உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தம் சிறப்பானதே!

ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தம் சிறப்பானதே!

'ஆசியான்' அமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், ஏற்கனவே இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து, 2010ம் ஆண்டு முதல், நடைமுறையில் உள்ளது. அத்துடன், வேறு சில நாடுகள் உடனும் இதுபோன்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் முடிவடைந்து, இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்த ஆண்டின் இறுதியில் கையெழுத்தாகும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். அதே நேரத்தில், இந்த ஒப்பந்தத்தால், 2028ம் ஆண்டு முதல் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், போலந்து, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய முக்கியமான கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியனாகும். இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, 2007ம் ஆண்டில் துவங்கியது. இடையில், 2013ல் சில பிரச்னைகளால் தடை ஏற்பட்டது. இருப்பினும், மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கி, 18 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. அதனால், அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் இது தாய் என, வர்ணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், இந்தியா உட்பட, பல நாடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்திய பொருட்கள் மீதான வரிகளை கடுமை யாக உயர்த்தியுள்ளார். அதனால், இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. அதற்கு, நம் நாட்டின் ஏற்றுமதியில், 18 சதவீதம் அமெரிக்காவை சார்ந்திருப்பதே காரணம். அப்படிப்பட்ட நிலையில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மாற்று சந்தைகளை ஏற்படுத்தி தரும் வகையில், ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் வாயிலாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கா சந்தையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவில் பாதுகாப்பு துறை உற்பத்தி, ஜவுளி, காலணிகள், கடல்சார் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் மின்னணு உற்பத்தி துறைகள் பயனடையும் என்று கூறப்படுகிறது. கடந்த, 2024 - -25ம் ஆண்டில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் நாடுகள் இடையேயான இருதரப்பு வர்த்தகம், 12.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதில், ஏற்றுமதி, 6.94 லட்சம் கோடி; இறக்குமதி, 5.56 லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதம் மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்காகும். இந்த ஒப்பந்தம் வாயிலாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள, 27 நாடுகளுக்கும், இந்தியர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். அதேநேரத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கார்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்கள், இயந்திரங்கள், ஒயின்கள் போன்றவற்றின் மீதான வரிகள் நீக்கப்பட்டு, விலை குறைவாக இந்தியர்களுக்கு கிடைக்கும்.இந்தியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா தொடர்ந்து வரி நெருக்கடி அளித்து வருகிறது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இழுபறியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, அமெரிக்காவுக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதுடன், உலக சந்தையில் அமெரிக்காவின் முக்கியத்துவம் குறையும் என்றும் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், இந்த ஒப்பந்தத்தை இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வந்த, பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Santhakumar Srinivasalu
பிப் 23, 2026 11:33

அமெரிக்காவின் பெரியண்ணன் வேலை வெகு சீக்கிரமே மங்கி விடும் போல் தெரிகிறது!


SUBBU,MADURAI
பிப் 02, 2026 04:58

India is set to clear a $10 BILLION submarine deal with Germany under Project 75 - India, with 6 NEXT GENERATION conventional submarines.


SUBBU,MADURAI
பிப் 02, 2026 04:55

India, after Trump imposed 50% undue tariffs No loose statement, No panic in the Economy and markets, No buckling under the pressure like many Asian or even European peers did, Unleashes massive GST reforms and tax cuts, Got a Coveted S and P upgrade after 18 years!


sundararajan
பிப் 02, 2026 04:13

ஏன் 20 வருடங்கள் இழுப்பு ? அது எல்லாமே இழப்பு தானே ?


duruvasar
பிப் 02, 2026 09:56

இந்த எண்ணம் முன்பு ஆட்சியிலிருந்த யுபிஐ அரசாங்கத்துக்கு இல்லாமல் போனது ஏன். அது போக இந்த கேள்வியை இத்தனை ஆண்டுகளாக நீங்க ஏன் கேட்கவில்லை. கேட்டிருந்தால் பயன்பெற்றுப் போமல்லவா


சமீபத்திய செய்தி