தலைமுறை தாண்டியும் வாலி
சிங்கப்பூரில் மு.ஹரிகிருஷ்ணன் தலைமையில் இயங்கி வரும் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பெருமையுடன் நடத்தி வரும் பல நிகழ்வுகளில் ஒன்றுதான் 'தலைமுறை தாண்டியும் வாலி' என்னும் இலக்கியத் தொடர் நிகழ்ச்சியாகும். 1958 இல் தொடங்கிய கவிஞர் வாலியின் பாடல் பயணம், பல தலைமுறைகள் தாண்டியும், இன்றளவும் நம்மிடையே உயிர்ப்புடன் வாழ்ந்து வருகின்றது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்ச்சியினை முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமை ஏற்று வழி நடத்துவார். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு தலைப்பும், அத்தலைப்பை ஒட்டி ஐந்து பாடல்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு பாடலையும் ஒருவர் பாடுவார்; மற்றொருவர் அப்பாடலைப் பற்றிய கருத்துகளை அவையோரிடம் எடுத்துக்கூறிச் சொற்பொழிவாற்றுவார். இந்த மாதத்தின் 'தலைமுறை தாண்டியும் வாலி' தொடர் நிகழ்ச்சி, “நாயக பிம்பம்” என்னும் கருப்பொருளில், ஏப்ரல் 19,சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிண்டா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தோடு இணைந்து பாரதியார் பேச்சாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாரதியார் பேச்சாளர் மன்றத் தலைவர் சுரேஷ் ராஜகோபால் வாழ்த்துரை வழங்கப் பேச்சாளர் அன்பரசன் நாகலிங்கம் நெறியாளராகப் பணியாற்ற நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. முதலில், பாரதியார் பேச்சாளர் மன்றத்தில் 10-ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினர்களாக இருக்கும் பேச்சாளர்கள் இராமன் குருந்தலிங்கம் நிர்மல், ராஜேஷ் தர்மலிங்கம், பாரதிசெல்வன் பரமசிவம் ஆகியோரைக் கௌரவித்துப் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர், மு.ஹரிகிருஷ்ணன், மூவருக்கும் பொன்னாடை போர்த்தி 'நீண்ட கால உறுப்பினர் கேடயம்” வழங்கினார். மன்றத்தின் உறுப்பினரும் பேச்சாளருமான சுந்தரராமன் ஆனந்தன், பேச்சாளர்கள் அமைப்பின் (Toastmasters) உயரிய கல்வி விருதான சிறந்த பேச்சாளர் (DTM) விருதை இரண்டாவது முறையாக பெற்றுள்ளதைப் பாராட்டி அவருக்கும் மு.ஹரிகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர் வாலியின் திரை இசைப் பாடல்கள் ஐந்தை அன்றைய நிகழ்வில் பாடகர்கள் இசையோடு பாடினர். பேச்சாளர்கள் அப்பாடல்களை ஆய்வு செய்து உரையாற்றினர். 1. இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப் பிள்ளை.. (சுறா) 2. நான் ஆணையிட்டால்.. (எங்க வீட்டுப் பிள்ளை) 3. வத்திக்குச்சி பத்திக்காதுடா.. (தீனா) 4. தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா.. (சிலம்பாட்டம்) 5. இவன் வசம் இருந்தது ஏழு வரம்.. (பாபா) பேச்சாளர்களான மோகனபிரியா ராஜேந்திரன், சௌந்தரராஜன் சுரேஷ், சுரேஷ் ராஜகோபால், சுபாஷினி சுரேஷ், தமிழ்ச்செல்வன் இளங்கோவன், அன்பரசன் நாகலிங்கம், அகிலாண்டேஸ்வரி அன்பரசன் ஆகியோர் பாடகர்களாகவும் புதிய பரிமாணம் எடுத்து மிக இனிமையாகப் பாடிப் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். ஒவ்வொரு பாடலையும் தொடர்ந்து, பேச்சாளர்கள் மாமன்னன் அருணாச்சலம், வேல்பாண்டியன் கோபிராஜ், கோவிந்தராஜு சுமதி, வசந்த் குமார் ஆறுமுகம், சந்தோஷ் பாபு நாகரத்தினம் அனைவரும் தத்தம் பாடல்களைப் பற்றிய கருத்துகளையும், அப்பாடல் குறித்த தங்கள் பார்வையையும் மிகச் சிறப்பாகப்பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன் ஒவ்வொரு பாடலின் இடையிலும் இறுதியிலும் வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் பெருமைகளையும் அவர்தம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் அப் பாடல்கள் பற்றித் தம்முடைய கருத்துகளையும் தொகுத்து அழகாக உரையாற்றினார். 60-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். இறுதியாக, பேச்சாளர் சுரேஷ் ராஜகோபாலின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவை நாடியது. - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்