உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / வனங்கள் ரணங்களாகலாமா?

வனங்கள் ரணங்களாகலாமா?

சென்னை கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமி கலை வளர்க்கும் கூடமாகும்.பெரும்பாலான ஒவியவர்களும்,புகைப்படக்கலைஞர்களும் தங்களது படைப்புகளை இங்குதான் காட்சிப்படுத்துவர்.இதன் செயலாளராக இருப்பவர் சோவன் குமார்.கலைஞர்களுக்கு சிறப்பான முறையில் ஆதரவு தெரிவிப்பவர்.அவர் ஒரு சிறந்த ஒவியக்கலைஞரும் கூட அவரது ஓவியங்கள் லலித்கலா அகாடமியில் புதுப்பிக்கப்பட்ட முதல் மாடியில் இவரது ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இவரது ஒவிய கருப்பொருட்கள் யாவும் லாரி டிரக்கில் பயணம் செய்வதாக வித்தியாசமாக அமைத்துள்ளார்.ஒரு டிரக் நிறைய காட்டில் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் குவியல்கள் உள்ளன,பின்னனியின் காடு வெறிச்சோடிக்கிடக்கிறது,இயற்கையை வேட்டையாடிவிட்டு இந்த உலகம் எதைக் கொண்டாடப்படுகிறது, எப்படி வாழப்போகிறது என்ற வேதனை இந்த ஒவியத்தில் தெரிகிறது.இன்னோரு டிரக்கில் 'டிஜிட்டல் வேஸ்ட்' என்று சொல்லக்கூடிய மின்னனு குப்பைகள் குவியலாக எடுத்துச் செல்லப்படுகிறது,உண்மையிலேயே இந்த உலகம் இன்றைய தேதிக்கு பயப்படுவது இந்த டிஜிட்டல் வேஸ்ட்டை நினைத்துதான்,'கேட்ஜட்ஸ்' என்ற பெயரில் ஒவ்வாரு நாளும் ஆயிரக்கணக்கான மின்னனு சாதனங்கள் அறிமுகமாகின்றன, இதை எல்லாம் எப்படி அழிப்பது என்பதுதான் தெரியவில்லை.இதே போல சென்னை கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற உழைப்பாளர் சிலை ஒரு டிரக்கில் பயணிக்கிறது கடின உழைப்பு என்பது இனி 'காட்சிப்பொருளே' என்று படைப்பாளியான சோவன்குமார் இதன் மூலம் சொல்லவருவதும் புரிகிறது.உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் உயிர்களும் உடமைகளும்தான் இது தெரிந்தும் தெரியாதவர்கள் போல இருப்பதுதான் வேதனை ஒரு உயிருக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடாகாது என்பதை இன்னும் எத்தனை போரை நிகழ்த்தி புரியவைப்பது என்பதுதான் புரியவில்லை என்பதை ஒரு ஓவியம் சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறது.எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்குகிறோம் விரைவில் சுத்தமான காற்றுக்கும் ஒரு விலை கொடுத்து வாங்கவேண்டிவரும் என்றொரு ஓவியம் சொல்கிறது,இயற்கை காடுகள் அழிகிறது கான்கீரிட் காடுகள் பெருகுகிறது என்று ஓரு ஒவியமும்,நுாலகங்கள் பார்க்கவா,படிக்கவா? என்பது தெரியவில்லை என ஒரு ஓவியம் கேட்கிறது,மொத்தத்தில் சோவன்குமாரின் படங்கள் மனதை வெல்கிறது.இந்த ஒவிய கண்காட்சி வருகின்ற 15 ஆம் தேதி வரை நடைபெறும் நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை அனுமதி இலவசம்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