உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / நாம் அறியாத, அறிய வேண்டிய, நம் முன்னோரின் அரிய அறிவு செல்வம்!

நாம் அறியாத, அறிய வேண்டிய, நம் முன்னோரின் அரிய அறிவு செல்வம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நம் தாய்நாடு, 1947 ஆகஸ்டு 15ம் தேதி பிறந்த நேசம் அல்ல. 'தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுரணராத இயல்பினளாம் எங்கள் தாய்' என்று பாரத தேச தொன்மையை மகாகவி பாரதியார் கொண்டாடுகிறார். வரலாற்றால் மட்டும் அல்ல. பண்பாட்டிலும் ஆன்மிகத்திலும் அறிவுச் செல்வத்திலும், கலைச் செல்வத்திலும் கூட பாரதம் பழம்பெரும் நாடே. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவப் பெருந்தகை கூறுவாரே, அந்த கேள்வி ஞானத்தினாலேயே உயிர்ப்புடன் விளங்கிய வேதங்களும், உபநிடதங்களும், இவற்றின் பொருளை விளக்க வந்த சம்ஸ்கிருத இதிகாசங்களும், புராணங்களும், ஸ்ம்ருதி நுால்களும், அவற்றிற்குப் பின் வந்த பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எத்தனையோ அறிஞர்களின் நுால்களும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், விரவியும் பரவியும் கிடக்கின்றன. நம் நாட்டில் இன்னும் கோடிக்கணக்கில் ஓலைச் சுவடிகளில் நம் முன்னோர் தந்த, நாம் அறியாத அரிய அறிவுச் செல்வம் பதுங்கிக் கிடக்கிறது. பல நுாற்றாண்டு காலமாக இதையெல்லாம் நாம் அறியாமல் இருப்பதற்கு காரணம், அன்னிய ஆட்சியாளர்கள் திணித்த கல்விமுறை. வால் நட்சத்திரம், 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் என்பர்; பாரதியார் காலத்திலும் வந்தது. அதன் வரவு நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ள மக்கள் ஜோதிடர்களை நாடினர். வால் நட்சத்திரத்தின் அறிவியல் விளக்கத்தை அறிய ஐரோப்பியர்களை நாட வேண்டியிருந்தது. இதைக் கண்டு மனம் வருந்திய பாரதியார், 'சாதாரண வருஷத்து துாமகேது' என்ற கவிதையில், 'நம்மனோர் நுால் மறந்து நுாற்றாண்டு ஆயின' என்று காரணத்தையும் தெரிவிக்கிறார்.

