லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்றான, பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா, அக்கட்சி ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரகண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, சுதந்திர இந்தியாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை உத்தரகண்ட் பெற்றுள்ளது.கோவா மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது என்றாலும், அது, சுதந்திரத்திற்கு முன் போர்த்துகீசியர்கள் ஆளுகையின் போது அமலுக்கு வந்ததாகும்.பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறிய தருணத்தில் பேசிய உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 'நாடு முழுதும் உள்ள மக்கள் நீண்ட நாட்களாக கோரி வரும் மசோதாவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இது, யாருக்கும் எதிரானது அல்ல. எந்த விதமான பாகுபாடும் இன்றி, அனைத்து பிரிவினருக்கும் சமமான உரிமையை, பொது சிவில் சட்டம் வழங்கும். அவசியம் எனில், எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. உத்தரகண்டை தொடர்ந்து, ராஜஸ்தான் உட்பட, பா.ஜ., ஆளும் மற்ற மாநிலங்களும், இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்ட துவங்கியுள்ளன.கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, நாடு முழுவதுக்குமான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அரசியல் சூழ்நிலை காரணமாக, நாடு தழுவிய பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஒரு மாநில அளவில் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. உத்தரகண்டில் இனி திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகளே அமலில் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை யாரும் திருமணம் செய்ய முடியாதபடி கடும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும், 'லிவ் இன்' முறை அங்கீகரிக்கப்பட்டு உள்ளதுடன், அவர்கள் சேர்ந்து வாழ துவங்கிய ஒரு மாதத்தில், தங்களின் வாழ்க்கை ஏற்பாட்டை பதிவு செய்ய வேண்டும் என்பது உட்பட, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும், இந்த முறையில் வாழும் ஜோடிக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதும் பாராட்டத்தக்கதே. இதன் வாயிலாக, வரும் காலங்களில் பாலின சமத்துவம் மேம்படுவதுடன், பெண்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்பதில் மாற்றமில்லை. அதேநேரத்தில், இந்த சட்ட விதிகள் முறைகேடாக பயன்படுத்த முடியாத வகையில் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். பல விதமான மத நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தை பின்பற்றும் மக்களுக்கு, ஒரே விதமான கிரிமினல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது, ஒரே விதமான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது நியாயமானது தான். ஆனாலும், நாடு தழுவிய அளவில், இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்துவது, மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்பதில் மாற்றமில்லை.இருப்பினும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பிரிவு மக்களுக்கும் ஏற்ற வகையில், நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டம் அமலாகும் என்பதில் மாற்றமில்லை. அதற்கான ஒரு முன்னோட்டமாகவே, பா.ஜ., கட்சி ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமலாகி உள்ளது. மேலும், நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் போது, அந்த சட்டமானது, சமூக நீதி மற்றும் பொதுமக்களின் நலனையும் பாதுகாக்கும் என்பதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மக்களையும், எதிர்க்கட்சியினரையும், இந்த விஷயத்தில் திருப்திபடுத்த வேண்டியது அவசியமாகும்.