சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண உற்சவ கோலாகலம்.
“ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ....ஞானவேல் முருகனுக்கு அரோகரா - சக்தி வேல் முருகனுக்கு அரோகரா “ எனும் சரண முழக்கம் விண்ணதிர ஈசூன் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் - அரங்கம்நிறை பக்தப் பெருமக்கள் நிரம்பி வழிய ஸ்ரீ முருகன் திருக்கல்யாண வைபவம் 28.10.2025 -இல் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்பிகையிடம் வேல் வாங்கி தாரகாசுரன், சிங்கமுகாசுரன், கஜமுகாசுரன் ஆகியோரை வதம் செய்து, பின்னர் சூரபத்மனை வதம் செய்து அவனில் ஒரு பாதியை மயிலாகவும் மறுபாதியை சேவலாகவும் மாற்றி தனது வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட முருகப் பெருமான் தேவர்களுக்கு ஆற்றிய உதவிக்கு கைம்மாறாக இந்திரன் தமது மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடிப்பதே இவ்விழா. இந்த வதம் மாயை, ஆணவம், கன்மம் அழிவதையே குறிப்பிடுகிறது. தெய்வீகத் திருமணத்திற்கு மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். தலைமை அர்ச்சகர் பஞ்சாங்கம் படிக்க, தெய்விகத் தம்பதியர் மாலை மாற்றி, அம்மி மிதித்து, அருந்தி பார்த்து, பூச்செண்டாடி மகிழ மங்கல வாத்தியம் முழங்க மாங்கல்யதாரணம் நடைபெற்ற காட்சி காணக் கண்கோடி வேண்டுமென பக்தர்கள் மனமுருகி வேண்டினர். திருமணமெனில் விருந்தில்லாமலா ? ஆலய மேலாண்மைக் குழுவினர் தலை வாழை இலையில் அறுசுவை அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அருட் பிரசாதமும், அன்னப் பிரசாதமும் பெற்ற பக்தர்கள் ஆலய அர்ச்சகர்களையும் நிர்வாகத்தினரையும் பாராட்டியவாறு இல்லம் திரும்பினர். - சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்