| ADDED : ஜூன் 30, 2024 12:09 PM
எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு உயர்ந்த வேலை பார்த்தாலும் ஒரு சிலருக்கு மனதின் தேடல் வேறாக இருக்கும். பார்க்கும் வேலையைத் தாண்டி மனம் வேறு எதையாவது ஒன்றைத்தேடி தவிக்கும். அதை அடையத் துடிக்கும். அந்த ஆழ்மனதின் தேடலை புரிந்து கொண்டதால், மதுரையை சேர்ந்த பல் சீரமைப்பு நிபுணரான டாக்டர் ஈஸ்வரி பெண்களுக்கான 'பொட்டிக்' வைத்து நடத்துகிறார்.'எனது துறையை மிகவும் விரும்புகிறேன். ஆனால் எனக்கென பிடித்தது பேஷன் டிசைனிங் என்பதால் அதில் கால் பதித்தேன்' என்று ஆரம்பித்தார் ஈஸ்வரி.அவர் கூறியதாவது: பல் மருத்துவப் படிப்பு முடித்தஉடனேயே கிளினிக் நடத்த ஆரம்பித்தேன். நிறம், துணிக்கு ஏற்றவாறு விருப்பமான ஆடை தேர்வு செய்வது சிறுவயதிலிருந்தே எனது விருப்பம். கிளினிக் சென்று வந்தாலும் 'பொட்டிக்' நடத்த வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை. வீட்டிலேயே முன்புற அறையை 'பொட்டிக்' போல மாற்றி காலையில் கிளினிக், மாலையில் பொட்டிக் என வேலை பார்த்தேன்.அண்மையில் நெல்லைத் தோழி ஹேமமாலினியுடன் இணைந்து மதுரை கே.கே.நகரில் ஷிவானி பொட்டிக் துவங்கினேன்.ராஜஸ்தானில் எங்கள் சொந்த யூனிட்டில் 'ப்ளாக் பிரிண்டிங்' செய்து சேலைகளை தனித்தன்மையாக மாற்றுகிறோம். பட்டுச்சேலையில் அதிக எடை பாசிமணிகள், எம்பிராய்டரி செய்யாமல் சேலை நிறத்திற்கேற்ற பூ வடிவ ஜம்க்கிகளை சேலை நெய்யும் போதே சேர்த்து நெய்ய வைக்கிறோம். சேலையை பார்க்கும் போது அழகு எழிலுாட்டும்.பாரம்பரிய நிறங்கள், கொண்ட பட்டுச்சேலை, டஸர் பட்டுச்சேலைகள் தான் எங்களது தனித்தன்மை. இதில் அதிக ஜரிகை வேலைப்பாடோ செயற்கை ஜரிகையின் பளபளப்போ இருக்காது. மாந்தளிர் பச்சை, அரக்கு பிரவுன், ஏலக்காய் பச்சை, மரகத பச்சை போன்ற பாரம்பரிய நிறங்களில் சேலை தயாரிக்கிறோம்.பெண்களின் விருப்பத்திற்குரிய லாவண்டர் நிறத்திலும் எண்ணற்ற வித்தியாச நிறங்களில் ஒவ்வொரு சேலையையும் தனித்தன்மையாக்கி உள்ளோம். எளிமையாக தெரியும் இந்த சேலைகளை கட்டும் போது கம்பீரமாக காட்டும். நாள் முழுவதும் கட்டி இருந்தாலும் எடை கனக்காமல் உடல் களை இழக்காமல் அழகாக காட்டும். சேலை மட்டுமின்றி சுரிதார் மெட்டீரியல், ரெடிமேட் சுரிதாரும் இங்குள்ளது.சேலை தேர்ந்தெடுத்தாலும் அதற்கு பிளவுஸ் தேர்வு செய்வது சவாலான விஷயம். எங்களது ஒவ்வொரு சேலையிலும் பிளவுஸ் டிசைனுக்கான கண்ணை உறுத்தாத எம்பிராய்டரி, பாசி மணிகளை வடிவமைத்துள்ளோம். பிளவுஸ் முன்பக்கம், முதுகு, கைகள் என பிரத்யேகமாக எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது. சேலை நிறத்துக்கும் டிசைனுக்கும் ஏற்ற பிளவுஸ் கிடைக்குமா என பதட்டம் இல்லாமல் சேலையை தேர்வு செய்யலாம் என்றார்.இவரிடம் பேச 76039 99398