உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / 21 வயதில் இப்படி ஒரு சேவையா அசத்தும் மதுரை ஹர்ஷினி

21 வயதில் இப்படி ஒரு சேவையா அசத்தும் மதுரை ஹர்ஷினி

'இந்த சின்ன வயசுல இப்படி ஒரு பொறுப்பை சுமந்துகிட்டு இருப்பது கஷ்டமாக இல்லையா' என 21 வயதான ஹர்ஷினியிடம் கேட்டால், 'சேவை செய்வதற்கு நேரமோ, வயதோ முக்கியமா என்ன. படித்த படிப்பிற்கேற்ப வேலை தேடுவது போல், நான் படித்த படிப்பிற்கு சேவை செய்கிறேன்' என சிரிக்கிறார்.மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர். தினமும் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை சேவையாக செய்து வருகிறார். பெங்களூருவில் பி.பி.ஏ., படிக்கும்போது குழந்தைகள் நலன், வித்தியாச முறை கல்வி கற்றல் படித்ததால் அந்த ஆர்வம் இவருக்கு தொற்றிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. சிறிது ஓய்வுக்கு பின் காலையில் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலை என 4 ஆண்டுகளாக 'பிஸி'யாக இருக்கும் ஹர்ஷனி தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.''நகரில் கிடைக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கிராமத்தில் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. தகவல் தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என நினைத்து உருவாக்கியதுதான் 'ரூரல் டெக் ரைஸ்'. அறக்கட்டளையாக ஆரம்பித்து இன்று நிறுவனமாக வளர்ந்துள்ளது. குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து அங்குள்ள மாணவ, மாணவியருக்கு 4 விதமான பயிற்சி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். பயிற்சி பெற்ற மாணவர்களும் இன்று என்னுடன் கைகோர்த்து சேவை செய்து வருகின்றனர்.முதலில் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து எடுத்துச்சொல்வோம். அலைபேசியை எப்படி பாதுகாப்பாக கையாள்வது, சாட்டிங் செய்வது, தடை செய்யப்பட்ட வீடியோக்களை எப்படி புறம்தள்ளுவது என விளக்குகிறோம். அடுத்ததாக பார்த்து கற்றுணர்தல். இதற்காக ஆஸ்திரேலியா, மெல்போர்ன் பல்கலையுடன் இணைந்து 'விர்ஷூவல் ரியலாட்டி' மூலம் கற்றுத்தருவது.உதாரணமாக ஒரு மாணவன் பைலட் ஆக வேண்டும் என்றால் அதற்கான வழிகாட்டுதலை 360 டிகிரி கோணத்தில் வீடியோ, ஆடியோவாக சொல்வது. மூன்றாவது நுாலகம். ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 500 புத்தகங்களை வாசிக்க வைப்பது. தேவைப்பட்டால் மினி நுாலகமும் அமைத்து தர முயற்சிக்கிறேன். சிம்பிள் இங்கிலீஷாக இருப்பதால் எளிதாக ஆங்கில இலக்கணம் கற்றுக்கொள்ள முடியும். இறுதியாக படிப்பு முடித்து தொழில் முனைவோராவது எப்படி என்பது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுவது. ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வருகிறேன். இது மாணவர்களின் கண்டுபிடிக்கும் திறனை மேம்படுத்த உதவும்.நான்கு ஆண்டுகளாக எந்த பலனும் எதிர்பார்க்காமல் சேவை அடிப்படையில் செய்து வருகிறேன். இதுவரை 50 பள்ளிகளில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். எனது சேவை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சேரவேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களுக்கும் இச்சேவையை விரிவாக்க முயற்சித்து வருகிறேன் என்கிறார் ஹர்ஷினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை