உள்ளூர் செய்திகள்

அமெரிக்கத் தமிழ்த்திருவிழா 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA)யின் 38ஆவது ஆண்டுவிழா, குன்றக்குடி அடிகளார், இரா. நல்லகண்ணு ஆகியோரது நூற்றாண்டு விழாவாக, வட கேரொலைனா மாகாணத்தில் உள்ள இராலே நகரின் மாநாட்டுக் கூடத்தில், 2025 ஜூலை 3, 4, 5, 6 ஆகிய நாள்களில் கோலாகலமாகவும் சீரும் சிறப்புமாகவும் வாழ்வியல் திருவிழாவாகவும் இடம் பெற்றது. பன்னாட்டுத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு ஜூலை மூன்றாம் நாள் காலை 8 மணி துவக்கம், பன்னாட்டுத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு இடம் பெற்றது. மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், இந்திய அமெரிக்கத் தூதர் கிருஸ் ஹோட்ஜஸ், தொழில் முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன், செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், தொழில்தலைவர் வேலுச்சாமி சங்கரலிங்கம், ஆதித்யா ராம், நெப்போலியன் துரைசாமி, ஆகியோருடன் ஏராளமான தொழிலறிஞர்களும் தொழில் முனைவோரும் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர். மாலை 6 மணி வரையிலும் பல்வேறு அமர்வுகளும், சிறப்புரைகளும் இடம் பெற்றன. பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி பாண்டி, மாநாட்டின் துணைத் தலைவர்கள் பி.டி,சதீஷ்குமார், மகேந்திரன் சுந்தர்ராஜ், கோபி ராமசாமி ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முதலாவது, பன்னாட்டுத் திரைப்பட விழாவும் மாநாட்டு வளாகத்தில், ஜூலை 3ஆம் நாள் மாலையில் இடம் பெற்றது. மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் தலைமையிலான நடுவர்குழாம், சிறந்த படத் தயாரிப்பாளராக வாழை படத்தயாரிப்பாளர் மாரி செல்வராஜ், சிறந்த இயக்குநராக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த தொழில்நுட்பத்துக்காக பொன்னியின் செல்வன் படத்துக்கான ரவி வர்மன், சிறந்த அமெரிக்க தமிழ்ப்படத்துக்காக ஊழியின் காயத்ரி ரஞ்சித், சிறந்த குறும்படத்துக்காக ஓடம் படத்துக்கான விவேக் இளங்கோவன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. விழாவில், இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி, ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், நடிகர் நெப்போலியன், இசையமைப்பாளர் டி இமான், பேராசிரியர்கள் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன், ராம் மகாலிங்கம், தயாரிப்பாளர் ஆதித்யாராம், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்பட விழாவினை அடுத்து, பேரவையின் புரவலர்கள், கொடையாளர்களுக்கான நட்சத்திர மாலை நேர நிகழ்வு இடம் பெற்றது. நிகழ்வில் நகைச்சுவைத் தொடர்களைப் படைத்துவரும் “பரிதாபங்கள் புகழ்” கோபி, சுதாகர், சின்னதிரைக் கலைஞர்கள் செளந்தர்யா, ஃபரினா, விஜய் விஷ்ணு, பேச்சுக்கலைஞர் முத்துக்குமரன், மாயக்கலை வித்தகர் எஸ்ஏசி வசந்த் முதலானோர் சிறப்புத் தோற்றம் அளித்தனர். கலை, இலக்கிய, வாழ்வியல் திருவிழா ஜூலை 4ஆம் நாள் காலையில், 8 மணிக்கு மங்கல இசையுடன் அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவின் கலை, இலக்கிய, வாழ்வியல் திருவிழா, இராலே மாநாட்டுக்கூடத்தில் எழுச்சியுடன் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், கேரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர் பாரதி பாண்டி, விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி முருகேசன், மீனா இளஞ்செயன் ஆகியோர் மாநாட்டினைத் துவக்கி வைத்தும் வரவேற்றும் பேசினர். தொடர்ந்து, பல்வேறு தமிழ்ச்சங்கத்தினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவற்றுக்கிடையே தமிழிசை அறிஞர்கள் வி.குமார், அரிமளம் பத்மநாபன், ஆ.ஷைலா ஹெலின் ஆகியோரது தமிழிசை நிகழ்ச்சி, கவிஞர் சினேகன் அவர்களது தலைமையில் ”யாதுமாகி நின்றாய் தமிழே” எனும் தலைப்பில் கவியரங்கம், மரபுக்கலைகள் குழுவின் சார்பில் மாபெரும் தமிழ்க்கலைகள் நிகழ்ச்சி, நூற்றாண்டு விழா நாயகர்களும் தமிழும் எனும் தலைப்பிலான புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களது சிறப்புரை, மதுரை ஆர் முரளிதரன் குழுவினரின் “மருதிருவர்” நாட்டிய நாடக நிகழ்ச்சி முதலானவை இடம் பெற்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் விஸ்வநாதன், சூழலியல் செயற்பாட்டாளர் முனைவர் செளமியா அன்புமணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எழுத்தாளர் மன்னர் மன்னன் உட்படப் பலரின் உரைகளும் இடம் பெற்றன. மின்னசோட்டா தமிழ்ச்சங்கம் வழங்கிய, “பழந்தமிழ்க்கலைகளும் செவ்வியலே” எனும் நாடகம், பொருள் பொதிந்ததாகவும் தமிழ்க்கலைகளின் ஒவ்வோர் அடிப்படைக் கூறுகளையும் விவரிக்கும்படியாகவும் அமைந்திருந்தது. இலக்கிய வினாடி வினாவின் நடுவர்களாக இருந்த எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், ஸ்டாலின் ராஜாங்கம், பழமைபேசி ஆகியோர், இலக்கிய வினாடி வினா குறித்தும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் நாடகம் குறித்தும் பாராட்டிப் பேசினர். ஜூலை 4ஆம் நாள், விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன. போட்டிகளை, முன்னாள் அமைச்சர் நெப்போலியன் துவக்கி வைத்திட, விளையாட்டுத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் அன்பு மதன்குமார் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். போட்டிகளில் வென்றவர்களுக்குப் போட்டிகளின் முடிவில் பரிசளிக்கப்பட்டன. ஐந்து பிரிவுகளில் 100+ போட்டிகள் ஜூலை 3, 4 ஆகிய நாள்களில், மாணவர்கள், இளையோருக்கான நாடளாவிய கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், வட அமெரிக்க வாகை சூடி எனும் பெயரில் மாபெரும் அளவில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில், அறிவியல்தேனீ, குறள்தேனீ, தமிழ்த்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ என ஐந்து பிரிவுகளில், இயல், இசை, நாடகம், நாட்டியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து நூற்றுக்கும் கூடுதலான போட்டிகள் இடம் பெற்றன. 1500 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்குக் கோப்பைகளும், இறுதிப்போட்டிகளில் கலந்து கொண்டோருக்குப் பதக்கங்களும், பங்கேற்றோர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பொருளாளர் வள்ளிக்கண்ணன் மருதப்பன், தேவையான பரிசில்களைக் கொள்வனவு செய்து கொடுப்பதில் பெரும்பங்காற்றினார். பேரவைப் பொதுக்குழு ஜூலை 5ஆம் நாள், காலை 8 மணிக்கு பேரவைப் பொதுக்குழுக் கூட்டமும், காலை 9 மணிக்கு கலை, இலக்கிய நிகழ்ச்சிகளும் துவங்கின. முதன்மை அரங்கில் வைத்து, வட அமெரிக்க வாகை சூடி போட்டியாளர்கள் அனைவரும் பதக்கம் அணிவிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதளித்தல், ஊடகவியலாளர் நிர்மலா பெரியசாமி தலைமையில் விவாதமேடை, நாஞ்சில் பீற்றர் அவர்கள் வழங்கிய இலக்கிய வினாடி வினா, உலகத்தமிழர் நேரம், தமிழ்ச்சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சி முதலானவற்றோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஜூலை 4, 5 ஆகிய நாள்களில், இணையமர்வுகளாக, 45க்கும் கூடுதலான நிகழ்ச்சிகள், கலை, இலக்கியம், மருத்துவம், சட்டம், வாழ்வியல் தொடர்புடையதாக அமைந்திருந்தன. பேரவையின் இலக்கியக்குழுக் கூட்டங்களில், எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், சு.வேணுகோபால், புலவர் செந்தலை கவுதமன், இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி, ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், ஓவியர் மருது டிராஸ்கி முதலானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர்நல வாரியத்தின் கூட்டம் அதன் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தலைமையில் இடம் பெற்றது. பேரவையின் TamilER குழுவின் கூட்டம், அன்புடை நெஞ்சம் குழுவின் மணமாலை நிகழ்ச்சி, சட்டம் குடிவரவுக் குழுவின் சட்ட அறிஞர்கள் கூட்டம் முதலானவற்றோடு, பல்வேறு அமைப்பினர் நடத்திய கூட்டங்கள், முன்னாள் மாணவர் கூடல் முதலானவையும் இடம் பெற்றன. இந்தியத் தூதரகத்தின் சார்பாக, விசா, கடவுச்சீட்டு, குடிபுகல், குடிவரவு தொடர்புடைய பணிமுகாமும் மாநாட்டுக்கூட வளாகத்தில் இடம் பெற்றமை பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. இந்திய அமைச்சர் ஜக் மோகன் வாழ்த்துரை வழங்கி இருந்தார். இந்தியத் தூதர் வினய் குவெத்ரா பேரவையின் சிறப்பு குறித்துப் பேச, அவருக்கும் சிறப்பளிக்கப்பட்டது. விழாவுக்குச் சிறப்பு விருந்திநராக வருகை புரிந்திருந்த மலேசிய நாட்டின் முன்னாள் துணைப்பிரதமர் சரவணன் முருகன், சசிகாந்த் செந்தில், அமெரிக்கத் தமிழ் ஆளுமை முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன், வைலி நிக்கல், காங்கிரஸ் வுமன் டெப்ரா ராஸ், ஆளுமைகள் கஜன், ஸ்ரீநேசன், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வாழ்த்துரைக்க, அவர்களுக்குத் திருவிழாக்குழுவினர் சிறப்புச் செய்தனர். திருவிழா நிமித்தம் வட கேரொலைனா ஆளுநர் ஜோஷ் ஸ்டெயினின் தமிழ்மரபுத் திங்கள் சாற்றாணை வெளியிடப்பட்டு, அவர் வழங்கி வாழ்த்துரைக் காணொலியும் விழா அரங்கில் காண்பிக்கப்பட்டது. நூற்றாண்டு விழா நாயகர்கள் குன்றக்குடி அடிகளார், இரா. நல்லகண்ணு ஆகியோரது ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டு, விழா மலரினை அதன் ஆசிரியர் தேவகி செல்வன் வெளியிட்டுப் பேசினார். ஜூலை 5ஆம் நாள் இரவு, இசையமைப்பாளர் டி இமானின், 'கச்சேரி ஆரம்பம்' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேறியது. அரங்கம் நிரம்பிய மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது. இலக்கியக்குழுவின் சிறப்புக் கூட்டம் ஜூலை 6ஆம் நாள் காலையில் இடம் பெற்ற, இலக்கியக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய விருந்திநர்கள் எல்லாருமே, இடம் பெற்ற திருவிழாவினைப் பெருமைபட பாராட்டியப் பேசியதோடு, பல்லுயிர் ஓம்புதல் என்பதற்கொப்ப பன்மைத்துவம் போற்றுவதற்கான மாபெரும் விழாவாக இருந்ததெனவும், தமிழ்க்கலைகளான மரபு நாடகம், காவடியாட்டம், சிலம்பாட்டம், களரி, பறை, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், கும்மி, ஒயில் என யாவும் இடம் பெற்ற தமிழ்விழா, தீரத்தீர சுவையான உணவு வழங்கி விருந்தோம்பலைச் சிறப்பாக்கிக் காட்டிய விழாயெனவும் பாராட்டினர். விழாவுக்காக உழைத்தவர்களுக்கும் புரவலர்களுக்கும் கொடையாளர்களுக்கும் பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி முருகேசன், மீனா இளஞ்செயன், பாரதி பாண்டி நன்றி நவின்றனர். -- தினமலர் வாசகர் பழமைபேசி, pro@fetna.org, தலைவர், தகவல்தொடர்புக்குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்