உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / வி.ஐ.பி.,க்களை கடிக்கும் கட்டெறும்பு

வி.ஐ.பி.,க்களை கடிக்கும் கட்டெறும்பு

எல்லா ஊர்களிலும் வேடிக்கையான மனிதர்கள் உண்டு. வேடிக்கை காட்டும் மனிதர்களும் உண்டு. அவர்களில் சிலர், யாரிடமாவது கலாட்டா செய்து, அச்சுறுத்தி, ஏமாற்றி 'திடுக்'கிட வைத்து அதையே வீடியோவாக வெளியிட்டு ரசிக்கச் செய்வோரும் உள்ளனர். இத்தகைய கோமாளித்தனத்தை பார்ப்பவர்கள், மன இறுக்கமான நேரத்திலும் ரசித்து மனதை தளர்வுடன் வைத்துக் கொள்கின்றனர். அப்படியொரு மனஇறுக்க மருந்தாளர்தான் மதுரை பழங்காநத்தம் கட்டெறும்பு ஸ்டாலின்.'கட்டெறும்பு' பேரே கலக்கலா இருக்குல்ல. அப்படித்தான் அவரது செயலும் பலருக்கு திகைப்பை தந்தாலும், இறுதியில் நகைக்க வைக்கிறது. ஐ.டி.ஐ., மெக்கானிக் படித்த ஸ்டாலினுக்கு செய்தியாளர், ஆர்.ஜே., செய்தி வாசிப்பாளர் என ஊடகத்துறை மீது காதல். ஊரில் சுற்றி கொண்டிருந்தவருக்கு இயல்பாகவே பிறரை நடிப்பால் நம்ப வைத்து திகைக்க வைப்பது பழக்கமாகி இருந்தது. டீ கடையில் நிற்கும் அன்னியர் ஒருவரிடம் டீ வாங்கித்தாருங்கள் எனக் கேட்பதும், அவர் இவரை யாரென்றே தெரியாமல் திருதிருவென விழிப்பதும், இறுதியில் டீ வாங்கி குடித்தபின், நான் வாங்கி தந்த டீ எப்படி என அவரிடமே கேட்பதும் அப்போதும் அந்த நபர் இவரை 'ஒரு மாதிரி' என நினைப்பதும், அந்த நபரை இவர் 'ஒரு மாதிரி' நினைப்பதும் குஷியாக நடக்கும்.இந்த வழக்கத்தை 'பிராங்க்' என பேர் சூட்டி, அதனை சூட் செய்து யுடியூப்பில் வெளியிட்டால் என்ன என்று நண்பர்கள் உசுப்பவே இவரும் செயல்படுத்திவிட்டார். அடிக்கடி யாரையாவது பிராங்க் செய்வதே தொழிலாகிப் போனது. இன்று 1.5 மில்லியன் பார்வையாளரைக் கொண்டு பிரபல யுடியூபராக விளங்குகிறார். இவரது செயலை ஆரம்பத்தில் குடும்பத்தினர் வெறுத்தாலும், கிடைத்த வரவேற்பால் அவர்களும் விரும்பத் துவங்கிவிட்டனர்.இப்படி நடிகர்கள் விஷால், விமல், கஞ்சாகருப்பு, போண்டா மணி, போஸ் வெங்கட், நடிகை வனிதா, மதுரை முத்து, ஜி.பி.முத்து என இவரிடம் சிக்காத ஆட்களே இல்லை. அவர்கள் வசிக்கும் பகுதிக்கே ஷூட்டிங் குழுவுடன் போய் இறங்கி படம் பிடிக்கிறார்.யாரை கலாய்க்கிறோமோ அவருக்குத் தெரியாமல், அவரது உறவினர், நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு செயலில் ஈடுபடுகிறார். மதுரைமுத்து வீட்டுக்கு சென்று, 'வங்கி கடன் திரும்ப கட்டாததால் உங்கள் டிராக்டரை எடுத்துச் செல்கிறோம்' எனக் கூறினார் அவரோ திகைத்துப் போய் அப்படி எதுவும் இல்லையே...என பேசிதீர்க்க முயன்றதால், வீட்டில் பெரும் குடைச்சலையே கொடுத்து களேபரமாக்கிவிட்டார்.நடிகை வனிதா 2ம் திருமணம் முடித்த நிலையில் அவரது வீட்டுக்கு சென்று உங்கள் 3ம் திருமண நிகழ்ச்சிக்காக பெயின்ட் அடிக்க வந்துள்ளேன் எனப் பேசத் துவங்கினார். வனிதா கடும் கோபமாகிவிட்டார். கஞ்சா கருப்புவை ஓட்டலில் சாப்பிடவிடாமல் தொந்தரவு செய்தது போன்ற வீடியோக்கள் வைரலானதும் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.ஸ்டாலின் கூறியதாவது: ''மற்றவர்களை பிராங்க் செய்தாலும் அவர்கள் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வேன். இதற்காகவே ரோடுகளில் இல்லாமல் கடைகளில் வைத்து பிராங்க் செய்கிறேன். முடிவில் அந்த நபருக்கு பரிசு அளிப்பேன். நடிகர் கவுண்டமணியை 'இன்ஸ்பிரேஷன்' ஆக கொண்டுள்ளேன். இப்பணியில் எனக்கு கீழ் 15 பேர் வேலை செய்கின்றனர். இந்த வீடியோக்களை பார்த்து இயக்குனர் சரவணனின் 'நந்தன்' படத்தில் திமிர்பிடித்த, நக்கலடிக்கும் பஞ்சாயத்து கிளார்க் ஆக படம் முழுவதும் வருகிறேன். 'இருளில் ராவணன்', பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்கிறேன்'' என்றார். இவரை பாராட்ட: 80722 24200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Ravikumar
நவ 05, 2024 14:47

இவனை மாதிரி ஆட்கள் உங்களிடம் வந்தால் ....


Matt P
நவ 04, 2024 23:49

பாதிப்போ இல்லையோ தான் பணம் சம்பாதிப்பதற்காக இப்படியெல்லாம் அடுத்தவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு செய்வது தவறு தான். இப்படியெல்லாம் பிற நாடுகளில் நடந்தால் தண்டனையாக தான் இருக்கும். போலீஸ் வேஷத்தில் நடு சாலையில் நின்று கொண்டு ஹெல்மெட் போடவில்லயென்றும் வேகமாக சென்றார்கள் என்றும் அடுத்தவர்களை கூனி குறுக வைப்பதாய் வீடியோவில் பார்த்தேன். அது இவராக கூட இருக்கலாம். அப்புறம் சும்மா விடியோவுக்காக செய்தேன். பயந்துடீங்களா என்கிறார்.நிஜ போலீஸ்காரர் என்று கூறி பணம் பறிப்பதற்கு வழியாக கூட மாறலாம் இந்த மாதிரி நிகழ்வுகள்.


முக்கிய வீடியோ