உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஆடித் திங்கள் மஹோற்சவ கோலாகலம்

ஆடி மாதம் ஸ்ரீ அம்மனுக்கு உகந்த மாதம். சிங்கப்பூர் ஆலயங்களில் இம்மாதத்தில் நடைபெறும் அம்மன் உற்சவங்களில் பக்தப் பெருமக்கள் ஆலயங்களில் நிரம்பி வழிவது கண்கூடு. சிங்கப்பூரின் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் - ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தியின் சந்நிதானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தாயார் லோக மாதா ஸ்ரீ மஹாலட்சுமிக்கு ஆடி மாதம் முழுவதும் - ஜூலை 17 முதல் செப்டம்பர் 4 தேதி வரை காலை மாலை இரு வேளைகளிலும் லட்சார்ச்சனை மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். பங்கேற்றுள்ள பக்தப் பெருமக்களும் நாமாவளியைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து வருவது மெய்சிலிர்க்க வைக்கிறது நிறைவாக செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 108 சுமங்கலி மகளிர் அமர்ந்து, பத்ர பூஜை, பத்ர சமர்ப்பணம், பத்ரஸ்ரீகர்ணம் செய்து - விசேஷமாகப் புடவைகள் வழங்கப்பட்டு, அவர்கள் குங்குமார்ச்சனை செய்து அவர்களே தாயாருக்குச் சமர்ப்பணம் செய்வர். பங்கேற்ற சுமங்கலி மகளிரே தீபாராதனை காட்டுவது தெய்வீக சூழலைத் தோற்றுவிக்கும். ஆலயத் தலைமை அர்ச்சகர் வைகாணஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் நேரடி மேற்பார்வையில் இம்மஹோற்சவம் நடைபெறுகிறது. ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாச் செய்துள்ளனர். பக்தப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மஹாலட்சுமித் தாயாரின் அருள் பெற்றுய்யுமாறு ஆலயம் அன்புடன் அழைக்கிறது. - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்