போனை ரீசார்ஜ் பண்ணும் நாம் மனசை ரீசார்ஜ் பண்ணுவதில்லை!
ம னதை ரீசார்ஜ் செய்து புத்தம் புதிதாக மாற்றுகிறது, 'கோவை வெல்னெஸ் கம்யூனிட்டி'. டாக்டர் பாரதி ஆரம்பித்த இந்த அமைப்பு, தற்போது இளம் தலைமுறையினரின் உணர்வு பூர்வமான கூடு ஆக மாறி வருகிறது. சிங்கப்பூர், ஜப்பான், சீனா போல் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியான வாழ்வை, இங்கும் வாழ முடியாதா என்ன என்ற கேள்விதான், இப்படி ஒரு அமைப்பை துவங்க வைத்தது என்கிறார் அவர். “சாதாரண போனை ரீசார்ஜ் பண்ணும் நாம், என்றாவது அதே போன்றதொரு ரீசார்ஜ் நம் மனதுக்கும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோமா...?'' என்று அர்த்தமுள்ள ஒரு கேள்வியை நம் முன் வைக்கிறார். 'அட, ஆமா இல்ல...' என்று உணர்ந்த பலர், இன்று இந்த அமைப்பில் சேர்ந்து மன அழுத்தத்தை துாக்கி துார வீசி, வாழ்க்கையை கொண்டாடுகின்றனர். இந்த கருத்தை மையமாக வைத்து, இதுவரை 25க்கு மேற்பட்ட சந்திப்புகள் நடந்து விட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இவர்கள் அனைவரும் ஒரு இன்று ஒரு குடும்பமாக மாறியுள்ளனர். இங்கே வயது, தொழில், அந்தஸ்து எதுவும் முக்கியமில்லை. 15 முதல் 50 பிளஸ் வயதுள்ள பலரும் மனதை திறந்து கொட்டுகிறார்கள். 'அப்பாடா' என ரிலாக்ஸ் ஆகிறார்கள். தனிமை, மன அழுத்தம், உறவுகளில் சிக்கல், பணியிட அழுத்தம், மனச்சோர்வு, படபடப்பு, பயம்...இப்படி அனைத்தையும் பகிர்வதால் மனம் லேசாகிறது. தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின்றி பிரச்னைகளை பகிர வேண்டும் என்பதுதான் முக்கியம். ''இந்த அமைப்பை பாதுகாப்பாக உணர்கிறோம். அதே நேரம் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் பெரிய ஆறுதல்'' என்கிறார் ஜிவி எனும் ஐ.டி.,ஊழியர். இந்த பாசிட்டிவ் வைப்ரேஷன்தான் இந்த அமைப்பின் பலம்! - பிரவீணா
இசை, டான்ஸ் தெரபி!
சந்திப்புகளின் முடிவில் இசை, டான்ஸ் தெரபிகள், இயற்கை சார்ந்த இடங்களுக்கு சிறு டிரிப்கள் உண்டு. போனை விட்டு விலகி இயற்கையுடன் இணையும் இந்த முயற்சி, லைக்ஸ் விட லைப் முக்கியம் என்பதை உணர வைப்பதாக கூறுகின்றனர் இளைஞர்கள்.