உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி /  நமக்கு தெரிந்தது கொஞ்சம் தெரியாதது ரொம்ப அதிகம்

 நமக்கு தெரிந்தது கொஞ்சம் தெரியாதது ரொம்ப அதிகம்

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய 'தெரிந்ததும் தெரியாததும்' என்ற நுால் குறித்து, எழுத்தாளர் முகில் தினகரன் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இறையன்பு எழுதிய 'தெரிந்ததும் தெரியாததும்' என்ற நுாலை, இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேணடும். இந்நுால், நம் அறிவுத்தேடலை விரிவுபடுத்துகிறது. நேர்த்தியான முறையில் அர்த்தமுள்ள சொற்களால், நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார் நுாலாசிரியர். நம் அறிவுக்கு எட்டாத பல விஷயங்களை, இந்த நுால் சொல்கிறது. நட்பை குறித்து கூறும் போது, 'தலை முடியைப் போல் கணக்கற்ற நிறைய நண்பர்கள் தேவையில்லை. கைவிரல்களைப் போல் எண்ணக் கூடியவர்களாக சிலர் இருந்தால் போதும். நல்ல ஆத்மார்த்தமான நண்பர்கள் கிடைப்பதென்பது, பாறைகளுக்கு இடையில் வரும் அபூர்வ சுனை போன்றது. அது நிலத்தில் கிடைக்கும் நீர் ஊற்றை விட மேலானது' என்கிறார். கருணை உள்ளவன் மனிதர்களை சமமாகப் பாவிப்பது மட்டுமன்றி, அனைத்து உயிர்களையும் ஒரே தராசில் நிறுத்துகிறான். மனித உறவுகளின் மாற்றங்களுக்கு காரணம் நிலையற்ற ரசனையும், நிரந்தரமில்லாத பழக்க வழக்கங்களும்தான் என்கிறார் நூலாசிரியர். வெறும் தத்துவக் குவிப்பாக மட்டும் இல்லாமல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை விரிவாகக் குறிப்பிட்டு, தன் கருத்துக்கு வலு சேர்க்கும் போது அவரது அனுபவத்தை நமக்கும் புகட்டுகின்றார் என்பதை, இந்த நுாலை படிக்கும் போது உணர்ந்தேன். நம் பழமையான இலக்கியங்கள், காவியங்கள், காப்பியங்கள் எல்லாம் மக்களுக்கு நன்னெறிகளைதான் போதிக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கு கால மாற்றத்துக்கு ஏற்ற, எதிர்காலத்துக்கு தேவையான பல நல்ல கருத்துகளை, உதாரணங்களுடன் இந்த நுாலில் விளக்கி இருக்கிறார் நுாலாசிரியர். ஐம்பது ஆண்டுகள் நாம் வாழ்ந்து பெறுகின்ற அனுபவத்தை, 214 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாசிப்பது மூலம் பெறலாம். இப்புத்தகத்தை முழுவதுமாய் வாசித்த பின்தான், நான் உலகின் ஒவ்வொரு அசைவுகளையும், ஒவ்வொரு பொருட்களையும், ஊன்றிக் கவனிக்கின்றேன். கூர்ந்து நோக்க பழகி கொண்டு இருக்கின்றேன். நாம் கற்றுக்கொண்டதும், தெரிந்து கொண்டதும் கொஞ்சம்தான்; நமக்கு தெரியாததும், தெரிய வேண்டியதும் மிக அதிகம் என்பதை, இந்த நுாலை படித்தால் தெரிந்து கொள்ளலாம். நம் பழமையான இலக்கியங்கள், காவியங்கள், காப்பியங்கள் எல்லாம்மக்களுக்கு நன்னெறிகளைதான் போதிக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கு கால மாற்றத்துக்கு ஏற்ற, எதிர்காலத்துக்கு தேவையான பல நல்ல கருத்துகளை, உதாரணங்களுடன் இந்த நுாலில் விளக்கி இருக்கிறார் நுாலாசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி