உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / வண்ணங்களின் சங்கமம்: பாரதம் முழுவதும் ஒரு ஹோலிப் பயணம்!

வண்ணங்களின் சங்கமம்: பாரதம் முழுவதும் ஒரு ஹோலிப் பயணம்!

'வசந்தம் வந்தாச்சு...' என்று வானம் பாடும் முன்னே, மண்ணில் வண்ணங்கள் பேசத் தொடங்கும் ஒரு திருவிழா உண்டென்றால் அது ஹோலிதான். நாடு முழுவதும் சாதி, மதம், இனம் கடந்து மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இந்தத் திருவிழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது, இந்த பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சுவாரசியத்தைக் கொண்டுள்ளது.கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவிலும், அவர் வளர்ந்த பிருந்தாவனத்திலும் ஹோலி ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கிவிடும். இங்கே 'லாத்மார் ஹோலி' மிகவும் பிரபலம். பெண்கள் ஆண்களைக் குச்சிகளால் மென்மையாக அடிக்க, ஆண்கள் தற்காத்துக் கொள்ளும் இந்த விளையாட்டு, கண்ணனுக்கும் ராதைக்கும் இடையிலான காதலைக் கொண்டாடும் ஒரு மரபாகும்.வங்காளத்தில் இது வெறும் வண்ணத் திருவிழா மட்டுமல்ல; இது கலைகளின் திருவிழா. புகழ்பெற்ற சாந்திநிகேதன் மற்றும் நதியா பகுதிகளில், ரவீந்திரநாத் தாகூர் தொடங்கிய 'வசந்த உற்சவம்' இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, பாடல்கள் பாடி, நடனமாடி 'குலால்' பொடியைத் தூவி வசந்தத்தை வரவேற்கின்றனர்.பஞ்சாபில் சீக்கியர்களால் கொண்டாடப்படும் 'ஹோலா மொகல்லா' வீரத்தின் அடையாளமாகும். வண்ணங்களை விட, இங்கே தற்காப்புக் கலைகள், வாள் வீச்சு மற்றும் குதிரையேற்றம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இது ஹோலிக்கு மறுநாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும்.குஜராத்தில் பானைகளை உயரத்தில் கட்டி அதை உடைக்கும் போட்டி ஹோலியின் போது நடைபெறும். வண்ண நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடும் இந்தத் திருவிழா, இப்பகுதிகளில் 'ரங் பஞ்சமி' என்று ஐந்தாம் நாள் வரை நீடிக்கும்.தென்னிந்தியாவில், வட மாநிலங்களில் இருந்து வந்து குடியேறிவர்கள் தங்கள் குடியிருப்புகளில் இந்த பண்டிகை தங்களுக்குள் கொண்டாடி மகிழ்கின்றனர் சென்னை சவுகார் பகுதி அதற்கு ஒரு சான்றாகும்.இன்றும் வீதிகளில் இறங்கி முன்பின் தெரியாதவர் மீதும் அன்பால் வண்ணம் பூசும் அந்த நொடி இருக்கிறதே... அதுதான் இந்தியாவின் உண்மையான ஒற்றுமை!பழைய கசப்புகளை மறந்து, பகைமையைத் துறந்து, புதிய உறவுகளுக்கு வண்ணம் பூசும் ஹோலி பண்டிகை, இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் ஒரு 'வண்ணத் தூரிகை'.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை