மேலும் செய்திகள்
மண் மீது கவுசிக் வைத்தார் ஒரு கண்
05-Sep-2026
குடிச்சாச்சா... ‘கொம்புச்சா’
05-Sep-2026 | 1
'பாரதியார் கவிதைகள்' நுால் குறித்து, 'பாரதி பாசறை' தலைவர் மோகன் சங்கர் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பாரதியின் கவிதைகள் குறித்து பேசுவதென்றால், ஆயுள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம். பாரதி பிறவி ஞானமுள்ள தீர்க்கதரிசி. அவர் நமக்கு கிடைத்த அழியாத தமிழ் பொக்கிஷம். அவர் வாழ்ந்த காலம், ஆங்கிலேயர் அடக்குமுறை அதிகம் இருந்த காலம். அவர்களுக்கு அடங்க மறுத்து, அத்துமீறி நெருப்பு போன்ற கவிதைகளை வெள்ளையருக்கு எதிராக எழுதினார். ''உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே'' என்று எழுதிய துணிச்சலான கவிஞர். பாரதியை இந்திய விடுதலைக்காக மட்டும் பாடியவர் என்று ஒரு வட்டத்துக்குள் சுருக்கி விட முடியாது. உலக மகாகவி என்றுதான் சொல்ல வேண்டும். இன்று போல் எந்த நவீன வசதியும் இல்லாத காலத்தில், உலக நிகழ்வுகளை, இலக்கியங்களை அறிந்து இருந்தார். பீஜி தீவுக்கு அடிமை தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், அங்கு அனுபவித்த சித்திரவதைகளைக் கேட்டு உருகிப்போன பாரதி, ''கரும்புத் தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே ! ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய் சுருங்குகின்றனரே '' என, இங்கிருந்து கவிதையில் கண்ணீர் சிந்தினார். ரஷ்யாவில் புரட்சி வெடித்த போது, “மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில் கடைக்கண் வைத்தாளங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” என்று, புரட்சியை வரவேற்று கவிதை எழுதியவர் பாரதி மட்டும்தான். இன்றைக்கு யார் யாரோ புரட்சி பேசுகின்றனர். ஆனால் பாரதிதான் புரட்சி என்ற சொல்லை கவிதையில் முதலில் எழுதினார். தமிழை உயிராக நேசித்தவர் பாரதி. காசியில் இருந்த போது அவருக்கு 17 வயது இருக்கும். அங்கு அவர் பல மொழிகளை கற்றார். அத்தனை மொழிகளையும் படித்த அவர் ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'' என்று எழுதுகிறார். தமிழுக்கு பாரதி தந்த சான்றுதான் சரியான சான்று. இன்றைக்கு பலர் சாதி ஒழிப்பு பற்றி பேசுகின்றனர். ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் சாதியை மறுத்து யாரும் பேச முடியாது. ஆனால் பாரதி எழுதினார், ''சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி, உயர்ந்தமதி, கல்வி- அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்'' என்றும், ''காக்கை குருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்'' என்றும் எழுதினார். பாரதிதான் பெண் விடுதலைக்கு வித்திட்டவர். தனது கவிதைகள் மூலம் பெண்ணடிமைத் தனத்தைச் சாடினார். பெண் கல்வி, சமத்துவம், சம உரிமை பற்றி அவர் எழுதிய கவிதைகள்தான், பெண்களுக்கு சமூக விடுதலையை தந்தது.
05-Sep-2026
05-Sep-2026 | 1