மேலும் செய்திகள்
உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்
01-Sep-2024
நடிகை, மாடல், டான்ஸர் என்பதையும் தாண்டி சமீபத்தில் நடந்த பெமீனா மிஸ் இந்தியா -- தமிழ்நாடு 2024 பட்டத்தை வென்றிருக்கிறார் நடிகை மலினா. உடல் உறுப்பு தானம் குறித்து நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தையும் துவங்கி சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார்.மாநில அளவில் மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற கையுடன் அகில இந்திய அளவில் மிஸ் இந்தியா பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.அவர் கூறியதாவது: பெமீனா மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டம் பெறுவது ஒரு மாதம், ஓராண்டு கனவு அல்ல. சிறு வயதிலிருந்து இந்த கனவு உண்டு. அம்மா தான் இதற்கான ஆசையை சிறு வயதிலேயே ஏற்படுத்தினார். ஆனால் எப்படி இந்த பட்டம் பெற வேண்டும் என்ற வழிகள் அப்போது எனக்கும், அம்மாவுக்கும் தெரியாது. ஆனால் பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டும் மனதில் இருந்தது.இத்தகைய பட்டம் பெற குறைந்தபட்சம் 18 வயதிருக்க வேண்டும். அதற்காகவும் பொறுத்திருந்தேன். அந்த வயதை எட்டியதும் மிஸ் தமிழ்நாடு போட்டியில் பங்கேற்றேன். முதல் முயற்சியில் வெற்றி வசப்படவில்லை. பிறகு நடந்த சில போட்டிகளில் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. இருப்பினும் விடாமுயற்சி, கடின உழைப்பு, சுயஒழுக்கம், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டதால் தற்போது இந்த பட்டம் வசமானது. அடுத்து மிஸ் இந்தியா பட்டம் பெற்று தமிழகத்திற்கு பெயர் பெற்று தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.நடிப்பு, மாடலிங்கை விட மிஸ் பட்டம் பெற அழகுடன் சமயோசிதமும் வேண்டும். அழகான பெண்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் இந்த பட்டம் பெற வேண்டும். இதற்காக உடல் உறுப்பு தானம் குறித்த கருத்தை கையில் எடுத்தேன்.நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்றால் முதலில் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஷேர்லைன் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். என்னை பொறுத்தவரையில் மக்கள் அனைவருமே சுயநலமிக்கவர்கள் இல்லை. எல்லோருமே சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவே உள்ளனர். அதற்கு தடையாக இருப்பது போதிய அறிவு இல்லாதது தான்.மோகன் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து நாடு தழுவிய அளவில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறேன்.இந்த எண்ணம் எப்படி என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு. பள்ளியில் படித்தகாலத்தில் ஒரு முறை தாத்தா ராஜ்குமார் சர்மா உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். சில ஆண்டுகளில் அவர் மறைந்த போது அந்த கஷ்டமான சூழ்நிலையில் அவரது விருப்பத்தை தந்தையிடம் கூறி நிறைவேற்ற முடியவில்லை. இதனால் வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்ற உடல் உறுப்பு தானத்தை மக்களிடம் கொண்டு செல்ல கையில் எடுத்துள்ளேன்.சமீபத்தில் ஒரு சிறுமி பஸ் விபத்தில் கையை இழந்தார். அவருக்கு மூளைச்சாவு அடைந்த ஆணின் கையை பொருத்த ஏற்பாடு செய்தோம். தற்போது அந்த சிறுமியால் முன்பு போல செயல்பட முடிகிறது. வாழ்வில் அவருக்கு இதை விட பெரிய பரிசு என்ன கிடைத்து விட போகிறது.ஏவியன்ஸ், மறக்க முடியுமா உள்ளிட்ட சில திரைப்படங்கள், குறும்படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது மூன்று படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை போய் கொண்டுள்ளது.தவறாமல் ஜிம்முக்கு சென்று விடுவேன். இது அழகுக்காக மட்டுமில்லை. வயதானாலும் நம்மால் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்பதற்காக உடலை சரியாக வைத்துக்கொள்ள தான்.உணவு விஷயத்தில் பெரியளவில் கட்டுப்பாடு இல்லை. டயட்டில் புரூட் சாலட், முட்டை தவறாமல் இருக்க வேண்டும்.உலக அழகி சுஷ்மிதா சென் என் ரோல் மாடல். உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் அதையும் தாண்டி அவர் சாதித்தார். குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என பல்வேறு பணிகளை அவர் செய்வது பிடிக்கும்.இன்று மனிதசமூகம் வளர்ச்சி அடைந்துள்ளது. மனித சமூகம் மட்டுமே பூமி இல்லை. பறவைகள், விலங்குகள், மரங்கள் என அனைத்து உயிர்களுக்குமானது தான் பூமி. அந்த பூமியை மாசுபட விடக்கூடாது என இளைய தலைமுறையினருக்கு சொல்ல விரும்புகிறேன்.பீச் போன்ற இடங்களுக்குசெல்லும் போது அங்கு கிடக்கும் குப்பைகளை கண்டால் கோபம், வேதனை ஏற்படும்.கேரள சினிமாவில் தற்போது எழுந்துள்ள பிரச்னை வெளியில் வந்தது நல்லது தான். அப்போது தான் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது எப்படி சமாளிப்பது என்ற தைரியம், வளரும் நடிகைகளுக்கு கிடைக்கும்.இவ்வாறு தெரிவித்தார்.
01-Sep-2024