UPDATED : நவ 04, 2025 09:18 PM | ADDED : நவ 04, 2025 09:16 PM
நாட்டுக்காகப் போராடுவதையும் அதற்காக சிறைத் தண்டனை அனுபவிப்பதையும் தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் காமராசர்.1930-ல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில், தமிழ் நாட்டில் வேதாரண்யம் முக்கிய மையமாக இருந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.-ல் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்று, மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.அரிசனங்களின் உரிமைக்காகவும் அவர் போராடினார். 1925-ல் அரிசனங்களுக்கு வழிபாட்டு உரிமை கோரி நடைபெற்ற வைக்கம் மற்றும் சுசீந்திரம் போராட்டங்களிலும் அவர் பங்கேற்றார்.-ல் விருதுநகர் அஞ்சல் நிலையத்திலும், திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்திலும் வெடிகுண்டு வைத்ததாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டார். 1941-ல் தனியார் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பட்டியலை காந்தியடிகளிடம் ஒப்படைக்கச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு, வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார்.1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தார். சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்; வெப்பத்தின் தாங்கமுடியாத துயரத்தை விவரிக்கும் போது, யாருடைய கண்களும் நீர்த்துப் போகும்.மொத்தத்தில் மூவாயிரம் நாட்கள் காமராஜர் சிறை வாழ்க்கை அனுபவித்தார்.'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் 1942-ல் இந்தியாவில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் ஆகும். மகாத்மா காந்தியின் விடுதலைக்கான அழைப்பைத் தொடர்ந்து இது உருவானது. ஆகஸ்ட் புரட்சி என்றும் இதனை அழைக்கிறார்கள்.அந்த ஆண்டு வார்தாவில் கூடிய காங்கிரஸின் செயற்குழு இந்த இயக்கத்தைத் தொடங்க தீர்மானித்தது. அதன்பின் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் மகாத்மா காந்தி “செய் அல்லது செத்துமடி” என்ற முழக்கத்துடன் இயக்கத்தை ஆரம்பித்தார்.அடுத்த நாளே பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசால் சிறைபிடிக்கப்பட்டனர். இதன் பின்னர் விடுதலைப் போராட்டம் உண்மையான பொதுமக்களின் இயக்கமாக மாறியது.அந்த மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பிய காமராஜரை கைது செய்ய பிரிட்டிஷ் போலீசார் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்தனர். இந்த தகவல் ரயிலில் இருந்த காமராஜருக்குத் தெரியவந்தது. கைது செய்யப்படுவதில் அவர் கவலைப்படவில்லை, ஆனால் மாநாட்டு செய்திகளை மக்களிடம் சேர்க்க வேண்டிய கடமை இருந்தது.அதனால் சில நாட்கள் தலைமறைவாக இருந்து செயல்பட அவர் முடிவு செய்தார்.சென்னைக்கு வரும் வழியில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கி, சாலை மார்க்கமாக ராணிப்பேட்டையை அடைந்தார். அங்கு தனது நண்பரும் தியாகியுமான நாராயணனை சந்தித்தார். ஆனால் அவரின் வீடு சிறியதாகவும், காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்ததால், காமராஜரை தனது மற்றொரு நண்பர் சுலைமான் வீட்டில் தங்கவைத்தார்.அங்கு இருவரும் நீண்ட ஆலோசனை செய்து, போராட்ட நகல்களைத் தயாரித்தனர். பின்னர் வேலூர் வழியாக ஆங்கிலேய காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து சென்றனர்.பின்னர் தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களைச் சந்தித்து, அந்தப் போராட்டத்தின் நோக்கம் மற்றும் தேவையை விளக்கி, தமிழ்நாட்டில் அதை வெற்றிகரமாக நடத்தச் செய்தனர். இதற்குப் பின் காமராஜரும் கல்யாணராமனும் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்தனர்.சுதந்திரப் போராட்டத்தின் அந்தப் பொற்கால நினைவுகளைச் சுமந்து நிற்கும் ராணிப்பேட்டை இல்லம் பாழடைந்து கிடந்தது. காமராஜர் மறைந்து செயலாற்றிய அந்த இல்லத்தை நினைவுச்சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த இல்லம் சுமார் ₹16 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பெருமையை இந்த ராணிப்பேட்டை நினைவில்லம் மேலும் மெருகூட்டட்டும்.- எல். முருகராஜ்