உள்ளூர் செய்திகள்

முத்திரை பதித்த சித்திரைத் திருவிழா- சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில்!

'சித்திரையே வா! நம் வாழ்வில்,நல் முத்திரை பதிக்க வா!” என்று சொல்லும் மரபு நம் தமிழ் மரபு!பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு ஆகும். சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதம் ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது. அம்மாதமே சித்திரை! வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும். ஆனால் நம் தமிழ்ச் சங்கக் கொண்டாட்டத்தில் கசப்பிற்கு இடமே இல்லை! குதூகலம் தான்! எப்படி எனக் கேட்கிறீர்களா? ஏப்ரல் 20 அன்று நம் சங்கத்தில் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடல், நாடகம், இசை என அமர்க்களப்படுத்தி விட்டார்களே, அப்போ குதூகலம் தானே!வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 37 ஆவது தமிழ் விழாவினை இவ்வருடம் நம் சங்கம் எடுத்து நடத்தவிருப்பதால் பேரவையின் தலைவர் பாலா சுவாமிநாதன், பேரவையின் செயலாளர் கிங்ஸ்லி நம் விழாவிற்கு வருகை தந்திருந்தனர். காலையில் தொடங்கிய விழா இரவு எட்டு மணிவரை நடந்தது, மக்கள் சிறிது அசராமல் இருந்து பார்த்து மகிழ்ந்தது பாராட்டத்தக்கது! அரங்கம், வாயில் தோரணங்களுடன், வண்ணமயமான அலங்காரங்களுடனும் அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது.பிஞ்சுக் கால்களில் சலங்கை கட்டி நடனங்கள், குட்டீஸ் ஆடிய மேற்கத்திய நடனங்கள், கிராமியக் கலைகள், பெரியவர்களின் நாட்டியம், ஆண்-பெண் அணிவகுப்பு, இயல்-இசை-நடன நாட்டியம், இசைக்கருவிகளின் சங்கமம், திருவிளையாடல், எல்லா இசைக்கும் முன்னோடியாக பறை இசை கொடுத்த இன்ப அதிர்வுகள், விஜயகாந்துக்கு நினைவேந்தல் நாடகம் மூலமும், ஆடல்=பாடல்கள் மூலமும் அளித்தது, மல்லிகை மலர் ஏழாம் ஆண்டின் பதிப்பு வெளியீடு, சுதந்திரப் போராட்டச் சித்தரிப்பு நடனம், இன்றிலிருந்து அன்று வரையிலான போர் மற்றும் தற்காப்புக் கலைகள், விருந்தினர்களின் கௌரவிப்பு என அரங்கம் அதிர அமர்க்களமாய் நடந்தேறியது இவ்விழா! சிறப்பான சைவம் மற்றும் அசைவ உணவுகள் மதியம் வழங்கப்பட்டது, நடுநடுவே காபி, தேநீர், கரும்பு ஜூஸ், பக்கோடா என சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. புகைப்படக்கலைஞர்கள் அழகழகாய் மக்களை படம் எடுத்தனர். இளைஞர் அணியினர் நுழைவாயிலில் இருந்து அரங்கம் வரை பெருமளவு உதவிகள் புரிந்தும் அட்டகாசமான நடனங்கள் தந்தும் மகிழ்வித்தனர். இவ்விழாவிற்கு ஆஸ்டின் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் பல.ஜூலை 4,5, மற்றும் 6 தேதிகளில் நடக்கப்போகும் பேரவை தமிழ் விழாவிற்கு அழைப்பு விடுத்தனர் சங்க உறுப்பினர்கள். மீண்டும் பெரிய விழாவில் சந்திப்போமென விடைபெற்றோம் அனைவரும்! இவ்வாறாக சித்திரை விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்