்தும் நீர் இரண்டையும் நிச்சயம் தொட்டிகளிலாவது செடி வைத்து அவற்றுக்குப் பாய்ச்சலாம்.தொலை நோக்குத் தீர்வு என்ன?“மழை வரவேண்டிய பருவத்தில் போதுமான அளவு வந்தால்தான் நிலத்தடியிலும் ஏரிகளிலும் மறுபடியும் தண்ணீர் சேரும். மழை வரவழைக்க ஒரே வழி நிறைய மரங்கள் வளர்ப்பதுதான்.” என்றார் மாமா. சொல்லிவிட்டு “கவனி. நான் நடுவது என்று சொல்லவில்லை. வளர்ப்பது என்று சொல்கிறேன். குழந்தை பெற்றால் போதாது. அதை சரியாக பராமரித்து வளர்க்கிறோம் இல்லையா? அந்த மாதிரிதான் மரமும்.”என்றார். நான் தினமலரின் 'மரம் செய்ய விரும்பு' திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துவிட்டேன்.வேம்பு, நாவல், புங்கை, பூவரசம், பாதாம், சவுண்டால், தூங்குமூஞ்சி என்று நான் பள்ளியில் நட்ட மரங்களின் பெயர்களை சொன்னதும் பாலு, “கடைசியாக சொன்ன மரம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. ரொம்ப சீரியசாக ஒரு மணி நேரம் பேசினால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது”என்றான்.“உனக்காகவும் ஒரு தினம் கொண்டாடுகிறார்கள். மார்ச் 17 உலக தூக்க தினம். ஒருவர் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்காவிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதைப் பற்றி அறிவுறுத்துவதற்கான தினம் இது.” என்றார் மாமா.“அது தூக்கம் வராதவர்களுக்கு மாமா. எனக்கு அந்தப் பிரச்னையே இல்லையே.”என்றான் பாலு. “உனக்கு விழிப்பு தினம்தான் கொண்டாடவேண்டும்” என்றது வாலு.“அதைத்தான் மாலு எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறாளே”என்றான் பாலு.எல்லாரும் சிரித்தோம்.வாலுபீடியா 1: உலக தண்ணீர் தினம்: மார்ச் 22வாலுபீடியா 2: பிரேசிலில் இருக்கும் ஒரு வகை தேனீ உடலில் பெட்ரோல் வாசனை கொண்டிருக்கிறது. இதைக் கொண்டு சக தேனீக்களை கண்டுபிடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !