உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / சிந்தனைக்களம்; நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா?

சிந்தனைக்களம்; நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அராஜக கும்பல்களின் அட்டகாசம்; தங்கள் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி, மக்களுக்கு நன்மை செய்யத் தெரியாத அல்லது விரும்பாத அதிகாரிகள்; அதே அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள் என, பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கின்றனர் அப்பாவி மக்கள். இவர்களுக்கெல்லாம் ஒரே புகலிடம், நீதிமன்றங்கள் தான்.ஆனால், எல்லா துறைகளிலும் திறமையற்றவர்கள், நேர்மையற்றவர்கள் இருப்பதுபோல், நீதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் இருக்கின்றனர். ஆல்பிரட் பேரட்டோவின் 80-20 கோட்பாடு, இவர்களுக்கும் பொருந்தும் என்பதை, சமீப நிகழ்வுகளும், அந்த துறையிலேயே உள்ள, 20 சதவீத நல்லவர்கள் வெளிப்படுத்தும் ஆதங்கங்களும் உணர்த்துகின்றன.

நல்லதல்ல

எந்த மனிதனும் அல்லது நிர்வாகமும், அவர்களின் குறைகளையும், தவறுகளையும், மற்றவர் சுட்டிக்காட்டவும், நடவடிக்கை எடுக்கவும் அஞ்சும் இடத்தில் இருப்பது, அந்த நபருக்கு அல்லது நிர்வாகத்துக்கு நல்லதல்ல. இக்கால நீதிமன்றங்களில், சில நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் அந்த பாதுகாப்பான இடத்தை வலிமையாக பற்றியபடி, தவறிழைக்கின்றனர்.தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சிலர் தீக்குளிக்க முயலும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்பது உணவுக்கு மட்டுமல்ல உரிமைக்கும் பொருந்தும். நானும், தொழிலை மேற்கொள்ளாத ஒரு வழக்கறிஞர் என்பதால், உரிமையோடு இங்கு சில நீதியரசர்களின் ஆதங்கத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சம்பவம் 1

ஒரு நடுத்தர வயது பெண், தன் ஒரே மகளையும், கை, கால் வராத தன் வீட்டுக்காரரையும், வீட்டு வேலைசெய்து காப்பாற்றி வந்திருக்கிறார். மகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து, நல்ல பள்ளியில் படிக்க வைத்தவர், வேலை செய்யும் வீட்டில் கிடைத்த நல்ல உணவை, தான் சாப்பிடாமல் மகளுக்கு கொடுத்து, அவளை சாப்பிட வைத்து மகிழ்ந்திருக்கிறார்; யார் யாரிடமோ கெஞ்சி, வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.அவள் சம்பாதிக்க ஆரம்பித்ததும், தங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்தபோது, திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; 'அவளை யாரோ கடத்திப் போயிருப்பதாக சந்தேகப் படுவதாகவும், எப்படியாவது அவளைக் கண்டு பிடித்துத் தர வேண்டும்' என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி, அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார்.மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம்பெண், 'யாரும் என்னைக் கடத்தவில்லை; நான் மேஜரான பெண்; எனக்குப் பிடித்தவருடன் வாழ்வதற்காக நானே தான் விரும்பிச் சென்றேன்' என்று கூறி இருக்கிறார்.

