உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / தாய் மொழியும் உயிர் மொழியும் வாஞ்சையுடன் வரலட்சுமி

தாய் மொழியும் உயிர் மொழியும் வாஞ்சையுடன் வரலட்சுமி

ஆங்கிலம், கன்னடம், மலையாளத்தில் அசத்துவதுடன் அந்தந்த மொழிகளில் தயாரான சினிமாக்களை தமிழிலும், தமிழில் வெளியாகும் சினிமாக்களை மாற்று மொழிகளிலும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்துள்ள நடிகை வரலட்சுமி நடித்த 'அரசி' சினிமா வெளியீட்டு பணிகளில் பிஸியாக இருந்தவருடன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.இனி அவரே தொடர்கிறார் ... சென்னை சொந்த ஊர். கல்லுாரியில் படிக்கும் போதே தமிழ் மீது பெரிய பற்று. தமிழில் கவிதைகளை எழுதி வந்தேன். கல்லுாரி படிப்பை முடித்த கையுடன் திருமணம் நடந்தது. கணவர், குழந்தைகள், குடும்பம் என சில ஆண்டுகள் ஓடின.இருப்பினும் அவ்வப்போது கவிதை எழுதி முகநுாலில் பதிவிடுவது வழக்கம். அதன்மூலம் சில தமிழறிஞர்கள் தொடர்பு ஏற்பட பட்டிமன்றங்களில் பேச அழைப்பு வந்தது. கவியரங்குகளிலும் பங்கேற்று வந்தேன். தமிழ் புலமையை அறிந்த வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் அவரது தமிழ் இயக்கத்தில் இணைய அழைப்பு விடுத்தார். அந்த இயக்கத்தில் இணைந்து தமிழ் பணிகளில் ஈடுபட்டோம். கவியரங்கம், விவாதமேடைகளில் பங்கேற்றதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன். எனது கவிதைகளை படித்த நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான ராஜராஜன் சினிமாவில் பாடல் எழுதலாமே என ஆசையை விதைத்தார். அப்படி தான் 2018ல் தெலுங்கில் ஹிட் ஆன 'கவசம்' படத்தை தமிழில் 'இவன் காவல்காரன்' என மொழி மாற்றி எடுத்த போது முதல் பாடலை எழுதினேன். 'பார்வை கணையாலே பாவை மனதை கொய்தாயே' என்ற அந்த எனது முதல் சினிமா பாடல் பெயர் பெற்று கொடுத்தது. அதையடுத்து பல மொழி மாற்று படங்கள், தமிழ் படங்களில் 35 பாடல்களை எழுதியிருக்கிறேன்.கணவர் சேஷசாய் நாதன் கொடுத்த ஊக்கத்தால் பிற மொழி படங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட துவங்கினேன். பாகுபலி, புஷ்பா படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மொழி மாற்று படங்களுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் மொழி மாற்று படங்களை எடுத்த போது அறிமுகமான தெலுங்கு பட இயக்குனர் சூரியகிரணை வைத்து தமிழில் படம் செய்யலாமே என தயாரிப்பாளர் ராஜராஜன் ஐடியா கொடுத்தார். அதன்படி வரலட்சுமியை நாயகியாக வைத்து அரசி படத்தை தயாரித்துள்ளோம். விரைவில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.நேரடி தமிழ் படங்களுக்கு எழுதுவதை விட மொழி மாற்று படங்களுக்கு பாடல் எழுதுவதும், வசனங்கள் எழுதுவதும் கடினம். உச்சரிப்புக்கு தகுந்த வார்த்தைகளை பயன்படுத்த மெனக்கெட வேண்டியிருக்கும். இரண்டு மணி நேரத்திலும் பாடல் எழுதியிருக்கிறேன். ஒரு படத்திற்கு ஆறு மணிநேரத்திலும் பாடல் எழுதியிருக்கிறேன். தமிழில் மக்கள் விரும்பும் படங்கள், பாடல்களை தரும் தயாரிப்பாளராக, பாடலாசிரியராக வேண்டும் என்பது தான் ஆசை என்றார் பாடலாசிரியர் வரலட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
டிச 01, 2024 12:17

மொழி மாற்று படங்களுக்கு பாடல் எழுதுவதும், வசனங்கள் எழுதுவதும் கடினம். இருக்கலாஞ்சாமி .. ஆனால் கோர்வையாக, பொருளுடையவையாக அமையவேண்டிய அவசியமில்லையே ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை