மேலும் செய்திகள்
மனித உணர்வுகள் நிரம்பி இருக்கும் வெண்முரசு
2 hour(s) ago
லயத்துடன் லலிதா ரஜினி, கமல் பாராட்டிய நடிகை
30-Nov-2025
பிரதீபாவும்,கார்த்திகாவும் கேமராவும்!
30-Nov-2025
துாரிகை படைத்த கடவுள் ஓவியங்கள்
30-Nov-2025
இலக்கிய கூட்டங்கள் நிகழ்த்தி, சிற்றிதழ் நடத்தி, வெளிநாடுகளில் சிறப்பிதழ்கள் வெளியிட்டு, தமிழ் சாதனையாளர்களை கண்டறிந்து விருது வழங்கி தமிழ்ப்பணியாற்றி வருகிறார் கவிஞரும், எழுத்தாளருமான 'நந்தவனம்' சந்திரசேகரன். கவிதை, தன்னம்பிக்கை, பயணக்கட்டுரை என 30 நுால்கள் எழுதியுள்ள இவர் தனது இலக்கிய பயணத்தை பகிர்ந்த போது... இலங்கை பூர்வீகம், உள்நாட்டு போர் காரணமாக நான் 4ம் வகுப்பு படிக்கும்போதே, குடும்பத்துடன் தமிழகம் வந்து விட்டோம். தேவாரம், திருவாசகம் பக்தி இலக்கியங்களின் அறிமுகம் இலங்கையில் இருந்தபோதே கிடைத்து விட் டது. புதுக்கோட்டையில் புலம்பெயர்ந்தோருக்கான உண்டு உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன். அங்கு தமிழாசிரியர் தியாகசாந்தன் என்னை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட ஊக்கப்படுத்தினார். அவர் எனக்கு அளித்த அழ.வள்ளியப்பா, சுஜாதா, புதுமைபித்தன் படைப்புகள் இலக்கிய ஆர்வத்தை துாண்டின. முதல் கவிதை தொழிற்கல்வி படிக்கும் போது நிறைய கவிதைகள், துணுக்குகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினேன். 'புதிய வீணை' இதழில் என்னுடைய முதல் கவிதை பிரசுரமாகியது. அந்த கவிதை இது தான்... 'காகித ஓலையில் கவிதை ஒன்று காதலிக்கு எழுதினேன் கவிதையை படித்தாள் கப்பலாக்கி காவிரியில் ஓட விட்டாள் கண்ணீரை - என் கன்னத்தில் ஓட விட்டாள்!' துணுக்கு எழுத்தாளர் மாரியப்பன் எனக்கு ஆசிரியராக இருந்தார். பத்திரிகைகளில் எழுத்துக்கள் பிரசுரமாக கடைபிடிக்க வேண்டிய சூட்சுமங்களை கற்றுத் தந்தார். எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அறிமுகம் கடிதம் வழியே கிடைத்தது. 'பிரசுரம் ஆனாலும், ஆகா விட்டாலும் தொடர்ந்து எழுதுங்கள், நல்ல பயிற்சியாக இருக்கும்' என ஊக்கப்படுத்தினார். என் படைப்புகள் பற்றி, பத்திரிகைகளில் வாசகர் கடிதம் எழுதி உற்சாகப்படுத்துவார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது துரதிருஷ்டம். இலக்கிய ஆர்வலர்களை தேடி... உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாக 1997ல் 'இனிய நந்தவனம்' இதழை தொடங்கினேன். ஆரம்பத்தில் இலக்கிய ஆர்வலர்கள் முகவரியை தேடிபிடித்து இதழ்களை அனுப்புவேன். அவர்களின் நன்கொடைகளே அடுத்தடுத்த இதழ்கள் தயாரிக்க சக்தியாக இருந்தது. கலை, இலக்கியம், தொழில் சார்ந்து இதழ் இயங்க வேண்டும் என கவனமாக இருந்தேன். பல தன்னம்பிக்கை நுால்கள் எழுதிய மெர்வின் 'நந்தவனம்' இதழில் தன்னம்பிக்கை கட்டுரைகள் வெளியாக உதவியாக இருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு ஆயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். ஐரோப்பாவில் அங்கீகாரம் இதழியல் வரலாற்றில் அதிக வெளிநாட்டுச் சிறப்பிதழ்கள் வெளியிட்டது நந்தவனம் தான். மலேசியா, கனடா, ஆப்பிரிக்கா, கம்போடியா நாடுகளின் சிறப்பிதழ்களை வெளியிட்டு அங்குள்ள தமிழ்ச் சங்க செயல்பாடுகள், எழுத்தாளர்கள் பற்றி எழுதி ஊக்கப்படுத்துவோம். ஜெர்மனியில் நயினை விஜயன் நடத்தும் 'தமிழருவி' வானொலியில், தமிழக இளம் படைப்பாளர்களை நேர்காணல் செய்கிறேன். இது எனக்கு ஐரோப்பா முழுவதும் அங்கீகாரம் பெற்றுத் தருகிறது. சேலம் நகைச்சுவை மன்றத்தில் எழுத்தாளர் தாரை குமரவேல் அளித்த 'சர் வதேச துாதன் ' விருதும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் தந்த 'மொழிக் காவலன்' விருதும் மறக்க முடியாதவை. திறமையான மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தன்று 'சாதனை மாணவர்' விருதும், ஆண்டு விழாவில் சமூகம், தொழிற்துறை சார்ந்து இயங்குபவர்களை தேர்ந்தெடுத்து 'வெற்றித் தமிழன்' விருதும் வழங்கி வருகிறோம். தாய்மொழி தினமான பிப் ரவரி 21ல் எழுத்தாளர்களுக்கு 'தமிழ் மாமணி' விருது, மகளிர் தினத்தன்று 'சாதனைப் பெண்மணி' விருது நந்தவனம் பவுண்டேஷன் மூலம் வழங்கி வருகிறோம். நிறைய தமிழர்களிடம் இலக்கியத்தை கொண்டு சேர்த்து, இலக்கிய வட்டத்தை பெரிதாக்குவதே என் பயண இலக்கு என்றார். 'இலக்கிய நந்தவனமான' இவரைப் பாராட்ட 94432 84823
2 hour(s) ago
30-Nov-2025
30-Nov-2025
30-Nov-2025