கோயில் சிற்பங்களுக்கு உயிரூட்டும் வண்ணங்கள்
'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பார்கள். அத்தகைய கோயில் கோபுர சிற்பங்கள், சுவாமி சிலைகளுக்கு வண்ணக் கலவைகள் மூலம் உயிரூட்டி வருகிறார் மதுரையைச் சேர்ந்த 70 வயதான ஜெய்சங்கர். வலையங்குளம் அருகே 50 ஆண்டுகளாக பெயின்ட் நிறுவனம் நடத்தி வரும் இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதல் மலேசியா முருகன் கோயில் வரை சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டி வருகிறார்.தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் நம்மிடம் பகிர்ந்தவை...அப்பா பெயின்ட் விற்பனையாளர். சிறுவயது முதலே ஓவியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. பள்ளிப்படிப்பிற்கு பிறகு பெயின்ட் அன்ட் பிரின்டிங் டெக்னாலஜி படித்தேன். வண்ணங்களாக சேர்த்து ஓவியம் தீட்டிய அனுபவம் இத்தொழிலில் என்னை சாதிக்க வைத்தது.ஓவியர்களை ஊக்கப்படுத்த பள்ளிகளில் ஓவியப்போட்டி நடத்தி பரிசு வழங்கினேன். 1970களில் ஓவியப் பொருட்களை மும்பையில் ஆர்டர் கொடுத்தே வாங்கினர். இங்கேயே ஓவியப் பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கினேன். பிரபல கம்பெனியில் விற்பனையாளராக இருந்தேன். கம்பெனி வளர்ச்சி கண்ட பின் எனக்கு மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் ஏஜென்சியை வழங்கினர். இதனால் நானே சொந்தமாக தயாரிக்க முடிவு செய்தேன்.நான் வேதியியல் படிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு வண்ணங்களாக பரிசோதித்து அனுபவத்தில் கற்றுக் கொண்டேன். 'பிளாஷ்' என்ற பிராண்டை உருவாக்கி விற்பனைக்கு கடைகளில் கொடுத்த போது வாங்க மறுத்தனர். மதுரையில் பிரின்டிங் செய்பவர்கள் எனது தயாரிப்புகளை உபயோகித்து ஆலோசனை வழங்கினர். அவை பெரிதும் கைகொடுத்தது. பின் தங்கம், சில்வர், அலுமினியம், காப்பர் உள்ளிட்ட 'ஸ்பெஷல்' பெயின்டுகளை உற்பத்தி செய்தேன். கடின உழைப்பு, கடவுளின் அருள் இருந்ததால் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தேன்.16 ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள தங்கம் பட்டரின் மகன், மலேசியா பத்துமலை முருகன் கோயில் பூசாரியாக இருந்தார். அங்கு உயரமான முருகன் சிலைக்கு தங்க வண்ணம் பூச வாய்ப்பு கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்கு சுத்தம் செய்த போது பொலிவு குறையாமல் வண்ணம் அப்படியே இருந்தது. மலேசியா முழுதும் எனது தயாரிப்புகள் பிரபலமாயின. உலகம் முழுவதும் பல கோயில்களுக்கு வண்ணம் தீட்ட வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள பெயின்ட் விற்பனையாளர்கள் மலேசியா முருகன் கோயிலுக்கு சென்று எங்கள் தயாரிப்புகளை தெரிந்து கொண்டு வாங்க ஆரம்பித்தனர்.நம் முன்னோர்கள் கோயில் கோபுரங்களுக்கு பஞ்சவர்ணங்களை உபயோகித்தனர். அவற்றை கொண்டே மற்ற வண்ணங்களை உண்டாக்குவர். இதை நாங்களும் செய்ய மீனாட்சி அம்மன் கோயிலின் அப்போதைய தக்கார் கருமுத்து கண்ணன் கேட்டுக்கொண்டார்.எங்களுடைய பெயின்ட்கள் கலைக்கானது. அசிடோன், பூட்டனால் நச்சுப்பொருட்கள் அற்றது. இதனால் 12 ஆண்டுகள் வரை பொலிவு குன்றாமல் ஐஸ்வர்யத்துடன் கோயில்கள் திகழும். மதுரை தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோயில் தான் முதன் முதலில் நாங்கள் வண்ணம் தீட்டியது. கடவுள் எது கொடுத்தாலும் நன்மைக்கே. நமக்கு நன்மை செய்தவர்களை மறக்கக் கூடாது என்றார்.இவரை வாழ்த்த 77080 44557