| ADDED : நவ 23, 2025 10:56 AM
பிறந்தது வளர்ந்தது படித்தது கனடாவில். இசை மீதான ஆர்வத்தால் திரை கடலோடியும் திரவியம் தேடு என இந்தியாவிற்கு வந்து இசைத்துறையில் கலக்கி வருகிறார். இரண்டாண்டுகளிலேயே நியான் ரைடு ஆபிஸர், பைபிள், ஒரு பொழுது உள்ளிட்ட பல படங்களில் இவரது ராகங்கள் ரவுண்ட் கட்டி வருகின்றன. பைபிள் படத்தில் இடம் பெற்ற தாரங்கா துல்க்கா பாடல் இவர் யார் என கவனிக்க வைத்தது. பின்னணி பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடலாசிரியர், பரதநாட்டிய கலைஞர், நடிகை என பலமுகங்கள் இவருக்கு. நான்கு மொழிகளில் பேசி அசத்தும் இவர் 12 மொழிகளில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார். அம்மா ஷியாமளா ராமச்சந்திரன் கர்நாடக இசைப்பாடகர் என்பதால் இவர் இசைத்துறைக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு ஏற்ப சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்கின்றனர். இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர் ரம்யா. இரண்டு வயதில் தாயாரிடம் இசை பயிற்சியை துவக்கிய இவர் பிறகு இசை கலைஞர் முத்துக்குமாரிடம் கர்நாடக இசையை பயின்றார். ஹிந்துஸ்தானி இசையை ஸ்ரீசசிகிரணிடம் பயின்று வருகிறார். பரதநாட்டியத்தில் கலக்கி வரும் இவரது பரதநாட்டிய குரு செந்தில்செல்வி சுரேஸ்வரன். கலைக்காக சிமினெட் அவார்ட், நாட்டிய கலைஜோதி, தமிழ் காரகோ ஸ்டார் விருதுகளை பெற்ற இவரது இசை சேவையை பாராட்டி கடந்தாண்டு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, வாட்டர்லுா, ஆக்லாந்து என உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது... இசை ஆர்வத்தால் கனடாவில் முதுகலை படிப்பு முடித்த கையுடன் சென்னைக்கு வந்து விட்டேன். கனடாவிலிருந்து வந்தவள் என்பதால் இந்தியா சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பேனா என வாய்ப்புகள் வருவதில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் நமக்கான நேரம் வரை காத்திருந்து சரியாக பயன்படுத்தி கொண்டதால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்தது. லதா மங்கேஷ்கர் பாடிய லக் ஷாஸ்ரீ என்ற பாடலை அம்மா அடிக்கடி பாடுவார். அந்த பாட்டு அதிகம் பிடிக்கும். அந்த பாட்டை கேட்டு கேட்டு நானும் தற்போது மேடையில் பாட துவங்கி விட்டேன். கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்ஏசுதாஸ், நான் பாடியதை கேட்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட இப்படி பாட மாட்டார்கள் என பாராட்டியதை மறக்க முடியாது. ஐ.பி.எல்., படத்தில் என் பாடலை, அழகாக வந்திருப்பதாக பாடகி சின்மயி பாராட்டினார். இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி படங்களில் பாடியிருக்கிறேன். அவருடன் இணைந்து இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு இதுவரை அமையவில்லை. இசை, பாட்டுடன் பரதநாட்டியம் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறேன். பாடகி ஸ்ரேயாகோஷல் என் மானசீக குரு. அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோல எனது அம்மாவின் பாடல்களும் பிடிக்கும். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த பாடகியாக, பரதகலைஞராக திகழ வேண்டும். நான் கற்று கொண்ட இசையை வரும் தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். மியூசிக் தவிர்த்து நேரம் கிடைத்தால் ஜிம் சென்று விடுவேன். ஆக்டிங் வாய்ப்பு வருகிறது. ஆனால் மியூசிக்கில் சாதிக்க வேண்டும் என்பதால் அதை பற்றி யோசிக்க கூட நேரமில்லை. சரியான வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஆக்டிங்கில் இறங்குவேன். தற்போது வெப்சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். விரைவில் வெளியாகவுள்ளது. சாம் சி.எஸ். இசையில் பாடி வருகிறேன். எல்லோராலும் கவனிக்கத்தக்க பாடகராக, டான்ஸராக வேண்டும் என்பது தான் ஆசை என்றார்.