உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / அஞ்சார் ஏரியும் நத்ரூவும்

அஞ்சார் ஏரியும் நத்ரூவும்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் கலாச்சாரம் மற்றும் உணவோடு பின்னிப் பிணைந்த ஒரு முக்கியமான விளைபொருள் தாமரைத் தண்டு ஆகும். இதனை உள்ளூர் மொழியில் 'நத்ரூ' என்பர்.ஸ்ரீநகரின் சௌரா பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அஞ்சார் ஏரி, நத்ரூ சாகுபடிக்கு மிகவும் புகழ்பெற்றது. தால் ஏரிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் நத்ரூ இங்குதான் விளைவிக்கப்படுகிறது. காஷ்மீரி மக்களால் மிகவும் விரும்பப்படும் இந்த நத்ரூ, ஒரு விலையுயர்ந்த மற்றும் சுவையான காய்கறியாகக் கருதப்படுகிறது.நத்ரூ காஷ்மீரி சமையலில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும்,தயிர் மற்றும் மசாலாக்கள் சேர்த்தும், தாமரைத் தண்டுகளை மாவில் நனைத்து பொரித்தும் என விதம் விதமாக செய்து சாப்பிடுவர்.இது மீன் மற்றும் இறைச்சியுடனும் சேர்த்தும் சமைக்கப்படுகிறது.நத்ரூ அறுவடை செய்வது மிகவும் சவாலான மற்றும் கடினமான பணியாகும்: குளிர்காலம் தொடங்கும் போது (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த அறுவடை தீவிரமாக நடைபெறும்.விவசாயிகள் கடும் குளிரிலும், உறைபனி நீரிலும் இறங்கி, ஏரியின் அடிப்பகுதியில் சேற்றுக்குள் புதைந்துள்ள தாமரைத் தண்டுகளைத் தேடி எடுக்கிறார்கள்.இதற்காக 'கெய்ஷம்' எனப்படும் நீண்ட மரக் கம்புகளைப் பயன்படுத்துகின்றனர். அதன் நுனியில் ஒரு சிறிய வளைவு இருக்கும், அதைக் கொண்டு சேற்றுக்குள் இருக்கும் தண்டுகளை லாவகமாக இழுத்து எடுப்பார்கள்.அஞ்சார் ஏரி தற்போது மாசடைந்து வருவதால், அசுத்தமான தண்ணீரில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு தோல் நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஒரு காலத்தில் மிகத் தெளிவாக இருந்த அஞ்சார் ஏரி, இன்று கழிவுகள் கொட்டப்படுவதால் சுருங்கி வருகிறது. இதனால் நத்ரூ விளைச்சல் பெருமளவு குறைந்துள்ளதோடு, தரம் மற்றும் சுவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 2014-ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு நத்ரூ விளைச்சல் முழுமையாக அழிந்து, பின் மெதுவாக மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சுருக்கமாகச் சொன்னால், 'நத்ரூ' என்பது வெறும் உணவு மட்டுமல்ல, காஷ்மீர் மக்களின் கடின உழைப்பு மற்றும் பாரம்பர்யத்தின் அடையாளம்.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை