குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் குழும “TEF-2025 வாக்கத்தான் இறுதிப்போட்டி”
குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் “இரண்டாவது தொழில்நுட்ப கருத்தரங்கு” மற்றும் “TEF-2025 வாக்கத்தான் இறுதிப்போட்டி” நிகழ்வுகளை நடத்தியது. குவைத்தில் 26 வருடங்களாக இயங்கி வரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் (TEF-Kuwait) அமைப்பு தனது இரண்டாவது தொழில்நுட்பக் கருத்தரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. TEF-2025நடைப் போட்டியின் (Walkathon) இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை அபுஹலிஃபா பகுதியில் உள்ள அல்சஹேல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர் ஏ.எஸ்.திவ்யா, வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) தகவல் சட்ட விழிப்புணர்வு குறித்த விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவைச் சார்ந்த டெம்ப்லா வால்வ்ஸ் லிமிடெட் (Dembla Valves Ltd.) தொழில்நுட்ப விற்பனையின் தலைமை இயக்க அதிகாரி விஜய்குமார் புத்லானியின் தொழில்நுட்ப விளக்கக் காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் ஆசிய தடகள சாம்பியன், அர்ஜுனா விருது பெற்ற ஞானசேகரன் சிறப்பித்தார். வெற்றியை அடைவதில் உறுதி மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றி தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். TEF நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்களை சால்வைகள், மாலைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட TEF-2025 நடைப்போட்டியின் (Walkathon) இறுதி நிகழ்ச்சி அடுத்த நாள் காலை அல்-சஹேல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது. ஏராளமான TEF உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஞானசேகரன் அவர்கள் தனது அனுபவங்களையும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற நிகழ்வுகளையும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு நடைபயிற்சியின் முக்கியம் குறித்தும் அனைவருக்கும் எடுத்துரைத்தார். முன்னதாக தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம், தனது உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான நடைப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 26 நாள்தொடர் நடைப் போட்டியை (Walkathon) நடத்தி இருந்தது. நடைப்போட்டியின் (Walkathon) வெற்றியாளர்களுக்கு ஞானசேகரன் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். முன்னதாக அனைவருடனும் ஞானசேகரன் நடைப்பயிற்சி மேற்கொண்டு Walkathon நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார். TEF அமைப்பின் தலைவர் ராஜா, செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். - நமது செய்தியாளர் செல்லத்துரை