உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / புலிப்பாய்ச்சலில் புலிக்குளம் நாட்டின மாடுகள்

புலிப்பாய்ச்சலில் புலிக்குளம் நாட்டின மாடுகள்

தைப் பொங்கல் என்றால் இளைஞர்களுக்கு ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு தான். சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டின மாடுகள் புலிப்பாய்ச்சலில் சென்று சிவகங்கை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்து வருகிறது.ஜல்லிக்கட்டில் முக்கிய காளை இனமாக புலிக்குளம் நாட்டின மாடுகள் திகழ்கிறது. இந்த காளைகள் சிவகங்கை மாவட்டம் மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.முந்தைய காலங்களில் இம்மாடுகள் பெரும்பாலும் உழவிற்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இவை 2012ல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டது. தற்போது புலிக்குளம் நாட்டின மாடுகளில் எண்ணிக்கை 21 ஆயிரத்து 222 ஆக உள்ளது.இம் மாடுகள் 99 சதவீதம் கிடைமாடுகளாகவே வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மாடுகளுக்கு பளிங்கு, மணி, கிடை, ஜல்லிக்கட்டு மாடு என பல பெயர்கள் உண்டு. மாட்டினங்களை காப்பாற்றவும், இனப்பெருக்கத்தை உயர்த்தவும் மானாமதுரையில் புலிக்குளம் நாட்டின ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் சரவணஜெயம்,சீனிவாசன் கூறுகையில், 'புலிக்குளம் நாட்டு மாடுகளின் கன்றுகளை 6 முதல் 12 மாத வயதில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவும், இனப்பெருக்கத்திற்காக காளையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நல்ல தரமான ஒரு ஜோடி காளை கன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது. தற்போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தொடர்ந்து இக்காளை கன்றுகளின் விலையும் அதிகரித்துள்ளது. இம் மாடுகளின் கன்றுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மூர்க்கத்தனமாக இருக்கும். பழக்கப்பட்டவர்கள் மட்டுமே அருகில் செல்லும் வகையில் அதன் தன்மை உள்ளது. ஆகவே பெரும்பாலும் போட்டிகளில் புலிக்குளம் நாட்டின மாடுகள் பல்வேறு பரிசுகளை குவித்து வருகிறது,' என்றனர்.ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் பெரியகோட்டை தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவல்லி கூறுகையில், 'எங்களது ஊரில் 15க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. எங்களது வீட்டில் உள்ள 3 காளைகளும் புலிக்குளத்தை பூர்வீகமாக கொண்டது தான்.இந்த வகையான மாடுகளுக்கு உணவாக பருத்திக்கொட்டை புண்ணாக்குடன் பேரீச்சை, நாட்டுக்கோழி முட்டை,பாதாம், பிஸ்தா போன்றவற்றை வழங்கி வருகிறோம். இம் மாடுகளை ஜல்லிக்கட்டுக்கேற்றவாறு கன்றிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நேரங்களில் மண்ணை குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி,வாடி வாசலில் இருந்து நாலு கால் பாய்ச்சலில் தாவும் பயிற்சி என பல்வேறு வித பயிற்சிகளை வழங்கி வருகிறோம். புலி பாய்ச்சலில் புலிக்குளம் மாடுகள் வருகிறதென்றால் வாடிவாசலில் உள்ள மாடுபிடி வீரர்களுக்கு ஒரு வித பயம் இருக்கும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை