உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழாபொன் விழாவை நோக்கிப் பீடு நடைபோடும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது நான்கு பிரதான விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் 15 ஆம் நாள் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் தலைவர் முத்து மாணிக்கம் தலைமையில் சிறப்பாக நடத்தியது. கழக மேனாள் தலைவர் நா.ஆண்டியப்பன் இயற்றிய “ உலகினில் தோன்றிய முதல் மொழி நீயே “ என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய விழா பரதம் - பாட்டுப் போட்டி - சிறப்புரை - விருது வழங்கல் - புதிர்ப் போட்டி எனப் பல்சுவை அங்கங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் கி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்க்கைத் தத்துவங்களை எளிமையாக விளக்கிய கவியரசின் பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றினார். இவரில்லா சிங்கப்பூர் மேடை இல்லை என்கிற அளவுக்கு நாள்தோறும் தமிழ் முழக்கம் செய்யும் முனைவர் மன்னை ராசகோபாலன் பலத்த கரவொலிக்கிடையே “ பாட்டிலும் கண்ணதாசன் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். “ கண்ணதாசன் என்றொரு காலக் கணிதம் “ என்ற தலைப்பில் ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் மற்றும் தமிழின்றி வேறில்லை என்ற தலைப்பில் குமார் சுபாஷினியும் உரையாற்றினர். மலேசியா ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் முனைவர் வடிவேலு “கண்ணதாசனுள் கம்பன் “ எனும் தலைப்பில் கவிதாஞ்சலி படைத்தார். முத்தாய்ப்பு நிகழ்வாக அரங்கம் எதிர்பார்த்துக் காத்திருந்த “ கவியரசு கண்ணதாசன் விருதாளர் “ பெயர் அரங்கம் அதிர் கரவொலியுடன் அறிவிக்கப்பட்டது. இவ்விருது 40 வயதுக்குட்பட்ட பல்துறை வித்தகர்களுக்கு ஆண்டுதோறும் கழகத்தால் கடந்த 27 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். இவ்வாண்டு இதழியல் துறையில் சமய நல்லிணக்கம் - கலை வளர்ச்சி - தன்முனைப்பு - நாட்டு நடப்பு - பொருளியல் போன்ற பல்துறைகளில் படைப்புக்களை அளித்து வரும் இதழியலாளர் ஜனார்த்தனன் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது . விருதாளருக்குப் பதக்கமளித்து பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. தக்க வகையில் விருதாளர் பதிலுரை நல்கினார். அடுத்த அங்கமாக பாட்டுத் திறன் போட்டி 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் மேற்பட்டோருக்காக நடைபெற்றது. பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சேது மாதவன் முதற் பரிசும் அபராஜித் வெங்கட்ராமன் இரண்டாவது பரிசும் சம்ரிதி மூன்றாவது பரிசும் பெற்றனர். பதினான்கு வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சௌந்தர்யா ராமராஜன் முதற் பரிசும் சௌமியா இரண்டாவது பரிசும் சுந்தர வடிவேலு மூன்றாவது பரிசும் பெற்றனர்.” சுப.அருணாசலம் “ அங்கத்தில் சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியில் “ மணி விழாக் காணும் சிங்கப்பூர் “ என்ற தலைப்பில் பாடல் எழுதிய கணேஷ்குமார் 300 சிங்கப்பூர் வெள்ளி பரிசுபெற்றார். இப்பாடலுக்கு மதியழகன் இசையமைத்து பெருமைப்படுத்தினார். இரண்டாவது பரிசு மூத்த கவிஞர் மா.அன்பழகனுக்கும் மூன்றாவது பரிசு தேன்மொழிக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக செயலாளர் பிரேமா மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் ரமேஷ் பாலா நன்றி கூறினார்.- நமது சிங்கப்பூர் செய்தியாளர்: வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !