உள்ளூர் செய்திகள்

கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்ற ஒற்றுமையின் திருவிழா

கென்யாவில் நீண்ட காலமாக தமிழ் மக்களுக்காக சேவையாற்றி வரும் தமிழ்ப் பண்பாட்டு மன்றம், தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடும் வகையில் தைத் திருநாளான பொங்கல், கிறிஸ்துமஸ், மற்றும் ரமலான் ஆகிய மூன்று முக்கிய பண்டிகைகளை ஒருங்கிணைத்து கொண்டாடியது. இந்த சிறப்பான விழா 2025 பிப்ரவரி 2, ஞாயிறு அன்று ஹைரிட்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பண்பாட்டு வரலாற்றையும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பான அலங்காரங்களை மன்றக் குழுவினரகள் அமைத்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கம்: விழா சிறப்பாக துவங்கும் வகையில், கென்யாவின் தமிழ்ப் பள்ளி குழந்தைகள் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டனர். மன்றத் தலைவி சுபஸ்ரீ சைலேஷ் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பண்பாட்டு நிகழ்வுகள்: இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ்ப் பண்பாட்டை உயர்த்தும் வகையில், பரதநாட்டியம், பாடல், பாரம்பரிய நடனங்கள், நமது பண்பாட்டு உடைகளின் அணிவகுப்பு, கோலாட்டம் இடம் பெற்றன. மேலும், தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் வகையில் கென்யாவில் இயங்கும் டிராகன் கய் மார்சியல் ஆர்ட்ஸ் கராத்தே குழுவினர்கள் தங்கள் தனித்திறமையை காட்டியதுடன், சிலம்பாட்டமும், செய்து காட்டி அசத்தினர். மதியம் உறியடி நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். சுவையான தமிழ் உணவுகள்: நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மண்பாண்டத்தில் பொங்கல் பொங்கி அனைவருக்கும் சக்கரை பொங்கல், வெண்பொங்கல், பிளம் கேக் மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது. தென்னிந்திய இனிப்பு, கார உணவுகள், பிரியாணி வகைகளுக்காக உணவு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் அனைவரும் உணவுகளை ருசித்து கொண்டாடினர். ஒற்றுமையின் வெற்றி விழா!: தமிழ்ப் பண்பாடு, மரபு, சமுதாய உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த விழா, அனைவரின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலித்தது. இது தமிழ் மக்களின் உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது. - தினமலர் வாசகி சுபஸ்ரீ சைலேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்