UPDATED : அக் 12, 2024 08:38 PM | ADDED : அக் 12, 2024 08:36 PM
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்று காலை நடைபெற்ற சக்ரஸ்நானத்துடன் நிறைவு பெற்றது.கடந்த 9 நாட்களாக நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்,பல்வேறு மாநில கலைஞர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
சுவாமி மாடவீதியில் உலாவரும் போது முன்னதாகவே இந்தக் கலைஞர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தியபடி சென்றனர்.
திருமலையில் நிறைய தீர்த்தங்கள் உள்ளன, அந்த தீர்த்தங்கள் எல்லாம் எளிதில் பக்தர்கள் போக முடியாதபடி காட்டுக்குள்ளும் மலை முகடுகளிலும் உள்ளது.
இந்த புனித தீர்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனைப் பக்தர்கள் பெறவேண்டும் என்பதற்காக பெருமாளே ஏற்படுத்தியதுதான் புஷ்கரணி எனப்படும் கோவில் அருகில் உள்ள தீர்த்தமாகும்.
இந்த புஷ்கரணி குளத்தில் நீராடினால் திருமலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பதால் திருமலை வரும் பக்தர்கள் இந்த குளத்தில் நீராட தவறுவதே இல்லை.இந்த குளத்தில்தான் பிரம்மோற்சவ நிறைவு விழா நடைபெற்றது.அதிகாலையிலேயே குளக்கரையில் தேவியர் சமேதரராக எழுந்தருளிய பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.
பின்னர் பெருமாளின் அம்சமான சக்ரத்தை ஏந்தியபடி கோவில் பட்டாச்சார்யார்கள் குளத்திற்கு சென்று மூன்று முறை சக்காயுதத்துடன் முழ்கி எழுந்தனர்.அந்த நேரம் கோவில் குளத்தை சுற்றி குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீராடி பலன் பெற்றனர்.