உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹோற்சவ கோலாகலம்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதி மின் விளக்கு ஒளி வெள்ளத்தில் மிதந்து ஒளிருகிற அற்புதக் காட்சியோடு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயப் புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹோற்சவத்தால் அருள் வெள்ளத்திலும் குதூகலித்துக் கொண்டிருக்கிறது. வைகறையியிலேயே சுப்ரபாதமும் தொடர்ந்து தோமாலா சேவையும் கண்களுக்கும் செவிக்கும் விருந்து படைத்தன. பக்தர்கள் காணிக்கையாக்கிய குடம் குடமான பால் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தப் பெருமக்களின் நாம சங்கீத பஜனை தெய்வீக சூழலை மேலும் பெருக்கிற்று. தலைமை அர்ச்சகர் டாக்டர் வாசுதேவ பட்டாச்சார்யார் கோ பூஜை செய்தபோது பசுவும் கன்றும் பரவசப்படுத்தின. மாலையில் ஸ்ரீவேங்கடேச சகஸ்ரநாம அர்ச்சனை பக்தியைப் பெருக்கிய வண்ணமிருந்தது. நிகழ்வின் முத்தாய்ப்பு நிகழ்வாக நாதஸ்வர - தவில் வித்துவான்களின் மல்லாரி இசையும் பக்தர்களின் “ கோவிந்தா ...நாராயணா முழக்கமும் இணைய ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் பெருந் திரளான பக்தர்கள் புடை சூழ ஆலயம் வலம் வந்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. மதியம் தலை வாழை இலையில் அறுசுவை அன்னப் பிரசாதத்தை ஆயிரக் கணக்கானோர் உண்டு மகிழ்ந்தனர். ஆலய நிர்வாகமும் தலைமை அர்ச்சகர் வாசுதேவ பட்டாச்சார்யாரும் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்