மதுரையைச் சேர்ந்தவருக்கு உலகளாவிய விருது
அபுதாபி: தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் வகையில், மதுரையைச் சேர்ந்த டாக்டர் வீரகுமார் மோகன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) வழங்கும் உலகளாவிய “Distinguished Service to Safety Award (DSSA) 2025” விருதைப் பெற்றுள்ளார். இந்த பெருமை உலகளவில் ஐந்துபேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அதில் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து விருது பெற்ற ஒரே நபர் டாக்டர் வீரகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருது 2025 செப்டம்பர்15 முதல்17 வரை டென்பரில் நடைபெற்ற NSC Safety Congress & Expo 2025 நிகழ்வில் வழங்கப்பட்டது. மதுரையில் பிறந்து வளர்ந்த டாக்டர் வீரகுமார், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். பின்னர் திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரி (REC Tiruchirappalli)யில் M.E. Industrial Safety Engineering பட்டத்தை 2000 டிசம்பரில் பெற்றார். தற்போதுஅவர் அபுதாபி தொழில்வாரி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (ADVETI)பணியாற்றி வருகிறார்; அவருக்கு 24.5 ஆண்டுகள் தொழில் அனுபவம் உள்ளது. இந்த விருதைப் பற்றி அவர் கூறுகையில், “இந்த விருது என் வாழ்க்கைப் பயணத்தின் பிரதிபலிப்பு. கல்வி வாய்ப்புகள் குறைந்த சூழலில் தொடங்கிய என் பயணம் உறுதி, பணிவு மற்றும் நம்பிக்கையால் வளர்ந்தது. என் ஆசிரியர்கள், வழிகாட்டிகள், குடும்பம் மற்றும் பாதுகாப்பிற்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பெருமையை அர்ப்பணிக்கிறேன். “நான் எப்போதும் 'Certify Globally, Empower Locally' என்ற தத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளேன்— உலகளவில் திறமையைப் பெற்று, உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்துவதே என் நோக்கம். “என் சிறந்த சாதனைகள் இன்னும் வரவிருக்கின்றன. தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க உழைக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். டாக்டர் கமல்ஹாசனின் உலகளாவிய தாக்கம் எனக்கு ஊக்கம்” என அவர் உணர்ச்சியுடன் கூறினார். 2025 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் தனது 25வது ஆண்டை நிறைவு செய்யும் டாக்டர் மோகன், பாதுகாப்பு என்பது ஒரு சட்டப் பொறுப்பே அல்ல, அது ஒவ்வொரு மனிதரின் நெறிமுறையான கடமை என்றும் வலியுறுத்துகிறார். மதுரைக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த இந்த சாதனை, உறுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உலக அரங்கிலும் தமிழர் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.