மனம் திறந்து பேசுவது எப்படி? பெற்றோருக்கு யுனிசெப் தரும் வழிகாட்டல்கள்
மாணவர்கள் பதின் பருவத்திற்கு வரும் போது, அவர்களோடு பேசுவதும் அவர்களைப் புரிந்துகொள்வதும் பல பெற்றோர்களுக்கு சவாலாக மாறுகிறது. இந்த வயதில் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களால் அவர்கள் பல நேரங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பகிரத் தயங்குகிறார்கள். இதற்கு யுனிசெப் அமைப்பு, பதின் பருவ மாணவர்களிடம் எவ்வாறு பெற்றோர் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளலாம் என சில ஆலோசனைகளை வழங்குகிறது. ஆர்வம் காட்ட வேண்டும்
முதலாவதாக, மாணவர்களுக்கு எது முக்கியமாகத் தோன்றுகிறதோ, அதில் பெற்றோரும் உண்மையான ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளிப் பாடம், விளையாட்டு, அவர்கள் விரும்பும் பொழுதுபோக்குகள் அல்லது நண்பர்கள் வட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது, அவர்கள் மீது உங்களுக்கு உள்ள அக்கறையைக் காட்டும். அதே போல பெற்றோரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, இருவருக்கும் பொதுவான விருப்பங்களைக் கண்டறிந்து உரையாடலைத் தொடங்கலாம். உங்கள் முடிவுகளை மட்டுமே அவர்களிடம் திணிக்காமல், பல்வேறு விஷயங்களில் அவர்களின் கருத்துகளையும் பார்வைகளையும் கேட்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை மதித்து விவாதிக்கப் பழகும் போது தான் அவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். அதே போல், மாணவர்கள் பேசும் போது முழு கவனத்தையும் அவர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை இடைமறித்துக் குற்றம் சாட்டுவதோ அல்லது முன்கூட்டியே தீர்ப்பு வழங்குவதோ கூடாது. பேசும் போது கண்களைப் பார்த்துப் பேசுவது, தலையசைப்பது போன்ற உடல்மொழிகள், நீங்கள் அவர்களைக் கவனிக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். நாம் முறையாகக் கேட்காத போது, தங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற தனிமை உணர்வு அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. விரிவாகப் பேச அனுமதிக்க வேண்டும்
இதைத் தவிர, மாணவர்களின் மனதை ஆழமாக அறிய, ஒற்றை வரியில் விடை சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்க வேண்டும். எதனால் மனவருத்தம் ஏற்பட்டது, அந்த சூழ்நிலையில் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை விரிவாகப் பேச அனுமதிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை நாம் சரியாகத் தான் புரிந்து கொண்டோமா என்பதை உறுதி செய்ய, அவர்கள் கூறியதை சுருக்கமாகத் திரும்பக் கூறித் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பாராட்ட வேண்டும்
மன அழுத்தம், பயம் அல்லது தோல்விகளைப் பற்றிப் பேசும் போது, தைரியமாக முன்வந்து பகிர்ந்ததற்காக அவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டும். கடினமான மனநிலையை வெளிப்படுத்துவது எளிதல்ல என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளின் அச்சங்களையும், கோபத்தையும் இயல்பானது என ஏற்றுக்கொண்டு, “இந்தச் சூழ்நிலையில் உன் இடத்தில் நான் இருந்தாலும் இப்படித் தான் யோசித்திருப்பேன், நாம் சேர்ந்து இதற்குத் தீர்வு காண்போம்” என்று தைரியம் சொல்ல வேண்டும். பொறுமையோடு காத்திருக்க வேண்டும்
இதைத் தவிர, சில நேரங்களில் பிள்ளைகளால் தங்களுக்குள் நடக்கும் குழப்பங்களை உடனடியாக விவரிக்க முடியாமல் போகலாம். அத்தகைய சூழலில் தொடர்ந்து பேசி விவரங்களை அறிய அவர்கள ை வற்புறுத்தக் கூடாது. எந்த நேரத்திலும் பெற்றோரிடம் பேசலாம் என்ற பாதுகாப்பான சூழலை உருவாக்கிவிட்டு, அவர்கள் தயாராகும் வரை பொறுமையோடு காத்திருக்க வேண்டும். உரையாடல் என்பது எப்போதும் அறிவுரையாகவோ அல்லது பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அன்றாட நிகழ்வுகளில் நடந்த வேடிக்கையான விஷயங்களைப் பகிர்வதும், ஒன்றாகச் சிரித்து மகிழ்வதும் மிக முக்கியம்.