உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / குடியுரிமை திருத்த சட்டம்: அச்சத்தை தீர்ப்பது அவசியம்

குடியுரிமை திருத்த சட்டம்: அச்சத்தை தீர்ப்பது அவசியம்

நம் நாட்டில் முதல் முறையாக, 1955ல் குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது. அதில், சில திருத்தங்கள் செய்து, 2019ல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, சி.ஏ.ஏ., என அழைக்கப்படும், குடியுரிமை திருத்த சட்டத்தை பார்லிமென்டில் நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில், மத ரீதியான அடக்குமுறைகளுக்கு ஆளாகி, அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக, 2014 டிசம்பர், 31க்கு முன் குடியேறிய, ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் போன்ற சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியும். இந்த குடியுரிமை திருத்த சட்டம், 2019ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டாலும், நான்கு ஆண்டுகளாக அமலுக்கு வராமல் இருந்தது. அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தச் சட்டம் அமலுக்கு வருவதாக, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தகுதியானவர்கள், இந்திய குடியுரிமை பெறுவது தொடர்பான விபரங்கள், விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சி.ஏ.ஏ., தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்ற, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் அறிவிப்பு, எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், குடியுரிமை வழங்கும் விவகாரமானது, மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். சி.ஏ.ஏ.,வின்படி, இந்திய குடியுரிமை கோருவோரின் விண்ணப்பங்களை, மத்திய அரசின் கீழ் இயக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளும், தபால் துறையினரும் தான் பரிசீலனை செய்ய உள்ளனர். இந்த விவகாரத்தில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை, மத்திய புலனாய்வு நிறுவனங்கள் கவனிக்க உள்ளன. எனவே, மாநில அரசு மற்றும் மாநில போலீசாரின் பங்கு மிக மிக குறைவே.ஒவ்வொரு மாநிலத்திலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் இயக்குனர் தலைமையிலான உயர்மட்ட குழு தான், குடியுரிமை வழங்கும் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க உள்ளது. இந்த உயர் மட்ட குழுவில், உளவுத்துறை, தபால் துறை, தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகளுடன், மாநில உள்துறை அமைச்சக பிரநிதிநிதி மற்றும்டிவிஷனல் ரயில்வே மேலாளர் போன்றோரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பர். 'சி.ஏ.ஏ.,வானது, இந்தியாவில் வசிக்கும் எந்த தனி நபரின் குடியுரிமையையும் பறிக்காது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், மத ரீதியான வேறுபாடுகள் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகளும், மதம் சார்ந்த அமைப்புகளும் குரல் எழுப்புவது சரியானதல்ல' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்தச் சட்டம் அமலாக்கத்தை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சி.ஏ.ஏ., நிறைவேற்றபட்ட போதே, குடியுரிமை வழங்கும் விஷயத்தில், முஸ்லிம்களை சேர்க்காமல் விட்டது சரியல்ல. அதுமட்டுமின்றி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள், சட்ட விரோதமாக குடிபுகுந்தவர்களாக முத்திரை குத்தப்படுவர் என்றும், சிலர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, சி.ஏ.ஏ., தொடர்பாக, அண்டை நாடுகளை ஒட்டிய மாநிலங்களை சேர்ந்தவர்களை மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இந்தச் சட்டமானது, அரசியல் ரீதியாகவோ அல்லது தேர்தல் ரீதியாகவோ உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதல்ல. சட்டவிரோதமாககுடியேறுபவர்களை தடுக்கவும், குடியுரிமை வழங்கும் விஷயத்தை முறைப்படுத்தவுமே கொண்டு வரப்பட்டது என்பதை விளக்க வேண்டும். மொத்தத்தில் குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை போக்கினால், அதுவே போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி