உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹோற்சவம்

ஈரேழு பதினான்கு புவனங்களையும் ரட்சித்துக் காத்தருளும் எல்லாம் வல்ல ஸ்ரீமந் நாராயணனுக்கு உகந்த மாதங்கள் மார்கழி மற்றும் புரட்டாசி. புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிங்கப்பூரின் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் கோயிலில் செப்டம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கீழ்த் திசையில் கதிரவன் கிரணங்களைப் பிரகாசிக்கு முன்னே வரவேற்குமாப் போலே தெய்வீக சுப்ரபாத இசை இப்பகுதி முழுதும் பரவி பக்திப் பரவசத்தைப் பரப்பியது. ஆலயத்திற்கு அருகே உள்ள சர்வதேச விமான நிலையப் பயணர்களும் புளகாங்கிதமடைய - விமானங்களும் இப்பகுதியில் தாழப் பறந்து உயர எழும்பியமை ஆலயத்தை வணங்கி வழிபட்டவாறு அமைந்தது. பூலோக ஸ்வர்க்கம் எனக் கருதப்படும் திருப்பதி திருமலையில் நடைபெறுவதைப் போலவே வைகானஸ ஆகம நெறிப்படி இவ்வாலயத்தில் வழிபாடுகள் அனைத்தும் நடைபெறுவது குறிப்பிடத் தகுந்தாகும். சுப்ரபாதத்தைத் தொடர்ந்து ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் விஸ்வரூப தரிசனமும் தோமாலா சேவையும் திருமஞ்சனமும் கண்கொள்ளாக் காட்சிகளாகும். சகஸ்ரநாம அர்ச்சனையும் கோ பூஜையும் மஹா தீபாராதனையின் போது விண்ணதிர எழுந்த “ கோவிந்தா ...நாராயணா ...வைகுந்தவாசா “ எனும் திருநாம முழக்கங்களும் மெய்சிலிர்க்க வைத்தன. வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சீதா லட்சுமண் ஹனுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி முன்னே ஆண்டாள் நாச்சியாரின் திருவுருவம் ரங்கோலியில் மிளிர்ந்தது அருமையிலும் அருமை. புரட்டாசித் திங்கள் சனிக்கிழமை உற்சவங்களில் பங்கேற்று வழிபடுவது அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி அடையச் செய்யும் எனப் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் புரட்டாசி மகத்துவத்தைத் தமக்கே உரிய கம்பீரத்தோடு தக்க விளக்கங்களை எடுத்துரைத்தார். மாலையில் சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி எழுந்தருளி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். மதியம் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டோர் குதூகலிக்க குமரி இலையில் அறுசுவை அன்னதானம் மகேஸ்வர பூஜைக்குப் பின் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் கழக நிர்வாகிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்