கண்டுகொள்ளவில்லை

'அதற்காக? உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய்ட்டியே... இது என்ன நியாயம்?' என்று கேட்டிருக்கிறார் நீதிபதி. அப்பெண், பதில் ஏதும் சொல்லவில்லை. 'உன் அம்மா, உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்கிறார்; பேசு' என்றிருக்கிறார் நீதிபதி. தாயின் பேச்சில் மனம் மாறினாளா அந்தப் பெண்? இல்லை. மாறாக, 'கிளம்புறேன்' என்கிறாள். 'இவள் அப்பாவுக்கு இவள் மீது பாசம் அதிகம். அவரிடம் பேசச் சொல்லுங்கள்' என, தாய் மன்றாடுகிறாள்.கண்டுகொள்ளவே இல்லை அந்தப் பெண்; மாறாக, காதலனுடன் காரில் ஏறி, 'விருட்'டென கிளம்பி விட்டாள். இவ்விவகாரத்தில், நீதிமன்றத்தால் ஒன்றுமே செய்ய முடியாது.கை, கால் முடங்கிய நிலையில், பேசவும் முடியாமல், சுவரோடு சுவராக சாத்தி அமர வைக்கப்பட்டிருந்த அத்தந்தையின் கண்ணில் தாரை தாரையாக நீர்.நீதிபதியின் நேரம் வீணாவதை உணர்ந்த அந்த தாய், 'மன்னிச்சிக்குங்கய்யா... நாங்க கிளம்பறோம்...' என்று சொல்ல, 'எங்கேம்மா போவீங்க?' என்கிறார் நீதிபதி. 'ஊருக்குப் போகணும். கையில் காசில்லை. பிச்சை எடுப்பேன். கிடைக்கும் காசை வைத்து ஊருக்குப் போவேன். அங்கு நான் வேலை செய்யிற இடத்துல எனக்கு பணம் குடுப்பாங்க...' எனக் கிளம்பத் தயாரானார். நீதிமன்றமே விக்கித்து நின்றது.அனைவரும் ஜரூராய் செயல்பட்டு, 40,000 ரூபாய் திரட்டி, அந்தம்மாவிடம் கொடுத்து, அனுப்பி வைத்தனர். 'பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணருங்கள்' என்ற வேண்டுகோளுடன் முன்னாள் நீதிபதி உருக்கமான பேச்சை முடித்தார்.

சம்பவம் 2

சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர், 'வழக்கறிஞர் தொழில் மகத்துவமானது. அது கிரிமினல்களின் சரணாலயமல்ல. ஆனால், கடந்த சில வருடங்களாக, வெளி மாநிலங்களிலிருந்து படிக்காமல் முறைகேடாக சட்டப் பட்டங்களை பணம் கொடுத்து வாங்கி வந்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்து தங்கள் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு கேடயமாக வக்கீல் தொழிலை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.'இத்தகையோர், நீதிமன்றங்களுக்கு வந்து கண்ணியமாக தொழில் புரிவதில்லை. கருப்பு - வெள்ளை உடை அணிந்து, ரவுடிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, போலீசை மிரட்டியும், தடுத்தும், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றனர்.'போலீசை மட்டுமன்றி, நேர்மையாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களையே இவர்கள் மிரட்டுகின்றனர். கூலிப்படை போன்று செயல்படும் இவர்கள், சட்டத்துக்குப் புறம்பான தனி அமைப்பாகவே செயல்படுகின்றனர்.'மக்களும், போலீஸ் மீதும், நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இழந்து, இத்தகையோரை அணுகுகின்றனர். இது கண்ணியமாக தொழில் புரியும் வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறைக்கும், நாட்டிற்கும் பெரும் பாதகமானது. இத்தகையோர் மீது காவல்துறையும், பார் கவுன்சிலும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு உள்ளார்.இப்படி வேதனையுடன் கருத்து தெரிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுவிட்டார் என்றால், பாருங்கள்! தவறு செய்பவர்கள், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, தங்களின் செல்வாக்கு, பணபலம் அனைத்தையும் உபயோகித்து, இறுதி வரை போராடி வெற்றியும் அடைந்து விடுகின்றனர்.சமீபத்தில், தன் சொந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த, ஒரு காவல் துறை உயரதிகாரியை பலிகடாவாக்கி, சுயமரியாதையை இழந்து அவமானப்பட்டு நின்ற நீதிபதியைப் பற்றி, ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் திட்டித் தீர்த்தனர்.

வசதி படைத்தவர்க்கு?

நீதிமன்றங்களில் சாமானியர்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள், வாய்தாவில் வருடக்கணக்கில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அரசியல் தலைவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு, சுய கவுரவம், பதவி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் மட்டும், வெகுவிரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது, அதுவும் செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சாதகமாகவே. ஒன்றிரண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கு.குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் தான், நீதிமன்றங்கள் கவனத் துடன் செயல்பட வேண்டும் என்று கேள்விப்பட்டிருக் கிறோம்.ஆனால், ஒரு அரசு அலுவலர் நிரபராதி என்று ஒரு நீதிமன்றம் சொன்னதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யும் அவலங்கள், இங்கு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.சூரியனின் மகத்துவம், அதன் சுட்டெரிக்கின்ற வெப்பக்கதிர்களில் இல்லை; அற்பமான சிறிய மலரையும், அக்கறையோடு மலர வைக்கும் அதன் ஆற்றலில் தான் வெளிப்படுகிறது.நீதிமன்றத்தில், இறைவனுக்கு நிகரான பொறுப்பில் இருக்கும் உண்மையான நேர்மையான நீதிமான்களே... தயவு செய்து விழித்தெழுங்கள்! உங்களிடையே ஊடுருவியிருக்கும் கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து, களையெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்!ஒரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, அடுத்த நீதிமன்றத்தால் மாற்றப்பட்டால், அதன் பின்னணியை தீவிரமாக ஆராயுங்கள்; அந்த தீர்ப்பை விலைக்கு வாங்கிக் கொடுத்த தரகர் யாரென்று கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு தீர்ப்பும், ஒரு தனி மனிதனின் உயிராதாரமாக இருக்கும்போது, தவறான தீர்ப்பை தன் சுயலாபத்துக்காக விற்ற நீதிபதியை, நீதித் துறையில் நிலைக்கச் செய்வது சமுதாயத்துக்கு ஆபத்தானதுமா.கருணாநிதி, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்.அலைபேசி: 98404 88111இ - மெ யில்:gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gajageswari
நவ 17, 2025 05:27

என்று திராவிடம் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்தது அன்றே மரியாதை, நீதி, நியாயம், நேர்மை ஒழுக்கம் அழிந்துவிட்டது


Saai Sundharamurthy AVK
நவ 16, 2025 21:50

நாணயம், நேர்மை, பண்பு இல்லாத திருட்டு, உருட்டு, பேசி பிழைக்கும் நபர்களால் உருவான திமுக போன்ற கட்சிகள் தான் எல்லா தவறுகளுக்கும் காரணம்......


பாதிக்கப்பட்டவன்
நவ 16, 2025 20:59

ஒரு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டாலும் பணம் இருந்தால் சுப்ரீம் கோர்ட்டில் சென்று அந்த வழக்கை ரத்து செய்ய முடியும் அதேபோல் சாமானிய மக்கள் இன்று வரை நீதித்துறை நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டன ஊழலின் உறைவிடமாக மட்டுமே நீதி அரசர்கள் வேலை செய்கின்றன முக்கியமாக எத்தனையோ சாமானிய மக்கள் தங்கள் பணத்தை வீடு வாங்க சேமித்து வைத்து அதை பில்டர்களிடம் இழக்கின்றனர் ஆனால் அந்த பில்டர்கள் இந்த நீதித்துறையின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்களுக்கு சாதகமான தீர்ப்பை மாற்றுவதும் இல்லை அதை தாமதம் ஆக்குவதும் மட்டுமே நீதித்துறை தற்போது செய்து கொண்டிருக்கிறது 10 வருடங்களுக்கு மேல் ஒரு தீர்ப்பு வரவில்லை என்றால் பின் எதற்கு இந்த நீதித்துறை நம் நாட்டுக்கு தேவை? அரசியல் ஆதாயத்திற்கும் பணம் இருந்தால் உடனடியாக இரவோடு இரவாக தீர்ப்பு விற்கப்படும் ஆனால் எந்த ஒரு சாமானிய மக்கள் தீர்ப்பு உடனடியாக கிடைத்தது என்று சரித்திரம் இல்லை நம் நாட்டிற்கு இப்பொழுது மிகவும் தேவை நல்ல நீதியரசர்களோ அல்லது நல்ல நீதிமன்றம் அல்ல ஒரு நல்ல அரசாங்கத்தால் தான் நீதியை நிலை நாட்ட முடியும் அதற்கு நல்ல அரசு அமையும் என்ற நம்பிக்கை உங்களில் யாருக்காவது இருக்கிறதா?


Krishna
நவ 16, 2025 19:59

Sack& Punish 95%Vested-Biased Judges Not Punishing Any Power-Misusing& MegaLooting Widespread RulingAlliancePartyMen, their Stooge Officials esp Police, Judges& Bureaucrats, Case/News/Vote/Power Hungry Conspiring-SelfSaint But Dreaded Criminals incl VestedFalse Complaint GangsWomen, SCs, Groups, Advocates etc. Appoint Judges Only from Aged NonAdvocate Common People esp Affected Parties minm 45Age for Maturity With Post-Selection Law Trainings& MeritsOnly Promotions till SC UnBiased, Fast, Quality Judgements at CheapCostsSimple Procedures-DirectPetitioners/ JrAdvocates


என்றும் இந்தியன்
நவ 16, 2025 18:16

"திறமையற்றவர்கள், நேர்மையற்றவர்கள் நீதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் இருக்கின்றனர்". 100% தவறு. ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அல்லவே அல்ல 99% திறமையவற்றவர்கள் நேர்மையற்றவர்கள் தான் அநீதித்துறையில் உள்ளனர். உங்களிடம் பணம் உள்ளதா உங்களுக்கு என்ன விதமான தீர்ப்பு வேண்டுமோ அதைத்தரும் இந்திய அநீதித்துறை. உ.ம். ஒரு கொலை நிகழ்ந்தது. பணமிருந்தால் இந்த மாதிரி தீர்ப்பை வாங்கலாம் இல்லை என்றால் தீர்ப்பு இந்த மாதிரியும் இருக்கும். பணமிருந்தால். அதாவது அந்த பணத்தை அநீதித்துறைக்கு கொடுத்தால் "அவர் கொலை செய்யவில்லை அவரது கத்தி தான் கொன்றது ஆகவே கத்திக்குத்தான் 10 ஆண்டு சிறை" . அநீதித்துறைக்கு பணம் கொடுக்க இயலாவிட்டால் "இன்னொருவன் கத்தியால் கொலை செய்வதை இவன் பார்த்துக்கொண்டிருந்த படியால் அதைத்தடுக்காமல் அந்த கொலை செய்வதற்கு இவன் ஆதரவு கொடுத்தமாதிரி ஆவதால் இவனுக்கு 10 வருட சிறை தண்டனை இந்த அநீதித்துறை தீர்ப்பு வழங்குகின்றது"


A.Gomathinayagam
நவ 16, 2025 14:10

ஐம்பது ஆண்டுகளுக்கு சட்டத்தை நன்கு படித்த நீதிபதிகளும் வழக்கு உரைஞ்சர் களும் இருந்தார்கள் ,சட்ட பிரிவுகளை வைத்து தான் வாதாடுவது மாற்று தீர்ப்பும் இருந்தன, இன்று நீதிபதிகளை எப்படி வளைப்பது என்று அறிந்து அதன் படி தீர்ப்பு வாங்கும் நிலை


தமிழ்வேள்
நவ 16, 2025 13:02

ஆடிட்டர்கள் போல வக்கீல்களுக்கு அப்ரென்டிஸ் முறை இருந்தவரை நீதித்துறை நன்றாக இருந்தது... வக்கீல்களுக்கு குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் அப்ரென்டிஸ் முறை மீண்டும் தேவை.. நீதிபதிகள் நேரடியாக நியமிக்கப்படுவது தடுக்கப்பட்டு அகில இந்திய தேர்வு முறை மூலம் மட்டுமே நியமிக்க பட வேண்டும்...ஒரு கட்சி சார்ந்த ஒரு வழக்குக்கு அதிக பட்சம் இரண்டு வக்கீல்களுக்கு மேல் கோர்ட்டில் அனுமதிக்க கூடாது...


Sekar Times
நவ 16, 2025 11:15

நிருபிக்க முடியாத நிஜங்கள் பணம் படைத்த பொய்யிடம் தோற்றுக் கொண்டுதான் உள்ளன.


Sun
நவ 16, 2025 09:28

நாட்டின் யதார்த்தத்தை உணர்த்தும் அற்புதமான கட்டுரை.


Kalyanaraman
நவ 16, 2025 08:54

ஒரு மொழி கெட்டுப் போவதற்கு காரணம் அந்த மொழி பேசும் மக்கள். அதுபோலவே, நீதித்துறை கெட்டுப் போனதற்கு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மட்டுமே காரணம். அவர்களால் மட்டுமே அதை மீட்டெடுக்கவும் முடியும். முக்கியமாக வெளி மாநில "ரப்பர் ஸ்டாம்ப் சட்டக் கல்லூரிகளை" தடை செய்ய வேண்டியதும் இவர்களது முக்கிய பொறுப்பு. மேலும் அதை அங்கீகரிப்பதை பார் கவுன்சில்கள் நாடு முழுவதும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவர்களை ஒரு சிறப்பு தேர்வு உருவாக்கி அதில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மீதம் உள்ளவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் இவை அனைத்தும் லஞ்சம் வாங்கும் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருக்கும் போது இப்படி ஒரு முடிவே எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை.


முக்கிய வீடியோ