ரீ-மிக்ஸ் ஆகும் ‛‛பாடாத பாட்டெல்லாம்....'' பாடல்
ADDED : 1419 days ago
பழைய ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்வது சமீபகாலமாக குறைந்திருந்த நிலையில் தற்போது டிக்கிலோனா படத்தில் கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்திலிருந்து பேர் வச்சாலும் என்கிற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தனர். அந்த பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கும் ருத்ரன் படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடல் தற்போது படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நடனம் வடிவமைத்துள்ளார்.
கடந்த 60 வருடங்களுக்கு முன்பு வெளியான வீரத்திருமகன் என்கிற படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்கிற பாடலைத்தான் இந்த படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளனர். இதில் என்ன சவால் என்றால் அந்த படத்தில் நாயகன் ஆனந்தன் இந்த பாடலை ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே தான் பாடுவார். இந்த பாடலுக்கு நடன அசைவுகள் என்பதே பெரிதாக எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் ராகவா லாரன்ஸை வைத்து வித்தியாசமான நடன அசைவுகளுடன் ஆட வைத்துள்ளாராம் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எம்ஜிஆரின் ‛ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில்....' என்ற பாடலை தனது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ரீ-மேக் செய்திருந்தார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.