உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூரில் நாட்டிய அரங்கேற்ற விழா

சிங்கப்பூரில் நாட்டிய அரங்கேற்ற விழாதமிழினத்தின் தலைக் காப்பியம் - முதற்காப்பியம் - முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரத்தை நாட்டிய நாடகமாக அரங்கேற்றிப் புகழ் பெற்ற சிங்கப்பூரின் பிரபல நாட்டியாலயமான தேவி வீரப்பனின் சக்தி நுண்கலைக் கூடம் நவம்பர் 22 ஆம் தேதி டிராமா சென்டர் பிளேக் பாக்ஸ் அரங்கில் இளம் நாட்டியக் கல்வியாளர் தரணியின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி அவர்தம் கலைப் பயணத்தின் முக்கிய மைல் கல்லைத் துவக்கி வைத்துப் பெருமைப்படுத்தியது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பால் அனந்தராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.தரணி 6 வயது முதல் தேவி வீரப்பனிடம் நாட்டியப் பயிற்சி பெற்று வருகிறார். “மாயே - பக்திப் பயணம் “ என்ற தலைப்பில் தரணி முழுமையான மார்க்கத்தை நிகழ்த்தினார். இதில் தமிழ் மொழியும் தமிழ்ப் பாடல்களும் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தன. குரு வணக்கம் - தோடுடைய மங்களம் - வர்ணம் - “ மாயே “ - பதம் - சபாபதிக்கு - தில்லானா - திருப்புகழ் இடம் பெற்றன. குரு தேவி வீரப்பன் நட்டுவாங்கம் - ரமணன் - மிருதங்கம் - சாய் விக்னேஸ்வரன் குரல் - டாக்டர் கான வினோதன் ரத்தினம் புல்லாங்குழல் - பவன் வயலின் வாசித்துப் பெருமை படைத்தனர். டாக்டர் குந்தவை நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். தரணிக்கு “ நாட்டிய தாரகை “ எனும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தலைமை விருந்தினர் தனபால் குமார் தமது உரையில் பரத நாட்டியம் என்பது பாவம் - ராகம் - தாளம் எனும் மூன்று அம்சங்களின் இசையாகும் எனக் குறிப்பிட்ட அவர் நாட்டியக் கலை தமிழ் மொழி பண்பாட்டைப் பாதுகாக்கும் பெட்டகம் எனக் குறிப்பிட்டார். கலை உலகிற்கு தரணி போன்ற மாணவிகள் தேவை. அவர்களை வழிநடத்த தேவி வீரப்பன் போன்ற அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட குருமார்கள் தேவை எனக் குறிப்பிட்ட சிறப்பு விருந்தினர் சக்தி நுண்கலைக் கழகம் இவை மூலம் நிறைவேற்றப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். இத்தகு அர்ப்பணிப்பு உணர்வுள்ள குருவின் வழிகாட்டுதலில் பயில்வது வாழ்வில் மதிப்புமிக்கது என்றார். சக்தி நுண்கலைக் கூட நிறுவனர் ராமு கருப்பையா விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி - மாலை அணிவித்து கவுரவித்தார். தரணியின் பெற்றோர் விஜயன் - உமா தேவி விஜயன் ஆகியோர் நன்றி கூறினர்.- தினமலர் சிங்கப்பூர் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்