தசம இடமதிப்பு

பாரதியார் போன்ற மேலோர்களின் ஏக்கத்தை போக்கும் விதத்தில், 'பாரதிய ஞானப் பரம்பரை' என்ற அறிவியல் பொக்கிஷத்தை, பாரத அரசு இன்று மக்கள் கவனத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.மேற்கூறிய தொன்மை பாரத அறிவியல் நுால்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொறியியல், போன்ற பல்வேறு விஷயங்களும் அடக்கம். இவற்றில், கணிதம் தலைசிறந்தது. எந்த அறிவியல் துறை ஆனாலும், அது செயல்பட, உடல் இயங்க உயிர் போல கணிதம் தேவை. எனவே இந்தக் கட்டுரையில் கணிதத்தில் நம் முன்னோரின் சில பங்களிப்புகளைக் காண்போம். முதலில் வருவது, தசம இடமதிப்பு. இது நம் முன்னோர்களின் அடிப்படையான முக்கிய பங்களிப்பாகும். ஏனெனில் இந்த தசம இடமதிப்பைப் பற்றி நன்கறியாமல் கணிதத்தின் அரிச்சுவடியான ஒரு கூட்டல், கழித்தலைக் கூட செய்ய முடியாது. பிறகு தானே மிகவும் முன்னேறிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பற்றியெல்லாம் நாம் பேச முடியும்கணிதத்திற்கு தொடர்பில்லாத விஷ்ணு புராணம் எனும் (பதினெட்டு புராணங்களில் ஒன்றான) பழம்பெரும் நூலிலும் (6.3.4) இந்த செய்தி தெரிவிக்கப்படுகிறது: 'ஸ்தானாத் ஸ்தானம் தசகுணம் ஸ்யாத் - ஒரு எண் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் பொழுது, அதன் மதிப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது' என்பதே அடிப்படை விதி. இந்த செய்தி ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரையிலும் (2.2.17) யோக சூத்திரங்களுக்கு வியாஸர் எழுதிய உரையிலும் (3.13) ஒரு எடுத்துக்காட்டின் மூலமாக தெரிவிக்கப்படுகிறது. பிறகு, கணித வானவியல் நுால்களான ஆர்யபட்டீயம் (2,2 - ஐந்தாம் நுாற்றாண்டு), பாடீகணிதம் (1.7,8 - 6, ஏழாம் நுாற்றாண்டு), லீலாவதி (10,11 - பன்னிரண்டாம் நுாற்றாண்டு) போன்றவற்றிலும் இதே செய்தி தெரிவிக்கப்படுகிறது. நம் முன்னோர், இதன் மகிமையை நன்கு உணர்ந்திருந்தனர். உலகெங்கும் அறிவியல் சமூகம் அடிப்படை கணக்கில் இந்த தசம- இட-மதிப்பைத் தான் இன்றளவும் பின்பற்றி வருகிறது. நம் முன்னோரின் மதிநுட்பம்தான் எத்தகையது!

போதாயன சூத்திரம்

இந்த பெயரினைக் கேட்டவுடன், இது ஏதோ புது தேற்றம் என்று பலர் எண்ணக் கூடும். ஆனால் நம் அனைவருக்கும் தெரிந்த பிதாகரஸ் தேற்றம் தான் இது. ஆனால், இந்தத் தேற்றம் (போதாயனர், ஆபஸ்தம்பர், காத்யாயனர், மனு உள்ளிட்ட நம் வேதகாலத்து ரிஷிகள் எழுதிய சுல்ப சூத்திரங்கள் - ஆறு வேத அங்கங்களில் ஒன்றான கல்பத்தில் க்ருஹ்ய சூத்திரங்களின் ஒரு பகுதி) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தேற்றம். இதை, உலகமே இன்று ஏற்றுக் கொண்டுள்ளது. பிதாகரஸ் என்கிற கிரேக்க அறிஞரின் காலம் கி.மு., ஐந்தாம் நுாற்றாண்டு. ஆனால் மேற்சொன்ன வேதகால ரிஷிகளின் காலமோ, கி.மு., எட்டாம் நுாற்றாண்டிற்கும் முன். யாக, யக்ஞங்களுக்கு பல்வேறு வடிவங்களில் குண்டங்களை உருவாக்கிய நம் வேத காலத்து மகரிஷிகள், இந்தச் செங்கோண முக்கோண வடிவத்தையும் அமைத்தனர். இதன் பின்னர் கி.பி.,யில் பல்வேறு நுாற்றாண்டுகளில் தோன்றிய ஆர்யபட்டர், பிரம்ம குப்தர், மகாவீரர், ஸ்ரீதரர், இரண்டாம் பாஸ்கராச்சார்யர் போன்ற பேரறிஞர்களும் தத்தமது நுால்களில் இதனை விளக்கியுள்ளனர்.

பை - கணித-மாறிலி எண்

ஒரு வட்டத்தின் சுற்றளவு, அதன் விட்டத்தின் பை- மடங்காகும். இந்த பை என்பது தற்காலத்தில், 3.14159 என்னும் மதிப்பைக் கொண்டதாக அறியப்படுகிறது. இதை நம் முன்னோர் தொன்று தொட்டே அறிந்திருந்தனர். ஐந்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஆர்யபட்டர் (ஆர்யபட்டீயம் 2.10) இதன் மதிப்பை, 3.1416 என்கிறார். நம் முன்னோர்கள் கணக்கில் எவ்வளவு துல்லியமாக இருந்தனர் பார்த்தீர்களா? இதற்கான கணித-ச் சான்று -விளக்கத்தையும் கூட, இதன் உரையாரிசிரியர் நீலகண்டர் நல்குகிறார். இன்று பயன்படுத்தப்படும் 22/7 என்ற அதன் பின்ன மதிப்பையும், லீலாவதியில் (199) பன்னிரண்டாம் நுாற்றாண்டில் இரண்டாம் பாஸ்கரர் கூறிவிடுகிறார். என்னே நம் முன்னோர்களின் வியக்கத்தக்க அறிவியல் பங்களிப்பு!

கிரகணம்

வானியல் நிகழ்வான கிரகணத்தை, பாம்பு சந்திரனை விழுங்கும் கதையாக தொன்மை தமிழ் மக்கள் அனைவரும் அறிவர். 'கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று' என்பது குறள் (1,146). 'நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே...' என்கிறாள் வள்ளுவரின் கற்பனை படைத்த தலைவி. தொன்மை பாரதம் முழுதும் கிரகண கால விரதத்தை அனுஷ்டித்தது என்பதற்கு, வள்ளுவர் வாய்மொழியே சான்று.இந்த நிலையில், 'கிரகணம் என்றாலே நம் நாட்டில் சூரியனைப் (ராகு என்கிற) பாம்பு விழுங்கும் புராணக் கதைதானே; நம் மக்கள் கிரகணம் பற்றிய அறிவியல் அம்சத்தை அறிந்திருந்தனர் என்பதற்கு என்ன சான்று?' என்று சிலர் வாதிடுவது உண்டு. சான்று உண்டா? உண்டு! நம் மக்கள் பழங்காலம் தொட்டே வானவியலில் மிகவும் முன்னேறியிருந்தனர் என்பதற்கு பல பழம்பெரும் வானவியல் நுால்களும், கிரகணத்தை துல்லியமாகக் கணிக்கும் நம் பஞ்சாங்கமுமே சாட்சி. இவற்றுள் ஒன்று ஆர்யபட்டரின் இந்த சந்திர கிரகண வர்ணனை: 'சாதயதி சசி சூர்யம் சசினம் மஹதீ ச பூச்சாயா (ஆர்யபட்டீயம் 4.37). சசி சூர்யம் சாதயதி - சந்திர கிரகணத்தில், சந்திரன் சூரியனை மறைக்கிறது; மஹதீச பூச்சாயா சசினம் (சாதயதி) - பெரிய பூமியின் நிழல், சந்திரனை மறைக்கிறது என்பது இதன் பொருள். நம் முன்னோர், கிரகணத்தின் அறிவியல் விளக்கம் நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கு இந்தக் கூற்றே சான்று.முன்னோரின் அறிவுச் செல்வம், பாரதிய ஞானப் பரம்பரை பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும். நம் அடுத்த தலைமுறையே இதற்காக தன்னை அர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை நாம் கற்று, ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை வெளிக்கொணர வேண்டும். அப்போதுதான் நம் தாய்த் திருநாட்டை உலகின் குரு ஆக்கிடும் நம் கனவு நனவாகும்!ஆர்.ராமச்சந்திரன், சென்னை, சமஸ்கிருத பேராசிரியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaran
ஆக 20, 2024 16:43

முதலில் மொகலாயர்கள்.. அப்புறம் ஆங்கிலேயர்கள்... இப்போ இடது சாரிகள்.. 1000 வர்ஷம் மேலாக இருட்டடிப்பு .. கொஞ்சம் டைம் எடுக்கும் சூடு ஏற ...ஆங்கிலத்தை ஒரு படி பின்னுக்கு தள்ள வேண்டும் ... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய இலக்கியங்களை புகுத்த வேண்டும்...


வேங்கடசுப்பிரமணியன்
ஆக 20, 2024 13:51

தங்களின் வினா நியாயமானது என்று தோற்றம் அளித்தாலும் உண்மை வேறானது. நீண்ட நெடிய அன்னிய படையெடுப்புகளால் நமது அறிவியல் சங்கிலித் தொடர் விடுபட்டது என்னவோ உண்மை. ஆனால் நமது நாட்டின் அறிவியல் தொண்மைகள் கிரேக்க த்திலும் பாரசீகம் மற்றும் ரோமாபுரி நூல்களிலும் விரவி கிடப்பது என்னவோ உண்மை. காரணம் நம்முடைய நற்றமிழும் சம்ஸ்கிருத மொழியும் அன்னிய படையெடுப்புகளால் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது முப்பாட்டன் படித்த தமிழ் எழுத்து நம்மிடம் இல்லை. ஆனால் சீனம் அரபு ஜப்பான் மொழிகள் இன்றும் மறாவடிவில் உள்ளது. ஆகையால் தொண்மைகள் அறிய உதவுகிறது. மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றுவதாக அதனை சிதைத்தவர்களை மேதையாளர்களாக கொண்டாடும் ஞானிகள் நாம். சற்று உற்று நோக்கி வரலாற்றை ஆய்ந்து நமத உண்மை வறலாறு அறிய முற்படுவோம். மேற்கத்திய சிந்தனா முறைகளை களைந்து நமது கீழை சிந்தனைகளுடன் முயல்வோமேயாகில் நமக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அறிவியல் திருடர்கள் தெரிய வரும்


Karthika Siddarth
ஆக 20, 2024 12:35

ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய பின்னர் தான் இது அங்கே இருக்கிறது இங்கே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். செயல்பாட்டில் நமது நாட்டவர் நாம் பயன்பெறும் வகையில் செய்து விட்டுச் செல்லவில்லையா அல்லது நாம் தான் நமது முன்னோர்கள் சொன்னதை செயல்படுத்தவில்லையா ? ஆர்யபட்டர் அப்படிச் சொன்னார் சாணக்கியர் இப்படிச் சொன்னார் என்றெல்லாம் வெளிநாட்டுக்காரன் நமது நாட்டில் கொண்டு வந்து கொட்டிய பின் தான் சொல்கிறோம். அதற்கு முன் நாம் எங்கே சென்று விட்டோம் என்று தெரியவில்லை. மன உளைச்சலில் எழுதியது இது. புரியாதவர்கள் மன்னிப்பீராக.


அப்பாவி
ஆக 20, 2024 09:42

நம்ம நூல்கள் பெருமை பேச மேல்நாட்டு கல்வியை இழிவு படுத்த வேண்டாம். ஆதிமுதல் மேல்நாட்டு கல்வியும், கண்டுபிடிப்புகளுமே அறிவு வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. நம்நாட்டு நூல்களில் காகிதம் உண்டா, ரேடியோ உண்டா, டி.வி உண்டா? கம்பியூட்டர் உண்டா? பழம்பெருமை பேசி ஜல்லியடிப்பரை நிறுத்துங்க. புதிய விஞ்ஞானக் கல்வி புடிக்கலேன்னா ஊடகத்துக்கு வரச்தீங்க. போய் ஓலைச் சுவடியை படிச்சு எத்சியாவது கண்டுபிடிச்சு கொண்டாங்க.


Vijaya Lakshmi
ஆக 20, 2024 10:41

உண்மையிலேயே நீங்கள் அப்பாவிதான். நம் தாய் தகப்பன் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கூட இல்லாமல் பக்கத்து வீட்டு குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாமலே அவர்கள் மீது மரியாதையும் அன்பும் வைப்பது போல இருக்கிறது, உங்கள் கருத்து. என்ன செய்வது. நம் தகுதி என்னவென்பது நமக்கே தெரியாத தருணம். எடுத்துச் சொன்னாலும், அடுத்தவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நாமே ஒத்துக் கொள்ள மறுக்கிறோம் என்பது மிகவும் வேதனை.


Subramanian
ஆக 20, 2024 07:49

அருமை ?


மேலும் செய்திகள்