ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஊழியர்களுக்கு நிவாரணம் தருமா?
ஓய்வூதியம் என்பது வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், முதுமைக் காலத்தில் ஒருவரின் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் விஷயமாகும். கடந்த, 2004ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில், கணிசமான பகுதி ஓய்வூதியத்திற்கு சென்றதால், அதை குறைக்கவே புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது.உதாரணமாக, 2023 - 24ம் நிதியாண்டில், மத்திய பட்ஜெட்டில், 2.3 லட்சம் கோடி ரூபாயும், மாநில அரசுகளின் பட்ஜெட்டில், 5.2 லட்சம் கோடி ரூபாயும் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்டது. அதாவது, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருவாய் செலவினத்தில், ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு, 12 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது.இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டங்களும் நடத்தி வந்தனர். இந்தச் சூழ்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்த திட்டத்தை பெரும்பான்மையான ஊழியர்களை கொண்டுள்ள ரயில்வே உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் வரவேற்றாலும், சில தரப்பினர் அதிருப்தி தான் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, 23 லட்சம் ஊழியர்கள் பயனடைவர்; தற்போதைய புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறவும் வாய்ப்பு வழங்கப்படும் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது. தற்போது எதிர்க்கட்சிகள் ஆளும் ஹிமாச்சல பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் மட்டுமே பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதனால், அந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் அமலாக்க வேண்டும் என்ற விவாதங்கள் தீவிரமாக எழுந்த நிலையில், இந்தாண்டு சில மாநிலங்களில் நடைபெற்ற உள்ள சட்டசபை தேர்தலையும் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.இதனால், பா.ஜ., ஆளும் பல மாநிலங்கள், இந்த திட்டத்தை பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களும் இதுபற்றி விவாதித்து, பிரச்னைகளையும், நன்மைகளையும் அலசி ஆராய்ந்து, அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கலாம். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய ஓராண்டில் பெற்ற அடிப்படை சம்பளத்தின் சராசரியில், 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறலாம். இத்திட்டத்திற்கு தேவையான நிதியாக, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், 18.5 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் வழங்கும். அதேநேரத்தில், ஊழியர்கள் தங்களின் பங்களிப்பாக, 10 சதவீத தொகையை வழங்குவர். அத்துடன், இந்த ஓய்வூதிய திட்டமானது, பழைய ஓய்வூதிய திட்டம் போல இருக்காது என்றாலும், வரையறுக்கப்பட்ட பணப்பலனை அரசு ஊழியர்கள் ஓய்வூதியமாக பெறுவதை உறுதி செய்யும். அத்துடன், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பாதுகாப்பையும் வழங்குவதுடன், அகவிலைப்படி நிவாரணத்தை சரி செய்வதால், பணவீக்கத்தில் இருந்தும் ஓய்வூதியர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.இருப்பினும், அமலுக்கு வரவுள்ள ஓய்வூதிய திட்டத்தால், அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது. அப்படி நிதிப் பற்றாக்குறை ஏற்படும் போது, அதை மத்திய அரசும், இந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்கவுள்ள மாநில அரசுகளும் வேறு வகையில் சரி செய்ய வேண்டியது அவசியம்.