சிங்கப்பூர் ஆலயத்தில் மஹாளய அமாவாசை கோலாகலம்
சிங்கப்பூர் கேலாங் கிழக்கு அருள்மிகு சிவன் ஆலயத்தில் இந்துக்கள் புனிதமாகக் கடைபிடிக்கும் மஹாளய அமாவாசை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தப் பெருமக்கள் தர்ப்பணம், ஆத்ம சாந்தி அர்ச்சனை முதலியவற்றில் பெருமளவில் கலந்து கொண்டு சிவனருள் பெற்றுச் சென்றனர். மஹா தீபாராதனை நடைபெற்றபோது “ தென்னாடுடைய சிவனே போற்றி ...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ எனும் சரண முழக்கம் விண்ணை எட்டியது. அலங்காரத்திற்குப் புகழ் பெற்ற ஸ்ரீ சிவன் கோயிலில் முன்னர் 6000 தேங்காய்களைக் கொண்டு அலங்காரம் செய்திருந்த கண்கொள்ளாக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. ஆத்ம சாந்தி பூஜை நிறைவு பெற்றதும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். - நமது செய்தியாளர்: வெ.புருஷோத்தமன்