குழந்தையின்மை, மிகப்பெரிய வலி. சமூகத்தில் ஏச்சு, பேச்சுக்கு ஆளாகி, மனம், உடலளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். 'கற்புநிலை, இரு பாலருக்கும் பொது' என்பது போன்றுதான், குறைபாடும் இரு பாலருக்கும் பொதுவானது. குறை, பெண் தரப்பில் மட்டுமின்றி ஆண் தரப்பிலும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கருவுறுதல் தாமதமாதலை, பெண் தரப்பு பிரச்னையாக மட்டுமே பார்க்காமல், 'நீ பாதி, நான் பாதி' என்று கருதி, இருவருக்கும் சமமான பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆண்களின் உடல்நலம் பொறுத்தும் பிரச்னை ஏற்படுகிறது. விந்தணுக்களில் உள்ள பாதிப்பை, ஒரு பரிசோதனை வாயிலாக மட்டும் சொல்லி விட முடியாது. ஆரோக்கியமான விந்தணுக்கள் உள்ளவர்களுக்கும், உயிரணுக்களின் டி.என்.ஏ.,வில் பாதிப்பு இருக்கலாம்.மனித உடலில் ஏராளமான அணுக்கள் உள்ளன. அதில், விந்தணுக்களில் மட்டுமே 'நியூக்களியஸ்' தலைப்பகுதியில் இருக்கும். இதனால் மரபணுக்கள் வெளிப்படையாக இருக்கும். அதனால், அவை சேதமடைய வாய்ப்பு அதிகம். மிகவும் இயல்பாக இருக்கும் ஆண்களுக்கு, மரபணுக்கள் பாதிக்கப்படுவதை, 'டி.என்.ஏ., சேதம்' என்கிறோம். இதனால், கருவுறுதலில் பிரச்னை, பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களிலும் குறைபாடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு பல முறை கருச்சிதைவு ஏற்படலாம். இதை கண்டறிய பிரத்யேக பரிசோதனைகள் உள்ளன. பாதிப்பு ஏன்
இன்றைய அறிவியல் வளர்ச்சியால், இருபாலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களுக்கு டி.என்.ஏ., சேதம் இருந்தால், கட்டாயம் வாழ்க்கை முறை மாற்றம் பரிந்துரைக்கப்படும். புகைப்பிடித்தல், மது அருந்துவதை நிறுத்துவது, உடல் எடை குறைப்பது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொழுப்பு சத்து, சர்க்கரை அதிகரிப்பு, ஆண், பெண் இருவரில் யாருக்கு இருந்தாலும் கருவுறுதலை கட்டாயம் பாதிக்கும்.பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிறவி பிரச்னை, நீர்கட்டிகள், தசைக்கட்டிகள், தொற்று உள்ளிட்டவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, பெண்களுக்கு குறைந்த வயதிலேயே கருப்பையில் பிரச்னை ஏற்படுகிறது. பெண்கள் வயதுக்கு வந்த பின்பே, 'ஈஸ்ட்ரோஜென்' சுரக்கிறது. இதற்கு பின், அவர்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும். நலனில் கவனம்
உடல் நலன் குறித்து போதியளவில் அக்கறை இருக்க வேண்டும். உடற்பயிற்சி மிகவும் முக்கியம். படிப்புக்கு கொடுக்கக் கூடிய அதே அளவு முக்கியத்துவம், விளையாட்டு மற்றும் உணவுக்கும் கொடுக்க வேண்டும்.தற்போது, குறைந்த வயதில் பூப்படைவது அதிகரிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு முறையை, குழந்தை பருவத்தில் இருந்தே பழக்கப்படுத்த வேண்டும். பழைய பழக்கவழக்கங்களை அதிகளவில் மாற்றிவிட்டோம். இதனால், பெண்கள் உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர். குழந்தை பிறக்கும் முன்பே, 30 சதவீத கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகளாக மாறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இனிப்புகளை தவிர்த்து பழங்களை கொடுக்கலாம். இனிப்புகள், நமது உணவு முறையை ஒரே தலைமுறையில் தலைகீழாக மாற்றியுள்ளது. உடலுக்கு சத்து தரும் தானியங்கள், கரும்பு சர்க்கரையை பயன்படுத்தலாம். சாத்தியம் தான்
திருமணத்துக்கு முன், ஆண், பெண் இருவரும், கட்டாயம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. திருமணத்துக்கு முன் பரிசோதனை மேற்கொள்கிறார்களோ இல்லையோ, கருத்தரிப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனை அவசியம். 'ஹீமோகுளோபின்' அளவு சரியாக உள்ளதா, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பது போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.இன்றைய மருத்துவ வளர்ச்சியால், கர்ப்பிணிகள், சிசு இறப்பு முற்றிலும் குறைந்துள்ளது. முறைப்படியான மருத்துவ கவனிப்பால் இது சாத்தியமாகியுள்ளது. உணவு முறை, உடல் எடை, மனநலம் சரியாக இருப்பது போன்றவற்றை கையாண்டால், சுகப்பிரசவம் சாத்தியமே! கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறியல்நிபுணர். ஆண்டுக்கு, 5,000 பேருக்கு சிகிச்சைஅளிக்கிறார். முப்பதாயிரத்துக்கும் அதிகமானபிரசவங்களை கையாண்டவர். கருத்தரிப்பு பிரச்னைகள் குறித்த பல நுால்களின் ஆசிரியர்.இவரது பிரத்யேகமான சிகிச்சையான 'என்டோமெட்டிரியோசிஸ்' முறைக்கு அமெரிக்ககாப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 'இண்டியன் சொசைட்டிஆப் அசிஸ்டட் ரீபுரெடக்சன்' அங்கீகார குழுவின் உறுப்பினர்.- மிருதுபாஷிணி