உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / சிந்தனைக்களம்: வடக்கும், தெற்கும் சங்கமிக்கும் விழா

சிந்தனைக்களம்: வடக்கும், தெற்கும் சங்கமிக்கும் விழா

- சி.பி.ராதாகிருஷ்ணன் -துணை ஜனாதிபதிகாசி தமிழ் சங்கமம் - 4வது பதிப்பை முன்னிட்டு உங்களுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2022-ல் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் போது, முதலாவது காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டது முதல், இந்நிகழ்வு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கிய நிகழ்வாக, கங்கையின் கலாசாரமும், காவிரியின் பண்பாடும் பரிமாறிக் கொள்ளப்படும் விழாவாக, வடக்கும் தெற்கும் அதன் பொதுப் பாரம்பரியத்தின் வழி இணைந்து கொண்டாடும் விழாவாக வளர்ந்து நிற்கிறது. நவம்பர் 30ல் ஒலிபரப்பான, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தச் சங்கமத்தைப் பற்றி மிக அழகாகப் பேசினார். 'காசி- தமிழ்ச் சங்கமம் என்பது, உலகின் மிகத் தொன்மையான மொழியும், உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றும் சங்கமிப்பதாகும்' என்று கூறினார். மேலும், 'தமிழ் கலாசாரம் உயர்வானது; தமிழ் மொழி மேன்மையானது; தமிழ் இந்தியாவின் பெருமை' என்று தமிழைப் போற்றிப் பேசினார். தமிழ் அதன் தகுதிக்குரிய மிக உயரிய இடத்தில் வைத்துப் போற்றப்படுவது மகிழ்ச்சியையும், பெருமையையும் ஒருங்கே அளிக்கிறது. இதற்கு முந்தைய காசி தமிழ் சங்கமம் நிகழ்வுகளிலும் நான் கலந்து கொண்டு உள்ளேன். இச்சங்கமத்தில் தமிழ் மக்களும், காசி நகர மக்களும் ஆர்வமுடன் பங்கு பெற்று வருவதும், இதன் தாக்கம் முந்தைய வருடத்தை விட ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவதையும், கண்கூடாகக் காண்கிறேன்.

தமிழாய்வு

காசி தமிழ் சங்கமத்தில் இந்த ஆண்டின் கருப்பொருள், 'தமிழ் கற்கலாம், தமிழ் கற்போம்' என்பது. இந்தி மொழி அறிந்த ஐம்பது தமிழாசிரியர்கள், சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வாரணாசி வந்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். தமிழ் ஆசிரியர்கள், வாரணாசி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, ஐம்பது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பதினைந்து நாட்கள் அடிப்படைத் தமிழ் கற்பிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி பெரும் போற்றுதலுக்கு உரியது. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதி விரும்பிய வண்ணம் தேமதுரத் தமிழோசை இன்று காசி பெருநகரம் முழுதும் ஒலிக்க இருப்பது, உள்ளபடியே தமிழர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வாகும். மேலும் ஒரு முக்கிய பகுதியாக, தென்காசியில் இருந்து காசிக்கு அகத்திய முனிவர் வாகனப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. காசியுடன் தமிழ்நாட்டின் பண்டைய தொடர்பை நினைவூட்டும் வகையில், பாண்டிய மன்னர் அதிவீர பராக்கிரம பாண்டியன் வடகாசிக்கு சென்றதன் பின் தனது நாட்டில் ஒரு நகரத்திற்கு, 'தென்காசி, தட்சிண காசி' என்று பெயரிட்டார். காசியை தெற்கில் பிரதிபலிக்கும் புனித நகரம் என்பதால் தான், 'தென்காசி' என்ற பெயர் பிறந்தது.

செம்மொழி

மேலும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 300 கல்லுாரி மாணவர்கள், 10 தொகுதிகளாக தமிழ் கற்றல் திட்டத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு வருகை தந்து, இருவழி கலாசார இணைப்பை வலுப்படுத்த உள்ளனர். காசி தமிழ் சங்கமம் நான்காம் பதிப்பின் நிறைவு விழா, ராமேஸ்வரத்தில் நடப்பது, இதற்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம் ஆகியவற்றின் பிணைப்பை பறை சாற்றும் வகையில் இது அமைந்துள்ளது. காசி தமிழ் சங்கமம், 'ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்'தின் உண்மையான சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. பாரதியின் விருப்பத்தை சாத்தியப்படுத்திய, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கல்வி அமைச்சகத்திற்கும், உத்தர பிரதேச அரசிற்கும், ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, கலாசாரம், சுற்றுலா, ஜவுளி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களின் பங்களிப்பிற்கும், என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காசி தமிழ் சங்கமம், மாபெரும் பண்பாட்டு ஆன்மிக அறிவுப் பயணமாக அமைய வாழ்த்துகிறேன். இந்தச் சங்கமம் என்றும் ஒளிரட்டும்; இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த பிணைப்பு வலுப்பெறட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை