உள்ளூர் செய்திகள்

அல்-அசா தமிழ்ச் சங்கம் ஆறாவது ஆண்டு தீபாவளி விழா

அல்-அசா தமிழ்ச் சங்கம் (ATS) தனது ஆறாவது ஆண்டு தீபாவளி விழாவை மிகுந்த உற்சாகத்துடன் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சவூதி அரேபியா, அல்-அசாவில் விமரிசையாக கொண்டாடியது. தீபாவளியை முன்னிட்டு, அல்-அசா, புகாயிக், தமாம் மற்றும் கோபார் பகுதியிலுள்ள தமிழர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்த ஒரு இனிய மாலை நிகழ்வை அனுபவித்தனர். விழா துவக்க நிகழ்ச்சியாக பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஆயிஷா முக்தர் வரவேற்புரை வழங்க, ஷர்மிளா பரமசிவம் மற்றும் பொறியாளர் அருண் பழனிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வழங்கிய பல்வகை நடனங்கள், பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது. விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அல்-அசா தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், முனைவர் பரமசிவன் மணி, முனைவர் நாகராஜன் கணேசன், ரவூப், பொறியாளர். நடராஜன், பொறியாளர் சதீஷ், தன்னார்வலர்கள், ஆதரவளித்த நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நிர்வாக உறுப்பினர் மருத்துவர் சிவகுமார் நன்றி தெரிவித்தார். இவ்விழா இனிய விருந்துண்டு, பட்டாசுகள் வெடித்து மற்றும் தீபாவளி நல்வாழ்த்துகளுடன் நிறைவடைந்தது. அல்-அசா தமிழ்ச் சங்கம், சவூதி அரேபியாவில் வாழும் தமிழர்களுக்கிடையே தமிழ் மொழி, பண்பாடு மற்றும் ஒற்றுமையை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. - சவூதியிலிருந்து நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !